வண்டிரிய விண்டமலர் பாடல் வரிகள் (vantiriya vintamalar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநல்லூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருநல்லூர்
சுவாமி : கல்யாணசுந்தரேஸ்வரர்
அம்பாள் : கல்யாண சுந்தரி
வண்டிரிய விண்டமலர்
வண்டிரிய விண்டமலர் மல்குசடை
தாழவிடை யேறிப்
பண்டெரிகை கொண்டபர மன்பதிய
தென்பரத னயலே
நண்டிரிய நாரையிரை தேரவரை
மேலருவி முத்தந்
தெண்டிரைகள் மோதவிரி போதுகம
ழுந்திருந லூரே. 1
பல்வளரு நாகமரை யார்த்துவரை
மங்கையொரு பாகம்
மல்வளர் புயத்திலணை வித்துமகி
ழும்பரம னிடமாஞ்
சொல்வளரி சைக்கிளவி பாடிமட
வார்நடம தாடச்
செல்வமறை யோர்கள்முறை யேத்தவள
ருந்திருந லூரே. 2
நீடுவரை மேருவில தாகநிகழ்
நாகம்அழ லம்பாற்
கூடலர்கள் மூவெயி லெரித்தகுழ
கன்குலவு சடைமேல்
ஏடுலவு கொன்றைபுனல் நின்றுதிக
ழுந்நிமல னிடமாஞ்
சேடுலவு தாமரைகள் நீடுவய
லார்திருந லூரே. 3
கருகுபுரி மிடறர்கரி காடரெரி
கைஅதனி லேந்தி
அருகுவரு கரியினுரி யதளர்பட
அரவரிடம் வினவில்
முருகுவிரி பொழிலின்மணம் நாறமயி
லாலமர மேறித்
திருகுசின மந்திகனி சிந்தமது
வார்திருந லூரே. 4
பொடிகொள்திரு மார்பர்புரி நூலர்புனல்
பொங்கரவு தங்கும்
முடிகொள்சடை தாழவிடை யேறுமுத
லாளரவ ரிடமாம்
இடிகொள்முழ வோசையெழி லார்செய்தொழி
லாளர்விழ மல்கச்
செடிகொள்வினை யகலமனம் இனியவர்கள்
சேர்திருந லூரே. 5
புற்றரவர் நெற்றியொர்கண் ஒற்றைவிடை
யூர்வரடை யாளஞ்
சுற்றமிருள் பற்றியபல் பூதம்இசை
பாடநசை யாலே
கற்றமறை யுற்றுணர்வர் பற்றலர்கள்
முற்றும்எயில் மாளச்
செற்றவர் இருப்பிடம் நெருக்குபுன
லார்திருந லூரே. 6
பொங்கரவர் அங்கமுடன் மேலணிவர்
ஞாலமிடு பிச்சை
தங்கரவ மாகவுழி தந்துமெய்
துலங்கியவெண் ணீற்றர்
கங்கையர வம்விரவு திங்கள்சடை
யடிகளிடம் வினவிற்
செங்கயல் வதிக்குதிகொ ளும்புனல
தார்திருந லூரே. 7
ஏறுபுகழ் பெற்றதென் இலங்கையவர்
கோனையரு வரையிற்
சீறியவ னுக்கருளும் எங்கள்சிவ
லோகனிட மாகுங்
கூறும்அடி யார்களிசை பாடிவலம்
வந்தயரும் அருவிச்
சேறுகம ரானவழி யத்திகழ்த
ருந்திருந லூரே. 8
மாலுமலர் மேலயனும் நேடியறி
யாமையெரி யாய
கோலமுடை யானுணர்வு கோதில்புக
ழானிடம தாகும்
நாலுமறை யங்கமுத லாறுமெரி
மூன்றுதழ லோம்புஞ்
சீலமுடை யார்கள்நெடு மாடம்வள
ருந்திருந லூரே. 9
கீறுமுடை கோவணமி லாமையிலொ
லோவியத வத்தர்
பாறுமுடன் மூடுதுவ ராடையர்கள்
வேடமவை பாரேல்
ஏறுமட வாளொடினி தேறிமுனி
ருந்தவிட மென்பர்
தேறுமன வாரமுடை யார்குடிசெ
யுந்திருந லூரே. 10
திரைகளிரு கரையும்வரு பொன்னிநில
வுந்திருந லூர்மேல்
பரசுதரு பாணியை நலந்திகழ்செய்
தோணிபுர நாதன்
உரைசெய்தமிழ் ஞானசம் பந்தனிசை
மாலைமொழி வார்போய்
விரைசெய்மலர் தூவவிதி பேணுகதி
பேறுபெறு வாரே.
திருச்சிற்றம்பலம்