Categories: Sivan Songs

| sokkanatha venba

Sokkanatha Venba Lyrics in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சொக்கநாத வெண்பா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

புண்டரிகத் தாளைப் புகழ்ந்து புகழ்ந்துதினம்

அண்டமரர் கொண்டிறைஞ்சும் ஆதியே – தொண்டுபடும்

நாயேனை யாண்டுகந்து நன்னெறிகள் காட்டுவித்த

தாயே நீ சொக்கநா தா. 1

மிண்டுசெய்யு மும்மலமு மிக்கவினை நல்குரவும்

பண்டுபோ லென்னைவந்து பற்றாமல் – கொண்டுபோய்

நின்னருளிற் சேர்க்க நினைகண்டாய் தென்மதுரை

மன்னவனே சொக்கநா தா 2

கூரியவெம் பாசக் குளிர்நீங்க நின்னருளாஞ்

சூரியனெப் போதுவந்து தோன்றுமோ – பாரறியக்

கொட்டமிட்ட சண்டனுயிர் கொள்ளையிட்ட மாமதுரை

யிட்டமிட்டச் சொக்கநா தா. 3

உனக்குப் பணிசெய்ய உன்றனையெந் நாளும்

நினைக்க வரமெனக்கு நீதா – மனக்கவலை

நீக்குகின்ற தென்மதுரை நின்மலனே எவ்வுலகும்

ஆக்குகின்ற சொக்கநா தா. 4

சன்மார்க்கஞ் செய்யுந் தபோதனரோ டென்னையுநீ

நன்மார்க்கஞ் செய்யவருள் நாடுமோ – துன்மார்க்கஞ்

செய்கின்ற முப்புரத்தைத் தீயாக்கித் தென்மதுரை

வைகின்ற சொக்கநா தா. 5

வந்தபொருளாசை மண்ணாசை பெண்ணாசை

இந்தவகை யாசையெல்லா மென்மனத்தின் – வந்துமினிச்

சேராமல் வாழ நினைகண்டாய் தென்கூடல்

பேராத சொக்கநா தா. 6

தண்டுவரும் குண்டுவரும் தானைவரும் ஆனைவரும்

வண்டில்மரு மாடுவரு மாடுவரும் – மிண்டிப்

பெருங்கோட்டை யுஞ்சுமையும் பின்புவருங் கூடல்

அருங்கோட்டை வாசலிற்சென் றால். 7

எல்லாம் வல்லசித்தர் என்றக்கால் என்னுடைய

பொல்லாக் கருத்தகற்றப் போகாதே – வல்லாடும்

பொங்கரா வேணிப் புனிதா மதுரைநகர்ச்

சங்கரா சொக்கநா தா. 8

பேசாநு பூதிபிறக்க என துளத்தில்

ஆசா பாசாசை அகற்றுவாய் – தேசாருஞ்

சிற்பரா நந்தா திருவால வாயுறையும்

தற்பரா சொக்கநா தா. 9

இறந்தும் பிறந்தும் இளைத்தேன் இனியான்

மறந்தும் பிறவா வரம்தா – சிறந்தபுகழ்

ஞாலவா யாமுடிக்கு நாட்டுஞ்சூ ளாமணியாம்

ஆலவாய்ச் சொக்கநா தா. 10

உலக வெறுப்பும் உடல்வெறுப்பும் உள்ளத்

திலகு மலவெறுப்பும் எல்லாம் – அலகிறந்த

நந்தாக இன்பசுக நாட்டின் விருப்பமுறத்

தந்தாள்வை சொக்கநா தா. 11

எப்போது மும்மலம் விட்டேறுவேன் பூரணமாய்

எப்போதுன் இன்பசுகத் தெய்துவேன் – எப்போதும்

நித்தியா சுத்தா நிராமயா சொல்தவறாச்

சத்தியா சொக்கநா தா. 12

காயமோ காலன் கருத்தோ மகாகாலன்

ஞாயமோ சற்றும் நடப்பதில்லை – பேயனேன்

மாளுவனோ தென்மதுரை மாமணியே என்னையுகந்(து)

ஆளுவையோ சொக்கநா தா. 13

எரிசுடுவ தல்லால் இரும்பு சுடுமோ

அரிஅயற்கும் வாசவற்கும் யார்க்கும் – பெரியவர்க்கும்

பூணுமெ தந்தொழில்நின் பொன்னருளால் தென்மதுரைத்

தாணுவே சொக்கநா தா. 14

ஆரிடத்தில் வந்தும் அடியேன் உளத்திருந்தும்

ஓரிடத்தில் உற்பவித்தும் உள்ளபடி – பாரிடத்தில்

நாயேன் உளமகிழ நன்றா உணர்த்திடுவாய்

தாயேநீ சொக்கநா தா. 15

நித்தம் எழுந்தருளி நின்மலனே என்றனக்குப்

புத்தி மிகமிகவும் போதித்துச் – சித்தமயல்

போக்குவாய் இன்பசுக பூரணத்தி ரண்டரவே

ஆக்குவாய் சொக்கநா தா. 16

மறைஆ கமவிதியும் வந்தவுடல் தன்னின்

நிறையூழ் விதியுமுன்னா னின்றேன் – மறைவிதிக்கே

எற்கவே செய்வேன் இசைந்தாலூழ் வேறெதனோ

யார்க்கவென் சொக்கநா தா. 17

நலம்விளைக்கும் உன்பதத்தில் நாடவைப்ப தல்லால்

மலம்விளைக்குஞ் சோறருந்த வைத்தாய் – சலம்விளைக்குஞ்

சென்னியா மாமதுரைச் செல்வாஎல் லாம்வல்ல

தன்னியா சொக்கநா தா. 18

ஆர்வந்தென் ஆர்போயென் அய்யாஉன் ஆனந்தச்

சீருளத்தே என்றுஞ் செறிந்திலதேல் – காரிருண்ட

கண்டனே ஓர் புருடன்கா தல்கொண்டாள் போல்மதுரை

அண்டனே சொக்கநா தா. 19

கான்றசோ றாயுலகங் காணவில்லை இன்பவெள்ளத்(து)

