பித்தாபிறை சூடீபெரு பாடல் வரிகள் (pittapirai cutiperu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவெண்ணெய்நல்லூர் தலம் நடுநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : நடுநாடு
தலம் : திருவெண்ணெய்நல்லூர்பித்தாபிறை சூடீபெரு

பித்தாபிறை சூடீபெரு
மானே அருளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
அத்தாஉனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே. 1

நாயேன்பல நாளும்நினைப்
பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற
லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
ஆயாஉனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே. 2

மன்னேமற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி
ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
அன்னேஉனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே. 3

முடியேன்இனிப் பிறவேன்பெறின்
மூவேன்பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யேஉரைப்
பேனைக்குறிக் கொள்நீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
அடிகேளுனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே. 4

பாதம்பணி வார்கள்பெறும்
பண்டம்மது பணியாய்
ஆதன்பொருள் ஆனேன்அறி
வில்லேன் அருளாளா
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
ஆதீஉனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே 5

தண்ணார்மதி சூடீதழல்
போலும்திரு மேனீ
எண்ணார்புரம் மூன்றும்எரி
உண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
அண்ணாஉனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே 6

ஊனாய்உயிர் ஆனாய்உடல்
ஆனாய்உல கானாய்
வானாய்நிலன் ஆனாய்கடல்
ஆனாய்மலை ஆனாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
ஆனாய்உனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே. 7

ஏற்றார்புரம் மூன்றும்எரி
உண்ணச்சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லித்திரி
வேனோசெக்கர் வானீர்
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
ஆற்றாயுனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே. 8

மழுவாள்வலன் ஏந்தீமறை
ஓதீமங்கை பங்கா
தொழுவார்அவர் துயர்ஆயின
தீர்த்தல்உன தொழிலே
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
அழகாஉனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே. 9

காரூர்புனல் எய்திக்கரை
கல்லித்திரைக் கையால்
பாரூர்புகழ் எய்தித்திகழ்
பன்மாமணி உந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
ஆரூரன்எம் பெருமாற்காள்
அல்லேன்எனல் ஆமே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment