குசையும் அங்கையிற் பாடல் வரிகள் (kucaiyum ankaiyir) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவிசயமங்கை தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவிசயமங்கை
சுவாமி : விஜயநாதேஸ்வரர்
அம்பாள் : மங்கைநாயகி
குசையும் அங்கையிற்
குசையும் அங்கையிற்
கோசமுங் கொண்டவவ்
வசையின் மங்கல
வாசகர் வாழ்த்தவே
இசைய மங்கையுந்
தானுமொன் றாயினான்
விசைய மங்கையுள்
வேதியன் காண்மினே. 1
ஆதி நாதன்
அடல்விடை மேலமர்
பூத நாதன்
புலியத ளாடையன்
வேத நாதன்
விசயமங் கையுளான்
பாத மோதவல்
லார்க்கில்லை பாவமே. 2
கொள்ளி டக்கரைக்
கோவந்த புத்தூரில்
வெள்வி டைக்கருள்
செய்விச யமங்கை
உள்ளி டத்துறை
கின்ற உருத்திரன்
கிள்ளி டத்தலை
யற்ற தயனுக்கே. 3
திசையு மெங்குங்
குலுங்கத் திரிபுரம்
அசைய வங்கெய்திட்
டாரழ லூட்டினான்
விசைய மங்கை
விருத்தன் புறத்தடி
விசையின் மங்கி
விழுந்தனன் காலனே. 4
பொள்ள லாக்கை
அகத்திலைம் பூதங்கள்
கள்ள மாக்கிக்
கலக்கிய காரிருள்
விள்ள லாக்கி
விசயமங் கைப்பிரான்
உள்ள நோக்கியெ
னுள்ளுள் உறையுமே. 5
கொல்லை யேற்றுக்
கொடியொடு பொன்மலை
வில்லை யேற்றுடை
யான்விச யமங்கைச்
செல்வ போற்றியென்
பாருக்குத் தென்றிசை
எல்லை யேற்றலும்
இன்சொலு மாகுமே. 6
கண்பல் உக்கக்
கபாலம்அங் கைக்கொண்டு
உண்ப லிக்குழல்
உத்தம னுள்ளொளி
வெண்பி றைக்கண்ணி
யான்விச யமங்கை
நண்ப னைத்தொழப்
பெற்றது நன்மையே. 7
பாண்டு வின்மகன்
பார்த்தன் பணிசெய்து
வேண்டு நல்வரங்
கொள்விச யமங்கை
ஆண்ட வன்னடி
யேநினைந் தாசையாற்
காண்ட லேகருத்
தாகி யிருப்பனே. 8
வந்து கேண்மின்
மயல்தீர் மனிதர்காள்
வெந்த நீற்றன்
விசயமங் கைப்பிரான்
சிந்தை யால்நினை
வார்களைச் சிக்கெனப்
பந்து வாக்கி
உயக்கொளுங் காண்மினே. 9
இலங்கை வேந்தன்
இருபது தோளிற
விலங்கள் சேர்விர
லான்விச யமங்கை
வலஞ்செய் வார்களும்
வாழ்த்திசைப் பார்களும்
நலஞ்செய் வாரவர்
நன்னெறி நாடியே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்