Sri Kottaiamman Thuthi இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ கோட்டையம்மன் துதி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

அகரமாய் அகிலமாய் அனைத்துலக உயிருமாய்

ஆன என் தேவதேவி!

அவனியில் பணிந்தவர் அகிலத்தை ஆளுவார்

அதுஉன் தேவ நீதி!

தகரமாய் இருந்தஎனைத் தங்கமாய் மாற்றினாய்

தரணியில் புதுமை தாயே!

தவறாத நல்லவழி நாளும் நடந்திட

நீவழி காட்டு தாயே!

சிகரமாய் நீயிருந்து செந்தமிழ் கவிபாடும்

சீர்பெற்ற சின்ன மகளை!

சீராக நீகாத்து சிக்கல்கள் வாராமல்

சிறப்புற வாழ வைப்பாய்!

பகரமொழி வேறில்லை பரிவோடு நீவந்து

பார்த்துநீ காரு மம்மா!

பணிந்த என் இதயத்தில் பாங்குடனே வீற்றிருந்து

காக்கின்ற கோட்டை அம்மா! (ஓம்சக்தி)

சின்னமகள் வாடாமல் சிறுகுறையும் வாராமல்

சிறப்பாக வாழ வைப்பாய்!

சேர்ந்திருக்கும் காலங்கள் ஆயிரம் கோடியென

ஆக்கி நீ ஆளவைப்பாய்!

இன்னகுறை இதுவென்று இல்லாமல் எல்லாமே

நல்லதென ஆக்கி வைப்பாய்!

இசைபட வாழ்கின்ற வாழ்வதுவே வாழ்வென்று

வழிமுறை காட்டி வைப்பாய்!

முன்னதொரு காலங்கள் முடியட்டும் முடிவாக

முன்வந்து நீ இருப்பாய்!

முத்தாடும் மார்போடு முழுநிலா முகத்தோடு

முன்வரும் கோட்டை அம்மா!

என்னபிழை செய்திருந்து எடுத்தேனோ இப்பிறவி

எல்லாமே போதும் அம்மா!

எந்திர உலகமதில் என்றுமே என்மனதில்

உறைகின்ற கோட்டை அம்மா! (ஓம்சக்தி)

வெந்நீரு ஊற்றியே வேர்களை வளர்க்கின்ற

வீணர்கள் கால் அடியிலே!

வெந்துநிதம் சாகவோ வேறோடழியவோ

வேடிக்கை நீ பார்ப்பதோ!

கண்ணீர் வடிக்கவோ பிள்ளைமனம் துடிக்கவோ

பொறுத்தது போதும் அம்மா!

காலத்தில் நீவர வாழ்வுமுறை தான்மாற

வாழ்ந்திட வேண்டும் அம்மா!

தண்ணீரும் தழைத்திருக்கும் தளிர்நெஞ்சும் வாழ்ந்துவர

தானருள் புரியுமம்மா!

தரணியிலே உனையன்றித் தாள்பணிய இடமுண்டோ

தாயே நீ காருமம்மா!

பன்னீரும் சந்தனமும் மஞ்சளுடன் குங்குமமும்

மங்களமாய் அணிந்து வந்து

பரிதவிக்கும் மகள்மனதில் மனமகிழ நீயிருந்து

பாரு நீ கோட்டை அம்மா! (ஓம்சக்தி)

பால்தயிர் பஞ்சா அமிர்தமுடன் பழங்களைப்

பாங்குடன் தந்து நின்றோம்!

பன்னீரும் சந்தனம் இளநீரும் மஞ்சளும்

மேடையில் வார்த்து நின்றோம்!

ஆல்அரசு போல்எங்கள் வீடுகள் வளர்ந்திட

அனுதினம் காத்து நின்றோம்!

ஆத்தா உண்பார்வையை ஆசைசைய்த் தேடிநிதம்

ஆடியில் வந்து நின்றோம்!

கால்சிரசு முதலாக கவின்மிகு அலங்காரம்

கண்குளிரக் கண்டு நின்றோம்!

