கடவுளைக் கடலுள் பாடல் வரிகள் (katavulaik katalul) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநெல்வாயில்அரத்துறை – திருவட்டதுறை தலம் நடுநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : நடுநாடு
தலம் : திருநெல்வாயில்அரத்துறை – திருவட்டதுறை
சுவாமி : அரத்துறைநாதர்
அம்பாள் : ஆனந்த நாயகி

கடவுளைக் கடலுள்

கடவுளைக் கடலுள்
எழு நஞ்சுண்ட
உடலு ளானையொப்
பாரி* லாதவெம்
அடலு ளானை
அரத்துறை மேவிய
சுடரு ளானைக்கண்
டீர்நாந் தொழுவதே.

(^ ஒப்பாரி இலாத என்றும் பாடம்) 1

கரும்பொப் பானைக்
கரும்பினிற் கட்டியை
விரும்பொப் பானைவிண்
ணோரு மறிகிலா
அரும்பொப் பானை
அரத்துறை மேவிய
சுரும்பொப் பானைக்கண்
டீர்நாந் தொழுவதே. 2

ஏறொப் பானையெல்
லாவுயிர்க் கும்மிறை
வேறொப் பானைவிண்
ணோரு மறிகிலா
ஆறொப் பானை
அரத்துறை மேவிய
ஊறொப் பானைக்கண்
டீர்நாந் தொழுவதே. 3

பரப்பொப் பானைப்
பகலிருள் நன்னிலா
இரப்பொப் பானை
இளமதி சூடிய
அரப்பொப் பானை
அரத்துறை மேவிய
சுரப்பொப் பானைக்கண்
டீர்நாந் தொழுவதே. 4

நெய்யொப் பானைநெய்
யிற்சுடர் போல்வதோர்
மெய்யொப் பானைவிண்
ணோரு மறிகிலார்
ஐயொப் பானை
அரத்துறை மேவிய
கையொப் பானைக்கண்
டீர்நாந் தொழுவதே. 5

நிதியொப் பானை
நிதியிற் கிழவனை
விதியொப் பானைவிண்
ணோரு மறிகிலார்
அதியொப் பானை
அரத்துறை மேவிய
கதியொப் பானைக்கண்
டீர்நாந் தொழுவதே. 6

புனலொப் பானைப்
பொருந்தலர் தம்மையே
மினலொப் பானைவிண்
ணோரு மறிகிலார்
அனலொப் பானை
அரத்துறை மேவிய
கனலொப் பானைக்கண்
டீர்நாந் தொழுவதே. 7

பொன்னொப் பானைப்பொன்
னிற்சுடர் போல்வதோர்
மின்னொப் பானைவிண்
ணோரு மறிகிலார்
அன்னொப் பானை
அரத்துறை மேவிய
தன்னொப் பானைக்கண்
டீர்நாந் தொழுவதே. 8

காழி யானைக்
கனவிடை யூருமெய்
வாழி யானைவல்
லோருமென் றின்னவர்
ஆழி யான்பிர
மற்கும் அரத்துறை
ஊழி யானைக்கண்
டீர்நாந் தொழுவதே. 9

கலையொப் பானைக்கற்
றார்க்கோ ரமுதினை
மலையொப் பானை
மணிமுடி யூன்றிய
அலையொப் பானை
அரத்துறை மேவிய
நிலையொப் பானைக்கண்
டீர்நாந் தொழுவதே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment