திருவுமெய்ப் பொருளுஞ் பாடல் வரிகள் (tiruvumeyp porulun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் வடதிருமுல்லைவாயில் – திருமுல்லைவாயில் தலம் தொண்டைநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : தொண்டைநாடு
தலம் : வடதிருமுல்லைவாயில் – திருமுல்லைவாயில்திருவுமெய்ப் பொருளுஞ்
திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்
சீருடைக் கழல்கள்என் றெண்ணி
ஒருவரை மதியா துறாமைகள் செய்தும்
ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. 1
கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. 2
விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
வெருவிட வேழமன் றுரித்தாய்
செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் தேவர்தம் மரசே
தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய்
சங்கிலிக் காஎன்கண் கொண்ட
பண்பநின் னடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. 3
பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்
பொறிவரி வண்டிசை பாட
அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்
அலவன்வந் துலவிட அள்ளல்
செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்
பாசுப தாபரஞ் சுடரே. 4
சந்தன வேருங் காரகிற் குறடும்
தண்மயிற் பீலியுங் கரியின்
தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
வந்திழி பாலி வடகரை முல்லை
வயிலாய் மாசிலா மணியே
பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. 5
மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்
வள்ளலே கள்ளமே பேசிக்
குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
கொள்கையால் மிகைபல செய்தேன்
செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
திருமுல்லை வாயிலாய் அடியேன்
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. 6
மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
வார்குழல் மாமயிற் சாயல்
அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
அருநடம் ஆடல் அறாத
திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற்
செல்வனே எல்லியும் பகலும்
பணியது செய்வேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. 7
நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்
நாயினேன் தன்னையாட் கொண்ட
சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந்
தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்
தேடியான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. 8
மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்
மாணிதன் மேல்மதி யாதே
கட்டுவான் வந்த காலனை மாளக்
காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற்
செல்வனே செழுமறை பகர்ந்த
பட்டனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. 9
சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையாற் கட்டிட்
டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்
டருளிய இறைவனே என்றும்
நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில்
நாதனே நரைவிடை ஏறீ
பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. 10
விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
வெருவிட நீண்டஎம் மானைத்
திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்
செல்வனை நாவலா ரூரன்
உரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும்
உள்குளிர்ந் தேத்த வல்லார்கள்
நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி
நண்ணுவர் விண்ணவர்க் கரசே. 11
திருச்சிற்றம்பலம்
Kandha Sashti Kavasam Lyrics கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் (Kandha Sashti Kavasam Song lyrics in…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…
Ekadantaya Vakratundaya Lyrics in Tamil ஏகதந்தாய வக்ரதுண்டாய பாடல் வரிகள் (Ekadantaya Vakratundaya Lyrics) பாடல் வரிகள் கணநாயகய…
108 Vinayakar potri in Tamil 108 விநாயகர் போற்றி (108 Vinayakar potri lyrics in tamil) இந்த…
Vinayaka Ashtothram Lyrics in Tamil ஸ்ரீ விநாயக அஷ்டோத்தர ச'த நாமாவளி - Vinayaka ashtothram tamil ஓம்…
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…