காலத்தில் செய்திருந்த கடும்பாவம் யாவையும்

தாயே அருளும் அம்மா!

தனியான இதயத்தை தடுத்தாண்ட தாயே

தாயே நீ கோட்டை அம்மா! (ஓம்சக்தி)

தொல்லைகள் போயொழிய தொழுகிறேன் நாளுமே

துயரங்கள் போக்கி வைப்பாய்!

தொடர்ந்திங்கு நல்லதே நா ன்செய்ய வேண்டும்

நாடி நீ காத்து நிற்பாய்!

அல்லவைகள் அகலட்டும் நல்லவைகள் நடக்கட்டும்

அன்னையே அருகிருப்பாய்!

அயராத உழைப்பினை அன்னையே நீ யருள

அருகிலே வந்து நிற்பாய்!

எல்லைகளை நீ காக்க எவர்தீங்கும் அண்டாமல்

ஏற்றமுடன் வாழ வேண்டும்!

எவன் துயர் கொடுத்தாலும் எத்தீங்கு செய்தாலும்

எமன் உயிர் எடுக்க வேண்டும்!

பிள்ளைகள் துயர்பட்டு கண்ணீர் வடிக்காமல்

காத்திட வேண்டும் அம்மா!

பிள்ளைகள் இதயத்தில் பிரியமுடன் வீற்றிருக்கும்

தாயே நீ கோட்டை அம்மா! (ஓம்சக்தி)

மேடையிலே அபிசேகம் மேலான திருநாமம்

மெய்யுருக அழுது நிற்போம்!

மென்மேலும் வாழ்வதனை மெருகூட்டச் செய்திருந்தாய்

வேறென்ன தொழுது நிற்போம்!

ஆடையிலே அலங்காரம் அழகான முத்தாரம்

அத்தனையும் பார்த்து நிற்போம்!

ஆசையிலே உன்பெயரை ஆயிரம்தரம் சொல்லி

அகிலத்தை வென்று நிற்போம்!

வாடையிலே நீ வந்து வளமான வாழ்வுதர

வாய்பேச மறந்து நிற்போம்!

வருந்துன்பம் யாவுமே வாராது போகுமே

வார்த்தையினி இல்லை தானே!

கூடையிலே பூசுமந்து பூமாரி பொழிகின்றோம்

புண்ணியங்கள் தாரும் அம்மா!

கனிந்த என் இதயத்தில் கருத்தாக வீற்றிருந்து

காக்கின்ற கோட்டை அம்மா! (ஓம்சக்தி)

முளைப்பாரி நீர்குடித்து முளைத்துத் தழைத்துவர

முன்வரும் கோட்டை அம்மா!

முன்னாலே கரகமதில் முகங்காட்டி நீயிருந்து

மூவுலகைப் பாரு மம்மா!

இளைப்பாற நேரமின்றி இவ்வுலகை ஆளுகிற

இனிதான எங்கள் அம்மா!

இனிதான உன்முகத்தை ஓடிவந்து பார்க்கிறோம்

இனியசுகம் தாருமம்மா!

அழைப்பாலே நீவந்து ஆடுகிற ஆட்டமெலாம்

அகிலமே காணுதம்மா!

அன்னையென அகிலத்தை ஆளுகிற பெண்மையென

பேர்பெற்ற கோட்டை அம்மா!

உழைப்பாலே உயர்ந்திடவே உன்பெயரைப் பகர்ந்திடவே

ஓடிநிதம் வருவோம் அம்மா!

உன்உருவே உயிராக உன்பேச்சே மூச்சாக

உயருவோம் கோட்டை அம்மா! (ஓம்சக்தி)

முறையாகப் பொங்கலினை மும்முறை வாசலிலே

வைத்திங்கு வாழு கின்றோம்!

முன்செய்த வினையெலாம் முழுவதும் அகலுவதை

மனமுருகப் பார்த்து நின்றோம்!

இறையாக உனையடைந்து இகஉலகை வெல்லுவதை

உயர்வாக உணர்ந்து கொண்டோம்!

இல்லாத ஆசையெலாம் இனிமனது எண்ணாமல்

இனிதாக வாழ்ந் திருப்போம்!

குறையாக யாரையும் குறைகூறல் இல்லாமல்

கோவிலாய் ஆகி நிற்போம்!

குன்றாத ஒளியுனை குறைவிலா மணியுனை

நெஞ்சிலே தேக்கி வைப்போம்!

மறையாக மகன்பாடும் மனநிறை கவியிலே

மாதா நீ வந்திருந்து!

மகன்தனது நெஞ்சத்தில் மாறாமல் குடியிருப்பாய்

தாயே நீ கோட்டை அம்மா! (ஓம்சக்தி)

என்னையும் ஆளாக்கி எவரென்று நீகாட்டி

எழுச்சியுற செய்த தேவி!

எப்போதும் என்மனது எத்தீங்கும் எண்ணாமல்

வாழவகை செய்யும் தேவி!

தண்ணையும் நீகாட்டி தரணியிலே வழிகாட்டி

தற்காத்த தேவ தேவி!

தளராத நெஞ்சமுடன் தவறாத பாசமுடன்

தினம்வருவேன் தேவ தேவி!

கண்ணையும் கருத்தையும் கவிதையிலே வைத்திங்கு

கால்பாவி வரணும் தேவி!

காலங்கள் தேசங்கள் கடந்துனைப் பாடுதற்குத்

தமிழ்நீ தரணும் தேவி!

விண்ணையும் மண்ணையும் ஒருசேர ஆளுகிற

வினைகடந்த எங்கள் அம்மா!

வேறுலகம் போனாலும் வெல்லுகிற மனம்தரணும்

தாயே நீ கோட்டை அம்மா! (ஓம்சக்தி)

உருவாரம் வாங்கியே உன்பாதம் வைத்தாலே

உடல்நலம் உள்ளதம்மா!

உயிரோடு உடல் அங்கம் உள்ளபிணி மாறுவதை

உணரலாம் உண்மை அம்மா!

இருவாரம் உருவமுடன் இகஉலகை ரட்சிக்கும்

இறைஉலகம் இங்கு அம்மா!

இல்லாத உருவத்தை மேடையிலே காணலாம்

மேலாக ஊரு அம்மா!

மறுவாரம் முதலாக மறுஆடி வரையுனை

மேடையிலே காணு வோமே!

மாறாத பக்தியுடன் மனதார வணங்குகிற

மாந்தரைப் பாரு மம்மா!

உருவாரத் தாலியை வாங்கிநாம் சாத்தினால்

திருமணம் நடக்கு தம்மா!

உலகத்து அதிசயம் உன்னிடம் உள்ளது

தாயே நீ கோட்டை அம்மா! (ஓம்சக்தி)

கன்னிமுதல் தாய்களும் கருக்கலில் நீராடி

கும்பிடு கரணம் செய்வார்!

கண்டமனம் உருகுமே கண்ணில் நீர் பெருகும்

காணலாம் நேரில் தானே!

எண்ணியிது இத்தனை எனச்சொல்ல முடியாது

அர்ச்சனை நடக்கு தம்மா!

எத்தனை எத்தனை மாவிளக்கு ஜோதியது!

மங்களமாய் இருக்கு தம்மா!

தண்ணி ஒரு குடமென்று தாளாத அபிசேகம்

தளராமல் நடக்கு தம்மா!

தளதளன மஞ்சளது தான்வார்க்க மனமெலாம்

தாங்காது மகிழுதம்மா!

சென்னிமுதல் பாதம்வரை செய்திருக்கும் அலங்காரம்

ஜெகத்தினை ஆளு அம்மா!

செய்கின்ற செயலெலாம் சீராக்கும் தாயே

தாயே நீ கோட்டை அம்மா! (ஓம்சக்தி)

இந்த ஸ்ரீ கோட்டையம்மன் துதி | sri kottaiamman thuthi பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, மாரியம்மன் பாடல்கள், Mariamman Bhakti Padalgal ஸ்ரீ கோட்டையம்மன் துதி ஸ்ரீ கோட்டையம்மன் துதி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment