புண்ணியர் பூதியர் பாடல் வரிகள் (punniyar putiyar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் ஆவூர்ப்பசுபதீச்சுரம் – ஆவூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : ஆவூர்ப்பசுபதீச்சுரம் – ஆவூர்
சுவாமி : பசுபதீஸ்வரர்
அம்பாள் : மங்களாம்பிகை

புண்ணியர் பூதியர்

புண்ணியர் பூதியர் பூதநாதர்
புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்
கண்ணிய ரென்றென்று காதலாளர்
கைதொழு தேத்த இருந்தவூராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி
விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாட லறாதஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1

முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார்
முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்
அத்திய ரென்றென் றடியரேத்தும்
ஐயன் அணங்கொ டிருந்தவூராம்
தொத்திய லும்பொழில் மாடுவண்டு
துதைந்தெங்குந் தூமதுப் பாயக்கோயிற்
பத்திமைப்1 பாடல றாதஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே.

பாடம் : 1 பத்திசை 2

பொங்கி வரும்புனல் சென்னிவைத்தார்
போம்வழி வந்திழி வேற்றமானார்
இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும்
இறையவ ரென்றுமி ருந்தவூராம்
தெங்குயர் சோலைசே ராலைசாலி
திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
பங்கய மங்கை விரும்பும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 3

தேவியோர் கூறின ரேறதேறுஞ்
செலவினர் நல்குர வென்னைநீக்கும்
ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும்
அப்பனா ரங்கே அமர்ந்தவூராம்
பூவிய லும்பொழில் வாசம்வீசப்
புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்
பாவியல் பாடல றாதஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 4

இந்தணை யுஞ்சடை யார்விடையார்
இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்
வந்தணைந் தின்னிசை பாடுவார்பால்
மன்னினர் மன்னி யிருந்தவூராம்
கொந்தணை யுங்குழ லார்விழவிற்
கூட்ட மிடையிடை சேரும்வீதிப்
பந்தணை யும்விர லார்தம்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 5

குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார்
கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார்
உறைபதி யாகுஞ் செறிகொள்மாடம்
சுற்றிய வாசலின் மாதர்விழாச்
சொற்கவி பாடநி தானம்நல்கப்
பற்றிய கையினர் வாழும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 6

நீறுடை யார்நெடு மால்வணங்கும்
நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்
கூறுடை யாருடை கோவணத்தார்
குவலய மேத்தஇ ருந்தவூராம்
தாறுடை வாழையிற் கூழைமந்தி
தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்
பாறிடப் பாய்ந்து பயிலும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 7

வெண்டலை மாலை விரவிப்பூண்ட
மெய்யுடை யார்விறல் ஆரரக்கன்
வண்டமர் பூமுடி செற்றுகந்த
மைந்த ரிடம்வள மோங்கியெங்குங்
கண்டவர்2 சிந்தைக் கருத்தின்மிக்கார்
கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப்
பண்டலர் கொண்டு பயிலும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே.

பாடம் : 2 கண்டலர் 8

மாலும் அயனும் வணங்கிநேட
மற்றவ ருக்கெரி யாகிநீண்ட
சீலம் அறிவரி தாகிநின்ற
செம்மையி னாரவர் சேருமூராம்
கோல விழாவி னரங்கதேறிக்
கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்
பாலென வேமொழிந் தேத்தும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 9

பின்னிய தாழ்சடை யார்பிதற்றும்
பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்
தன்னிய லும்முரை கொள்ளகில்லாச்
சைவ ரிடந்தள வேறுசோலைத்
துன்னிய மாதரும் மைந்தர் தாமுஞ்
சுனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப்
பன்னிய பாடல் பயிலும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 10

எண்டிசை யாரும்வ ணங்கியேத்தும்
எம்பெரு மானை யெழில்கொளாவூர்ப்
பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும்
பசுபதி யீச்சரத் தாதிதன்மேல்
கண்டல்கண் மிண்டிய கானற்காழிக்
கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன
கொண்டினி தாவிசை பாடியாடிக்
கூடு மவர்உடை யார்கள்வானே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment