தில்லைச் சிற்றம்பலமுஞ் பாடல் வரிகள் (tillaic cirrampalamun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் க்ஷேத்திரக்கோவை தலம் பொதுப் பதிகங்கள் நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : பொதுப் பதிகங்கள்
தலம் : க்ஷேத்திரக்கோவைதில்லைச் சிற்றம்பலமுஞ்
தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி
தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்
வீரட்டங் கோகரணங் கோடி காவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி
முழையூர் பழையாறை சத்தி முற்றங்
கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங்
கயிலாய நாதனையே காண லாமே. 1
ஆரூர்மூ லத்தானம் ஆனைக் காவும்
ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேரா வூரும்
பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கைவீ ரட்டா னமுங்
கோட்டூர் குடமூக்கு கோழம் பமுங்
காரார் கழுக்குன்றுங் கானப் பேருங்
கயிலாய நாதனையே காண லாமே. 2
இடைமரு தீங்கோ யிராமேச் சுரம்
இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர்
சடைமுடி சாலைக் குடிதக் களூர்
தலையாலங் காடு தலைச்சங் காடு
கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்
கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு
கடைமுடி கானூர் கடம்பந் துறை
கயிலாய நாதனையே காண லாமே. 3
எச்சில் இளமர் ஏம நல்லூர்
இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி
அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர்
ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறை
கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக்
கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி
கச்சிப் பலதளியும் ஏகம் பத்துங்
கயிலாய நாதனையே காண லாமே. 4
கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர்
கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவும்
நின்றியூர் நீடூர் நியம நல்லூர்
இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்
எறும்பியூர் ஏராரும் ஏம கூடங்
கடம்பை யிளங்கோயில் தன்னி லுள்ளுங்
கயிலாய நாதனையே காண லாமே. 5
மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்
வக்கரை மந்தாரம் வார ணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி
விளமர் விராடபுரம் வேட்க ளத்தும்
பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங்
கண்ணை களர்க்காறை கழிப்பா லையுங்
கயிலாய நாதனையே காண லாமே. 6
வீழி மிழலைவெண் காடு வேங்கூர்
வேதி குடிவிசய மங்கை வியலூர்
ஆழியகத் தியான்பள்ளி அண்ணா மலை
ஆலங் காடும் அரதைப் பெரும்
பாழி பழனம்பனந் தாள்பா தாளம்
பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண்
காழி கடல்நாகைக் காரோ ணத்துங்
கயிலாய நாதனையே காண லாமே. 7
உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உருத்திர கோடி மறைக்காட் டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்
வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா
வேதிச்சுரம் விவீச்சுரம் வொற்றி யூருங்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங்
கயிலாய நாதனையே காண லாமே. 8
திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி
தேவூர் சிரபுரஞ்சிற் றேமஞ் சேறை
கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழுமதிகை வீரட் டானம்
ஐயா றசோகந்தி ஆமாத் தூருங்
கண்டியூர் வீரட்டங் கருகா வூருங்
கயிலாய நாதனையே காண லாமே. 9
நறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறு
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை
தோணிபுரந் துருத்தி சோமீச் சரம்
உறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர்
ஓமாம் புலியூரோர் ஏட கத்துங்
கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங்
கயிலாய நாதனையே காண லாமே. 10
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்
புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்
வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலமலிநெய்த் தானத்தோ டெத்தா னத்தும்
நிலவுபெருங் கோயில்பல கண்டாற் றொண்டீர்
கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்ற
கயிலாய நாதனையே காண லாமே. 11
திருச்சிற்றம்பலம்