ஊன்றஅடியேன் உறங்கவில்லை – என்ற

இருள்சகல நீங்கவில்லை ஏழையேற் குன்றன்

அருளுறுமோ சொக்கநா தா. 20

நீயே பரமசிவன் ஆனக்கால் நின்மலனே

நாயேன் உளம்மகிழநன்றாகப் – பேயேன்

கருத்தடங்க நின்கருணை காட்டியின்ப வெள்ளம்

அருத்திடுவை சொக்காநா தா. 21

விதிமார்க்கம் எப்பொழுது மேயறியேன் ஊழின்

விதிமார்க்கம் அல்லாது மெய்யாங் – கதிமார்க்கம்

காட்டுவாய் நாயேன் கறையேற எவ்வுலகும்

ஆட்டுவாய் சொக்காநா தா. 22

அருவெருப்பே மெத்தியிடும் ஆகத்தைச் சற்றும்

அருவெருக்கத் தோற்றுதில்லை அய்யோ – அருவெருக்கத்

தோற்றியிடா தென்னவினை துய்ப்பித் தறுப்பதற்கோ

சாற்றியிடாய் சொக்காநா தா. 23

தவமோ சிறிதறியேன் தாரணிமேற் செய்யும்

அவமோ அளவில்லையானால் – சிவமோ

பெறுமாறென் கூடற் பிரானேமுப் பாசம்

அறுமாறென் சொக்காநா தா. 24

அனைத்துயிர்க்கும் பாசம் அறுத்துமுத்தி கூட்ட

மனைத்துயரஞ் செய்தல் மருந்தோ – மனத்துயரம்

செய்யாமல் தீர்மருந்து சித்தா அறிந்திலையோ

அய்யா என் சொக்காநா தா. 25

உணர்த்தில் உணர்வேன் உணர்த்தயேல் – நாயேன்

கணத்தும் உணரும்வகை காணேன் – உணர்த்தியென்னுட்

பூண்டமல மாயைகன்மம் போக்கிச் சிவானந்தத்

தாண்டருள்வை சொக்காநா தா. 26

பிரிந்தேன் மலத்துனது பேரருளினாலே

அறிந்தேன் உனைநன்றா அய்யா – செறிந்தஇன்ப

பூரணா செங்கமலப்பொற்பாதா கூடலில்வாழ்

ஆரணா சொக்காநா தா. 27

கெடுங்காலம் வந்தால் கெடுப்பை கதியில்

விடுங்காலம் வந்தால் விடுவை – கொடுந்தவங்கள்

பண்ணிடினும் பாவம் பயிற்றிடினும் ஆரேனும்

அண்ணலே சொக்காநா தா. 28

என்னவினை நாயேற் கிருக்குதோ இக்காயத்

தென்னவினை நின்தாள் இயற்றுமோ – என்னவினை

வந்திடுமோ என்றறியேன் வந்தாலும் நின் அருளே

தந்திடுவாய் சொக்காநா தா. 29

ஆறாறு தத்துவத்தும் ஆணவத்தும் கன்மத்தும்

மாறாதெந் நாளும் மயங்காமல் – பேறாக

நித்தனே நின்மலனே நின்பதத்தில் ஆள்மதுரை

அத்தனே சொக்காநா தா. 30

அடியேன் உனைவேண்ட அப்படியே என்றுங்

கொடியேன் கருத்திசையக் கூறி – அடியேனை

மீண்டுபிற வாதுன் விரைமலர்த்தாள் சூட்டிஎனை

ஆண்டவனே சொக்காநா தா. 31

ஆசான் உளத்திருந்தும் ஆன்மா உளத்திருந்தும்

மாசார் மலத்தை அறுத்தருளி நேசா

ஒளித்திருந்த இன்பவெள்ளம் ஒன்றஉயிர்க்(கு) என்றும்

அளிப்பவன் நீ சொக்காநா தா. 32

ஆற்றையணி வேணி அமலனே மெய்யதனில்

நீற்றைப் புனையும் நிமலனே – கூற்றைக்

குமைத்தவனே என்சிரத்துன் கோகனதத் தாளை

அமைததவனே சொக்காநா தா. 33

கால வசமோ கடியேன் வினைவசமோ

ஞாலவச மோஅருளை நாடியே – கோலமறச்

சிற்பரா னந்தவெள்ளம் சேற்ந்தறிந்தும் சேர்கிறேன்

தற்பரா சொக்காநா தா. 34

நீள்நாள் பிறந்திறந்து நின்றதுயர் நீயறிவை

வீண்நாள் கழித்து விடாமலே – பூணஅருள்

நண்ணரிய பேரின்பம் நாடி அதுவாக

அண்ணலே சொக்கநா தா. 35

ஆறாறு தத்துவத்தும் ஆணவத்தும் சாராமல்

மாறாத பேரின்ப வாரிதியே – பேறாகச்

சார்ந்திருக்க வல்ல சதுரர் உளத்ததுவாய்

ஆர்ந்திருக்கும் சொக்கநா தா. 36

காடோ வனமோ கனகிரியோ காசினியோ

நாடோ சகலகலை ஞானமோ – வாடி

ஒடுங்குவதோ மெய்வீ டுயிர்க்களித்தல் போதம்

அடங்குவதோ சொக்கநா தா. 37

துன்றுபர மாநந்தச் சோதியிலி ரண்டற்று

நின்றுவிட என்னை நிறுத்துவாய் – அன்று

கமலனே காண்பறிய கண்ணுதலே கூடல்

அமலனே சொக்கநா தா. 38

எக்காலம் இக்காயம் இற்றிடுமோ என்வினைகள்

எக்காலம் மும்மலங்கள் இற்றிடுமோ – எக்காலம்

ஆநந்த சாகரத்தில் ஆடிடுமோ என்னுளந்தான்

ஆநந்தா சொக்கநா தா. 39

எக்காலம் மெய்க்கே இரையிடுதல் இற்றிடுமோ

எக்காலம் இக்கரணம் இற்றிடுமோ – எக்காலம்

பேசாது பூதி பிறந்திடுமோ என்னுளத்தில்

ஆசானே சொக்கநா தா. 40

வாக்கிலுரை பொய்யே மனம்நினைப்ப தும்கவடே

ஆக்கைதினம் செய்வ தகிர்த்தியமே – நோக்கில்

திரிவிதமூம் இப்படிநீ செய்வித்தால் முத்தி

தருவிதமென் சொக்கநா தா. 41

இக்காலத் தின்னவினை என்றமைப்பை அப்படியே

அக்காலத் தவ்வூழ் அருந்திடுவை – இக்காலம்

தப்புவார் உண்டோ தமியேற்கும் தப்பரி(து)என்

அப்பனே சொக்கநா தா. 42

மோகாபி மானமின்னும் முற்றும் மறக்கவில்லை

தேகாபி மானம் சிதையவில்லை – ஓகோ

உனையடைந்தும் பாசம் ஒழியவில்லை கூடல்

தனையடைந்த சொக்கநா தா. 43

பத்திமெத்தச் சித்தம் பதியவில்லை அட்டமா

சித்தி அவாவெறுக்கச் செய்யவில்லை – முத்தியுளம்

கூடவில்லை எந்நாளும் கூடலிலே மாறிநடம்

ஆடவல்ல சொக்கநா தா. 44

என்னைவளை பாசஅரண் இன்னமுநீ கொள்ளவில்லை

அன்னையனே நீபதண மானாலும் முன்னைமலம்

ஓடவே எவ்வுயிர்க்கும் ஓட்டும் அருட்சேனை

தாடியிடும் சொக்கநா தா. 45

சேகரத்தி னுச்சியின்மேல் செந்தேனுக் கிச்சித்தே

போகவசம் ஆகுமோ போகாதார் – தாகம்

மிக அறவே யுள்ளத்தில் வேண்டிலுன் தாட்செந்தேன்

அகமுறுமோ சொக்கநா தா. 46

அடியார் பரிபாகம் எல்லாம் அறிந்து

படிகீழ்ப் பதமேற் பதத்திற் – கொடுபோய்

இருத்திடுவை சேர இனும்மேலாம் போகம்

அருத்திடுவை சொக்கநா தா. 47

வாழ்அய்ம் மலத்தால் வருந்தி மிகஉடைந்த

ஏழையனுக் கையோ இரங்குவாய் – கோழையனாய்ப்

போனேன் புலப்பகையாற் பொன்னடியை நின்னருளால்

தானேதா சொக்கநா தா. 48

எக்காலம் தாகங்கள் இற்றிடுமோ காயங்கள்

எக்காலம் ஆசைசினம் இற்றிடுமோ – எக்காலம்

நல்லார் குணம்வருமோ நாதாஎல் லாமுமாய்

அல்லானே சொக்கநா தா. 49

உள்ளமுனை அல்லாலொன் றுள்ளவில்லை நின்றொளிக்கும்

கள்ளமுற நீயும் கருதவில்லை – எள்ளவும்

நற்றவமோ செய்யவில்லை நாயேன் உனையடைதற்

கற்றதென்ன சொக்கநா தா. 50

ஆர்க்குக் கிடைக்கும் அடியேன்முன் வந்துமறைக்(கு)

ஏற்கக் கருத்துக்(கு) இசையவே – யார்க்கும்

தெரிவரியா வெதசிகை சித்தா உரைத்தாய்

அரிஅறியாச் சொக்கநா தா. 51

எவ்விதையை மக்கள் பயிர் இட்டார் இட்டவரே

அவ்விதையின் போகம் அருந்துதல்போல் – செவ்விதாய்த்

துன்மார்க்கம் செய்வார்க்குத் தோன்றும் பிறப்புமுத்தி

சன்மார்க்கஞ் சொக்கநா தா. 52

எல்லார் கருத்தும் இதமா உரைக்கறியேன்

நல்லங்கு தீங்கிதென நாடறியேன் – எல்லாரும்

நீரூரும் வேணி நிமலா மதுரையில்வாழ்

ஆரூரா சொக்கநா தா. 53

உரை இறந்த பேரின்ப உல்லாச வீட்டில்

திரை இறந்து தூங்கித் திளையேன் – வரை பெருகப்

பேசுவேன் யானென்றே பெற்றவர்தம் உள்ளத்துக்கு

ஆசுவே சொக்கநா தா. 54

ஆறாறு தத்துவமும் அத்திலுறை மூர்த்திகளும்

பேறாம் வினையினையும் பெந்தித்து – மாறாமல்

ஆட்டுவதும் நீயானால் ஆகா மியம்என்பால்

சாட்டுவதென் சொக்கநா தா. 55

முன் அளவில் மாக்களுக்கு முத்தி கொடுத்தஅருள்

என் அளவில் சும்மா இருப்பதேன் – முன் அளவில்

சீர்பெற்றா ரேல்உன் திருவருளோத் தாசையன்றி

ஆர்பெற்றார் சொக்கநா தா. 56

நோயால் வருந்தியுனை நூறுகுரல் கூப்பிட்டால்

நீயாரெ னாதிருக்கை நீதியோ – தாயாய்

அலைகொடுத்த கேழல் அருங்குழவிக் கன்று

முலைகொடுத்தாய் நீயலவோ முன். 57

தாயார் மகவருத்தஞ் சற்றுந் தரியார்கள்

ஆயவினைக் கீடா அமைத்தாலும் – காயம்

பரிக்குந் துயரமெல்லாம் பார்க்கஉனக் கென்றும்

தரிக்குமோ சொக்கநா தா. 58

தீவினையால் இன்னமின்னம் தேகமுறச் செய்வையோ

தீவினையற் றுன்மயமாய்ச் செய்வையோ – தாவிதமாய்

இன்னபடி மேல்விளைவ தென் றறியேன் ஈதறிந்த

அன்னையே சொக்கநா தா. 59

என்னதியான் என்பதுவும் யான்பிறர்செய் தாரெனலும்

மன்னுமதி பாதகமேல் வாஞ்சைகளும் – இன்னமின்னம்

சொல்லுகின்ற இச்செயல்நீ தூண்டுதலற் றென்செயலால்

அல்லவே சொக்கநா தா. 60

ஆலந் தரித்தலிங்கம் ஆலவாய்ச் சொக்கலிங்கம்

மூலமாம் எங்கும் முளைத்தலிங்கம் – பாலொளியாம்

மத்தனே கூடல் மதுரா புரிஉமையாள்

அத்தனே சொக்கநா தா. 61

எல்லாம் உனதுபதம் எல்லாம் உனதுசெயல்

எல்லாம் உனதருளே என்றிருந்தால் – பொல்லாத

மாதுயரம் நீங்கும் மருவும் உனதடிக்கே

ஆதரவாய்ச் சொக்கநா தா. 62

தீதாம் அவாநந்தச் செய்மதுரை வாழ்வேந்தா

நாதா சிவாநந்தம் நல்குவாய் – வேதச்

சிரகரா நித்தா திரபரா சுந்தா

அரகரா சொக்கநா தா. 63

மற்றொருவர் தஞ்சமின்றி வந்தடைந்தக் கால்எனைநீ

சற்றுமிரங் காதிருக்கை தன்மையோ – கொற்றவா

பாவலா கூடற் பரமா பரதேசி

காவலன்நீ சொக்கநா தா. 64

தன்னந் தனியே தமியேன் முறையிட்டால்

இன்னந் திருச்செவியில் ஏறாதோ – மன்னவனே

தென்மதுரை மேவித் திருந்தியசெய் கோல்செலுத்தந்

தன்மதுரை நீயலவோ தான். 65

என்போல் மலகடினர் எவ்விடத்துங் கண்டதுண்டோ

இன்பே மதுரைக் கிறைவனே – அன்(பு)ஏதும்

இல்லா தெனையாண்ட எண்ணத்தால் தேவரீர்

எல்லாமும் வல்லசித்த ரே. 66

நீயே யொளித்திருப்பை நீஎன்றுங் காணாமல்

நீயே யொளித்தபடி நின்னருளால் – நீயேதான்

காட்ட அன்னியமாக் கண்டேன் உனதுவினை

யாட்டதென்ன சொக்கநா தா. 67

பேரன்பன் அல்லன் பிழைசெய்யான் தானல்லன்

ஓரன்பும் இல்லா உலுத்தனேன் – பேரன்பு

காட்டிஎனைக் காட்டியுனைக் காட்டிஇன்பத் தொட்டிலிலே

ஆட்டிவளர் சொக்கநா தா. 68

இட்டா சனத்தில் இரவுபக லற்றிடத்தில்

முட்டா திருக்க அருள் முற்றந்தா – அட்டாங்க

யோகந்தான் நீங்கி ஒழியாச் சிவாநந்த

ஆகம்தா சொக்கநா தா. 69

மோகங் கரைய முழுதும் மலம்கரைய

ஆகங் கரைய அறி வானந்த – மோகமாய்ப்

பூரணமாய் எங்கெங்கும் பொங்கி எழவிழித்த

ஆரணனே சொக்கநா தா. 70

ஊனது வானவுட லோடும்அணு காமலருள்

ஆனசிவ போகமது வாயருள்வாய் ஞானக்

கரும்பொருளே வாழ்மதுரைக் கண்ணுதலே ஆர்க்கும்

அரும்பொருளே சொக்கநா தா. 71

பூண்டமலம் மாண்டுவிடப் போந்தசிவா னந்தவெள்ளத்

தாண்டுமெனை மீண்டுவிட லாகுமோ – நீண்டமால்

வீரனென்பார் தாரா விமலா எனைக்கண்டார்

ஆரனென்பார் சொக்கநா தா. 72

முன்னை மலமகற்றி மூதறிவா நந்தமயந்

தன்னை யறிந்த தபோதனருள் – என்னையுநீ

ஆண்டுபரிச் சொக்கநா தாந்தமருள் கூடலிலே

தாண்டுபரிச் சொக்கநா தா. 73

கருணா நிதியே கடவுளே அன்பர்

பொருளான பேரின்பப் பொற்பே – ஒருநாளும்

நீங்கா தெனதரிவில் நின்றசுகா னந்தமே

ஆங்காண்நீ சொக்கநா தா. 74

நீரிலே மூழ்கிலுமென் நித்தமருச் சிக்கிலுமென்

பாரிலே சுற்றிப் பணியிலுமென் – வேரிலே

உற்றிருந்தா லன்றோ உயிர்க்குறுதி ஒன்றிரண்டும்

அற்றவனே சொக்கநா தா. 75

என்செயலே என்றேன் றியற்றுவதும் என்செயலும்

உன்செயலே என்றேன் றுண்ர்த்துவதும் – நின்செயல

தாகுமே என்ன அடியேற் குணர்த்தலும்நீ

ஆகுமே சொக்கநா தா. 76

ஈண்டுமெனை ஆண்டிலையேல் என்வினைக்கீ டாயானே

வேண்டும் பவங்களில் நீ விட்டாலும் – பூண்டருளால்

அங்கங்கெ என்னோ டனனியமாய் என்னுருவில்

தங்கியருள் சொக்கநா தா. 77

உன்னைவிட நீங்குமுயிர் ஒன்றில்லை ஆதலினால்

என்னைவிட நீங்குவதும் இல்லைநீ – பொன்னைவிட

பூந்தேன் அலருடையாய் பொங்குமது ராபுரியில்

வேந்தே பிரியா விடை. 78

அன்பர்க் கருள்புரிவ தல்லாமல் தேவரீர்

வன்பர்க் கரும்புரிய மாட்டீரேல் – உம்பர்தொழு

நல்லார் புகழ்மதுரை நாதரே தேவரீர்க்

கெல்லாமும் வல்லசித்த ரேன்? 79

நரகம் இனிநால் நாடோம் உமையாள்

விரகர் தமிழ்மதுரை மேவித் – துரகநரி

ஆக்கினார் வைகையில்நீர் ஆடினோம் அவ்வெல்லைப்

போக்கலாம் யாம்திரிந்திப் போது. 80

நானோ தனுகரணம் நானோ மலமாயை

நானோ இவைகள் நடத்துவது – நானோதான்

பூண்ட வினை அறுப்போன் புண்ணியபா வம்புரிவோன்

ஆண்டவனே சொக்கநா தா. 81

அரும்பாச நன்மைதின்மை ஆகம் அதன்மேல்

விரும்பாது நிட்டையிலே மேவித் – திரும்பாத

மனந்தா என்னறிவில் மாறாது பொங்கிஎழும்

ஆநந்தா சொக்கநா தா. 82

துஞ்சப் பிணமென்னச் சுற்றத்தார் இட்டத்தார்

அஞ்சச் சலிக்க அருவருக்கக் – கொஞ்சமுற

தந்த தநுஇருந்து வாழ்ந்துநான் என்னவைத்த

தந்திரமென் சொக்கநா தா. 83

தனுவாதி ஆக்கிஉயிர் தன்னிலிசைத் தாட்டி

எனுமாக மம்கருணை என்றுந் – தினமுநீ

ஆச்சரியம் யான்எனதென் றாட்டல்மறந் தொன்றுரைத்தல்

ஆச்சரியம் சொக்கநா தா. 84

தேகாதி எல்லாஞ் சடம்பிணம்பொய் என்றிருக்க

மோகாதி எல்லாம் முடிந்திருக்க – ஏகமாய்

எப்போதும் இன்பவெள்ளத் தேயிருக்க வாழ்வை என்னுள்

அப்போதே சொக்கநா தா. 85

நின்பாடல் என்று நினைப்பாடல் அன்றியே

என்பாடல் எங்கே இறைவனே – நின்பாடல்

ஆமே தனுவாதி ஆகமநால் வாக்காதி

யாமேநீ சொக்கநா தா. 86

நீயற்ற ஓர்பொருளை நிச்சயித்த நாயேனும்

போயியற்றல் செய்யப் புரிகுவேன் – நீயியற்றல்

ஆக்கா தணுவும் அசையுமோ அவ்விகற்பந்

தாக்காத சொக்கநா தா. 87

அன்றுமுதல் இன்றளவும் மேலும் அடியேனுக்(கு)

என்றுநீ நன்மைசெய்வ தன்றிநான் – ஒன்றேனுஞ்

செய்யுமா(று) எங்ஙன் சிவனே இனிநாயேன்

உய்யுமாறு எங்ஙன் உரை. 88

அறிவுபரம் ஆனந்த மாகவில்லை ஆகம்

பொறிகரணம் யானெனதும் போக – நெறிதவஞ்சேர்

பேரன்போ இல்லை பினைநான் உனக்கடிமைக்(கு)

ஆரென்பேன் சொக்கநா தா. 89

நின்னளவி லானந்தம் நின்கருணை சற்றேனும்

என்னளவில் தோற்றா திருந்தக்கால் – நின்னளவில்

பூரணம்பொய் ஆனந்தம் பொய்கருணை பொய்உரைத்த

ஆரணம்பொய் சொக்கநா தா. 90

தேவே மதுரை நகர்ச் சிற்பரனே எவ்வுயிர்க்கும்

கோவே எனையாளுங் கோவேஎன் – நாவே

உனைத்துதிக்கச் சிந்தை உனைநினைக்கச் சென்னி

கனத்தில் உனைவணங்கக் காண். 91

உன்னைச்சிங் காரித் துனதழகு பாராமல்

என்னைச்சிங் காரித் திடர்ப்பட்டேன் – பொன்னை

அரிவையரை யே நினையும் அன்பிலேற் குந்தாள்

தருவையோ சொக்கநா தா. 92

சொக்கநா தாஉனையே சொல்லுமடி யேனுடைய

பக்கமாய் நின்றுவினை பாற்றியே – எக்காலும்

மீண்டுவா ராதகதி மேவுவிப்பாய் தென்மதுரைத்

தாண்டவனே சொக்கநா தா. 93

ஆறுதலை இல்லை அடியேனுக் கன்பாகத்

தெறுதலை சொல்வார் சிலர் இல்லை – வேறெனக்குத்

திக்காரும் இல்லை சிவனே பழிக்கஞ்சி

சொக்கேநின் தாளே துணை. 94

*** சொக்கநாத வெண்பா முற்றிற்று ***

============

சொக்கநாத வெண்பா சிறப்பு

சொக்கநாத வெண்பா என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருஞான சம்பந்தரால் இயற்றப்பட்டது. இந்த நூலில் 100 வெண்பாப் பாடல்கள் உள்ளன. இவை ‘சொக்கநாதா’ என முடிகின்றன. அதனால் இந்த நூலுக்குச் சொக்கநாத வெண்பா என்னும் பெயர் உண்டாயிற்று. மதுரைச் சொக்கந்தரைப் போற்றி இவை பாடப்பட்டவை. இந்த நூலில் உள்ள பாடல்கள் பொருள் தொடர்பு இல்லாமல் இருப்பதால் பல்வேறு காலகட்டங்களில் இவரால் பாடப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

இந்த | sokkanatha venba பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, சிவன் பாடல்கள் சொக்கநாத வெண்பா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago