Categories: Sivan Songs

சிவவாக்கியர் பாடல்கள் | sivavakkiyam full sivavakkiyar 523 songs lyrics tamil

Sivavakkiyam Full : Sivavakkiyar 523 Songs Lyrics Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சிவவாக்கியம் : சிவவாக்கியர் பாடல்கள் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

காப்பு

அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்

ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்

சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்

தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.

0

கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்

கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே

பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்

பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

1

அக்ஷர நிலை

ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்

ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்

ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்

ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.

2

சரியை விலக்கல்

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை

நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்

வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்

கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.

3

யோக நிலை

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்

கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்

விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்

அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.

4

தேகநிலை

வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால்

விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே

நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல்

சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே.

[நந்துதல் – இச்சை கொள்ளுதல்; நடுவன் – எமன்]

5

ஞான நிலை

என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே

என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின்

என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ?

என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.

6

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,

நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ?

அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்

எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே.

7

மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ;

எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ;

கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ-

நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்.

8

அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்

கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்

பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்

துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.

9

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்

சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்

சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்

எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.

10

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்

இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்

சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்

இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.

11

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?

கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!

ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்

ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!

12

யோக நிலை

சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே!

வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ?

மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லீரேல்

சாத்திரப்பைநோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே!

13

நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்.

பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்!

ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே

காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே.

14

வித்தில்லாத சம்பிரதாயம் மேலும்இல்லை கீழுமில்லை

தச்சில்லாது மாளிகை சமைந்தவாறும் அதெங்ஙனே?

பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்!

சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே.

15

அஞ்சும்மூணும் எட்டாதாய் அநாதியான மந்திரம்

நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செபிப்பீரேல்

பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யினும்

பஞ்சுபோல் பறக்கும்என்று நான்மறைகள் பன்னுமே.

16

அண்டவாசல் ஆயிரம் பிரசண்டவாசல் ஆயிரம்

ஆறிரண்டு நூறுகோடி யானவாசல் ஆயிரம்

இந்தவாசல் ஏழைவாசல் ஏகபோக மானதாய்

எம்பிரான் இருக்கும்வாசல் யாவர்காண வல்லரே?

17

சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும்

சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்

காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்

ஊமையான காயமாய் இருப்பன்எங்கள் ஈசனே!

18

சங்கிரண்டு தாரை ஒன்று சன்னபின்னல் ஆகையால்

மங்கிமாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை?

சங்கிரண்டை யும்தவிர்த்து தாரை ஊதவல்லீரேல்

கொங்கைமங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே.

19

அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து

அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்.

அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்!

அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே!

20

அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே!

பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்!

நெஞ்சில்அஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லீரேல்

அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியாகித் தோன்றுமே!

21

நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்,

வாழவேணும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே?

காலன்ஓசை வந்தபோது கைகலந்து நின்றிடும்

ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே!

22

ஓடம்உள்ள போதெல்லாம் நீர் ஓடியே உலாவலாம்;

ஓடம்உள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம்;

ஓடமும்உடைந்த போதில் ஒப்பிலாத வெளியிலே

ஆடும்இல்லை கோலும்இல்லை யாரும்இல்லை ஆனதே!

23

கிரியை நிலை

வீடெடுத்து வேள்விசெய்து மெய்யனோடு பொய்யுமாய்

மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்

நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில்

ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாணும் உடலமே!

24

உற்பத்தி நிலை

அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே

பெண்ணும்ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்

கண்ணிலாணின் சுக்கிலம் கருவில்ஓங்கும் நாளிலே

மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே?

25

அறிவு நிலை

பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை?

பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை?

மிண்டனாய்த் திரிந்தபோது இறைத்தநீர்கள் எத்தனை?

மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை?

26

அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துஉணர்ந்த ஞானிகாள்

பண்டறிந்த பான்மைதன்னை யார்அறிய வல்லரே?

விண்டவேதப் பொருளைஅன்றி வேறு கூற வகையிலாக்

கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே.

27

தூரம்தூரம் தூரம்என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்

பாரும்விண்ணும் எங்குமாய்ப் பரந்தஅப் பராபரம்

ஊருநாடு காடுமோடி உழன்றுதேடும் ஊமைகாள்!

நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே!

28

தங்கம்ஒன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்

செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தெம்முளே

விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே

எங்குமாகி நின்றநாமம் நாமம்இந்த நாமமே!

29

நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே

விருப்பமொடு நீர்குளிக்கும் வேதவாக்கியம் கேளுமின்;

நெருப்பும்நீரும் உம்முளே நினைந்துகூற வல்லீரேல்

சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமோ!

30

பாட்டில்லாத பரமனைப் பரமலோக நாதனை

நாட்டிலாத நாதனை நாரிமங்கை பாகனை

கூட்டிமெள்ள வாய்புதைத்துக் குணுகுணுத்த மந்திரம்

வேட்டகாரர் குசுகுசுப்பைக் கூப்பிடா முகிஞ்சதே.

31

குசுகுசுப்பை – சுருக்குப்பை

தரிசனம்

செய்யதெங்கி லேஇளநீர் சேர்த்தகார ணங்கள்போல்

ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டனன்.

ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்

வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே.

32

அறிவு நிலை

மாறுபட்டு மணிதுலக்கி வண்டின்எச்சில் கொண்டுபோய்

ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே.

மாறுபட்ட தேவரும் அறிந்துநோக்கும் என்னையும்

கூறுபட்டுத் தீர்க்கவோ குருக்கள்பாதம் வைத்ததே.

33

கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!

ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.

34

செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்

செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்

உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்

அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ!

35

பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்.

பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?

ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?

ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே!

36

இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதினும்

பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான்இரான்

உருக்கிநெஞ்சை உட்கலந்திங்கு உண்மைகூற வல்லீரேல்

சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமோ!

37

கலத்தின்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால்

கலத்திலே கரந்ததோ கடுத்ததீக் குடித்ததோ

நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ

மனத்தின்மாயை நீக்கியே மனத்துள்ளே கரந்ததோ!

38

பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?

இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?

பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?

பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!

39

வாயிலே குடித்தநீரை எச்சில் என்று சொல்கிறீர்;

வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ?

வாயில்எச்சில் போகஎன்று நீர்தனைக் குடிப்பீர்காள்

வாயில்எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே!

40

ஓதுகின்ற வேதம்எச்சில்., உள்ளமந்திரங்கள் எச்சில்;

போதகங்க ளானஎச்சில்., பூதலங்கள் ஏழும்எச்சில்;

மாதிருந்த விந்துஎச்சில்., மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;

ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே!

41

பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே?

பிறந்துமண் ணிறந்துபோய் இருக்குமாறு தெங்ஙனே?

குறித்துநீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே.

அறுப்பென செவிஇரண்டும் அஞ்செழுத்து வாளினால்.

42

அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் சங்குமோ?

கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ?

இன்பமற்ற யோகியை இருளும்வந்து அணுகுமோ?

செம்பொன் அம்பலத்துளே தெளிந்த சிவாயமே.

43

சித்தம்ஏது, சிந்தைஏது சீவன்ஏது! சித்தரே

சத்திஏது? சம்புஏது சாதிபேத அற்றது

முத்திஏது? மூலம்ஏது மூலமந் திரங்கள்ஏது?

வித்தில்லாத வித்திலே இதினெனதென்று இயம்புமே.

44

ஒடுக்க நிலை

சித்தமற்றுச் சிந்தையற்றுச் சீவனற்று நின்றிடம்

சத்தியற்றுச் சம்புவற்றுச் சாதிபேத மற்றுநல்

மூத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்

வித்தைஇத்தை ஈன்றவித்தில் விலைந்ததே சிவாயமே.

45

கிரியை

சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெலாம்

பூதவாசல் ஒன்றலோ, பூதம்ஐந்தும் ஒன்றலோ?

காதில்வாளில், காரை, கம்பி, பாடகம்பொன் ஒன்றலோ?

சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ?

46

அறிவு நிலை

கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;

உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;

விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;

இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.

47

அறையினில் கிடந்தபோது அன்றுதூய்மை என்றிலீர்,

துறைஅறிந்து நீர்குளித்த அன்றுதூமை என்றிலீர்,

ப்றையறிந்து நீர்பிறந்த அன்றுதூமை என்றிலீர்,

புரைஇலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே.

48

தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!

தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?

ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்

தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.

49

சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்

மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்

சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்

செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே.

50

கைவடங்கள் கண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்?

எவ்விடங்கள் கண்டுநீர் எண்ணிஎண்ணிப் பார்க்கிறீர்?

பொய்யுணர்ந்த சிந்தையைப் பொருந்திநோக்க வல்லீரேல்

மெய்கடந்து உம்முளே விரைந்து கூறல்ஆகுமே.

51

ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்

மாடுகாட்டி என்னைநீ மதிமயக்கல் ஆகுமோ,

கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா,

வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.

52

இடத்ததுன்கண் சந்திரன், வலத்ததுன்கண் சூரியன்

இடக்கைசங்கு சக்கரம், வலக்கைசூலம் மான்மழு;

எடுத்தபாதம் நீள்முடி, எண்திசைக்கும் அப்புறம்,

உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே?

53

நாழிஅப்பும் நாழிஉப்பும் நாழியான வாறுபோல்

ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்திடம்

ஏறில்ஆறு ஈசனும் இயங்கு சக்ரதரனையும்

வேறுகூறு பேசுவார் வீழ்வர்வீண் நரகிலே.

54

தில்லைநாய கன்அவன்; திருவரங் கனும்அவன்;

எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்

பல்லுநாவும் உள்ளபேர் பகுத்துகூறி மகிழுவார்;

வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.

55

எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான்

சத்தியான வித்துளே முளைத்தெழும் அச்சுடர்

சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்

அத்தன்ஆடல் கண்டபின் அடங்கல்ஆடல் காணுமே.

56

உற்றநூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்;

பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்துவீர்;

செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருத்திடில்

சுற்றமாக உம்முளே சோதிஎன்றும் வாழுமே.

57

போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும்

தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும்

ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்

ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே.

58

அகாரம்என்ற அக்கரத்துள் அவ்வுவந்து உதித்ததோ?

உகாரம்என்ற அக்கரத்துள் உவ்வுவந்து உதித்ததோ?

அகாரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதோ?

விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.

59

அறத்திறங் களுக்கும்நீ, அண்டம்எண் திசைக்கும்நீ,

திறத்திறங் களுக்குநீ, தேடுவார்கள் சிந்தைநீ,

உறக்கம்நீ, உணர்வுநீ, உட்கலந்த சோதிநீ

மறக்கொணாத நின்கழல் மறப்பினும் குடிகொளே.

60

அண்டம்நீ அகண்டம்நீ, ஆதிமூல மானநீ,

கண்டம்நீ, கருத்தும்நீ, காவியங்க ளானநீ,

புண்டரீக மற்றுளே உணருகின்ற புண்ணியர்,

கொண்டகோல மானநேர்மை கூர்மைஎன்ன கூர்மையே.

61

மைஅடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே

ஐயிறந்து கொண்டுநீங்கள் அல்லல்அற்று இருப்பீர்கள்

மெய்அறிந்த சிந்தையால் விளங்குஞானம் எய்தினால்

உய்யறிந்து கொண்டுநீங்கள் ஊழிகாலம் வாழ்வீரே.

62

கருவிருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்

குருவிருந்து சொன்னவார்த்தை குறித்துநோக்க வல்லீரேல்

உருவிலங்கு மேனியாகி உம்பராகி நின்றுநீர்

திருவிளங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே!

63

தீர்த்தம்ஆட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள்,

தீர்த்தம்ஆடல் எவ்விடம் தெளிந்துநீர் இயம்புவீர்?

தீர்த்தமாக உம்முளே தெளிந்துநீர் இருந்தபின்

தீர்த்தமாக உள்ளதும் சிவாயஅஞ் செழுத்துமே!

64

கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்

பழுத்துவாய் விழிந்துபோன பாவம் என்னபாவமே?

அழுத்தமான வித்திலே அனாதியான இருப்பதோர்

எழுத்திலா எனழுத்திலோ இருக்கலாம் இருந்துமே.

65

கண்டுநின்ற மாயையும் கலந்துநின்ற பூதமும்

உண்டுறங்கு மாறுநீர் உணர்ந்திருக்க வல்லீரேல்

பண்டைஆறும் ஒன்றுமாய்ப் பயந்தவேத சுத்தனாய்

அண்டமுத்தி ஆகிநின்ற ஆதிமூலம் மூலமே!

66

ஈன்றவாச லுக்குஇரங்கி எண்ணிறந்து போவீர்காள்!

கான்றவாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்

நான்றவாச லைத்திறந்து நாடிநோக்க வல்லீரேல்,

தோன்றுமாயை விட்டொழிந்து சோதிவந்து தோன்றுமே.

67

உழலும்வாச லுக்குஇரங்கி ஊசலாடும் ஊமைகாள்?

உழலும்வாச லைத்திறந்து உண்மைசேர எண்ணிலீர்?

உழலும்வாச லைத்திறந்து உண்மைநீர் உணர்ந்தபின்

உழலும்வாசல் உள்ளிருந்த உண்மைதானும் ஆவிரே.

68

மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை

நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின்

பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்;

ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே.

69

இருக்கவேணும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ?

மரிக்கவேணும் என்றலோ மண்ணுளே படைத்தனர்?

சுருக்கமற்ற தம்பிரான் சொன்னஅஞ் செழுத்தையும்

மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதம்கெடீர்.

70

அம்பத்தொன்று என அடங்கலோர் எழுத்துளோ?

விண்பரந்த மந்திரம் வேதம்நான்கும் ஒன்றலோ

விண்பரந்த மூலஅஞ் செழுத்துளே முளைத்ததே

அங்கலிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே.

71

சிவாயம்என்ற அட்சரம் சிவன்இருக்கும் அட்சரம்

உபாயம்என்று நம்புதற்கு உண்மையான அட்சரம்

கபாடமற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை

உபாயம்இட்டு அழைக்குமே சிவாயஅஞ் செழுத்துமே.

72

உருவம்அல்ல, வெளியும்அல்ல, ஒன்றைமேவி நின்றதல்ல

மருவும்வாசல் சொந்தம்அல்ல மற்றதல்ல அற்றதல்ல

பெரியதல்ல சிறியதல்ல பேசலான தானும்அல்ல

அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே?

73

ஆத்துமா அனாதியோ? அனாத்துமா அனாதியோ?

பூத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ?

தர்க்கமிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ?

வீக்கவந்த யோகிகாள்? விரைந்துரைக்க வேணுமே!

74

அறிவிலே புறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்;

நெறியிலே மயங்குகின்ற நேர்மைஒன்று அரிகிலீர்;

உறியிலே தயிர்இருக்க ஊர்புகுந்து வெண்ணெய்தேடும்

அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே?

75

அன்பு நிலை

இருவர்அரங்க மும்பொருந்தி என்புருகி நோக்கிலீர்;

உருவரங்கம் ஆகிநின்ற உண்மைஒன்றை ஓர்கிலீர்;

கருஅரங்கம் ஆகிநின்ற கற்பனை கடந்துபின்

திருஅரங்கம் என்றுநீர் தெளிந்திருக்க வல்லீரே!

76

கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர்

குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்

திருத்திருத்தி மெய்யினால் சிவந்தஅஞ் செழுத்தையும்

உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே.

77

மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும்

எண்ணிலாத கோடிதேவர் என்னதுஉன்னது என்னவும்

கண்ணிலேகண் மணிஇருக்கக் கண்மறைத்த வாறுபோல்

எண்ணில்கோடி தேவரும் இதன்கணால் விழிப்பதே.

78

அறிவு நிலை

மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்

வெங்கலம் கவிழ்ந்தபோது வேணும்என்று பேணுவார்;

நம்கலம் கவிழ்ந்தபோது நாறும்என்று போடுவார்

எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே.

79

மிக்கசெல்வம் நீபடைத்த விறகுமேவிப் பாவிகாள்

விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர்

மக்கள்பெண்டீர் சுற்றம்என்று மாயைகாணும் இவையெலாம்

மறலிவந்து அழைத்தபோது வந்துகூடலாகுமோ?

80

விறகு – கர்வம்

ஒக்கவந்து மாதுடன் செறிந்திடத்தில் அழகியே

ஒருவராகி இருவராகி இளமைபெற்ற ஊரிலே

அக்கணிந்து கொன்றைசூடி அம்பலத்தில் ஆடுவார்

அஞ்செழுத்தை ஓதிடில் அனேகபாவம் அகலுமே.

81

மாடுகன்று செல்வமும் மனைவிமைந்தர் மகிழவே

மாடமாளி கைப்புறத்தில் வாழுகின்ற நாளிலே

ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே

உடல்கிடந்து உயிர்கழன்ற உண்மைகண்டும் உணர்கிலீர்!

82

பாடுகின்ற உம்பருக்குள் ஆடுபாதம் உன்னியே

பழுதிலாத கன்மகூட்டம் இட்டஎங்கள் பரமனே

நீடுசெம்பொன் அம்பலத்துள் ஆடுகொண்ட அப்பனே,

நீலகண்ட காலகண்ட நித்தியகல் யாணனே.

83

கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்

ஞானம்உற்ற நெஞ்சகத்தில் நல்லதேதும் இல்லையே;

ஊனமற்ற சோதியோடு உணர்வுசேர்ந்து அடக்கினால்

தேன்அகத்தின் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே.

84

பருகிஓடி உம்முளே பறந்துவந்த வெளிதனை

நிருவியே நினைந்துபார்க்கில் நின்மனம் அதாகுமே.

உருகிஓடி எங்குமாய் ஓடும்சோதி தன்னுளே

கருதுவீர் உமக்குநல்ல காரணம் அதாகுமே.

85

சோதியாகி ஆகிநின்ற சுத்தமும் பலித்துவந்து

போதியாத போதகத்தை ஓதுகின்ற பூரணா,

வீதியாக ஓடிவந்து விண்ணடியின் ஊடுபோய்

ஆதிநாதன் தன் நாதன்என்று அனந்தகாலம் உள்ளதே

86

இறைவனால் எடுத்தமாடத் தில்லையம் பலத்திலே

அறிவினால் அடுத்தகாயம் அஞ்சினால் அமைந்ததே.

கருவிநாதம் உண்டுபோய்க் கழன்றவாசல் ஒன்பதும்

ஒருவராய் ஒருவர்கோடி உள்ளுளே அமர்ந்ததே.

87

நெஞ்சிலே இருந்திருந்து நெருக்கிஓடும் வாயுவை

அன்பினால் இருந்துநீர் அருகிருத்த வல்லீரேல்

அன்பர்கோயில் காணலாம் அகலும்எண் திசைக்குளே

தும்பிஓடி ஓடியே சொல்லடா சுவாமியே!

88

தில்லையை வணங்கிநின்ற தெண்டனிட்ட வாயுவே

எல்லையைக் கடந்துநின்ற ஏகபோக மாய்கையே

எல்லையைக் கடந்துநின்ற சொர்க்கலோக வெளியிலே

வெள்ளையும் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே.

89

உடம்புஉயிர் எடுத்ததோ, உயிர்உடம்பு எடுத்ததோ

உடம்புஉயிர் எடுத்தபோது உருவம்ஏது செப்புவீர்

உடம்புஉயிர் இறந்தபோது உயிர்இறப்பது இல்லையே

உடம்புமெய் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே.

90

அவ்வெனும் எழுத்தினால் அகண்டம்ஏழு ஆக்கினாய்;

உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை;

மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்;

அவ்வும்உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!

91

மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடீர்!

மந்திரங்கள் ஆவதும் மறத்தில்ஊறல் அன்றுகாண்;

மந்திரங்கள் ஆவது மதத்தெழுந்த வாயுவை;

மந்திரத்தை உண்டவர்க்கு மரணம்ஏதும் இல்லையே!

92

என்னஎன்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை?

பன்னுகின்ற செந்தமிழ்ப் பதம்கடந்த பண்பென

மின்னகத்தில் மின்ஒடுங்கி மின்னதான வாறுபோல்

என்னகத்துள் ஈசனும் யானும்அல்லது இல்லையே!

93

ஆலவித்தில் ஆல்ஒடுங்கி ஆலமான வாறுபோல்

வேறுவித்தும் இன்றியே விளைந்துபோகம் எய்திடீர்!

ஆறுவித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்தரே!

பாரும்இத்தை உம்முளே பரப்பிரமம் ஆனதே!

94

அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்

எவ்வெழுத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பது இங்கிலை?

சவ்வுதித்த மந்திரத்தைத் தற்பரத்து இருத்தினால்

அவ்வும்உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே.

95

தற்பரம் – சுழிமுனை தானம்

நவ்விரண்டு காலதாய், நவின்றமவ் வயிறதாய்ச்

சிவ்விரண்டு தோளதாய்ச் சிறந்தவவ்வு வாயதாய்

யவ்விரண்டு கண்ணதாய் அழுர்ந்துநின்ற நேர்மையில்

செவ்வைஒத்து நின்றதே சிவாயஅஞ் செழுத்துமே.

96

இரண்டுமொன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே

சுருண்டுமூன்று வளையமாய் சுணங்குபோல் கிடந்தநீ

முரண்டெழுந்த சங்கின்ஓசை மூலநாடி ஊடுபோய்

அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே!

97

கடலிலே திரியும் ஆமை கரையிலேறி முட்டையிட்டுக்

கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல்

மடலுளே இருக்கும்எங்கள் மணியரங்க சோதியை

உடலுளே நினைந்துநல்ல உண்மையானது உண்மையே!

98

மூன்றுமண்ட லத்தினும் முட்டிநின்ற தூணிலும்

நான்றபாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்;

ஈன்றதாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்;

தோன்றும்ஓர் எழுத்துளே சொல்லஎங்கும் இல்லையே!

99

மூன்றுமூன்று மூன்றுமே மூவர்தேவர் தேடிடும்

மூன்றும்அஞ் செழுத்துமாய் முழங்கும் அவ்வெழுத்துளே

ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும்

தோன்றும்மண்டலத்திலே சொல்லஎங்கும் இல்லையே!

100

சோறுகின்ற பூதம்போல சுணங்குபோல் கிடந்தநீர்

நாறுகின்ற கும்பியில் நயந்தெழுந்த மூடரே,

சீறுகின்ற ஐவரைச் சிணுக்கறுக்க வல்லீரேல்

ஆறுகோடி வேணியார் ஆறில்ஒன்றில் ஆவிரே!

101

வட்டமென்று உம்முளே மயக்கிவிட்ட திவ்வெளி

அட்டவக் கரத்துளே அடக்கமும் ஒடுக்கமும்

எட்டும்எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே

எட்டலாம் உதித்தது எம்பிரானைநாம் அறிந்தபின்.

102

பேசுவானும் ஈசனே, பிரமஞானம் உம்முளே;

ஆசையான ஐவரும் அலைந்தருள் செய்கிறார்;

ஆசையானா ஐவரே அடக்கிஓர் எழுத்திலே

பேசிடாது இருப்பிரேல் நாதன்வந்து பேசுமே.

103

நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்

நமசிவாய அஞ்சில்அஞ்சும் புராணமான மாயையும்

நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே!

நமசிவாய உண்மையை நன்குஉரைசெய் நாதனே!

104

பரம்உனக்கு எனக்குவேறு பயம்இலை பராபரா!

கரம்எடுத்து நிற்றலும் குவித்திடக் கடவதும்

சிரம்உருகி அமுதளித்த சீருலாவு நாதனே;

உரம்எனக்கு நீ அளித்த ஓம்நமசி வாயவே!

105

பச்சைமண் பதுப்பிலே பழுப்பதிந்த வேட்டுவன்

நிச்சலும் நினைந்திட நினைத்தவண்ணம் ஆயிடும்;

பச்சைமண் இடிந்துபோய் பறந்ததும்பி ஆயிடும்

பிச்சர்காள் அறிந்துகொள்க பிரான்இயற்று கோலமே.

106

ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம்

வெளியதான சோதிமேனி விஸ்வநாத னானவன்

தெளியுமங்கை உடன்இருந்து செப்புகின்ற தாரகம்

எளியதோர் இராமராம ராமமிர்த நாமமே.

107

விழியினோடு புனல்விளைந்த வில்லவல்லி யோனியும்

வெளியிலே பிதற்றலாம் விளைவுநின்றது இல்லையே

வெளிபரந்த தேசமும் வெளிக்குள்மூல வித்தையும்

தெளியும் வல்லஞானிகள் தெளிந்திருத்தல் திண்ணமே.

108

ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்

ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்

ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்

ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!

109

அல்லல்வாசல் ஒன்பதும் அருத்தடைந்த வாசலும்

சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றதும்

நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்

எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.

110

ஆதியானது ஒன்றுமே அநேக்அநேக ரூபமாய்

சாதிபேத மாய்எழுந்து சர்வசீவன் ஆனபின்

ஆதியோடு இருந்துமீண்டு எழுந்துசென்மம் ஆனபின்

சோதியான ஞானியாகிச் சுத்தமாய் இருப்பனே.

111

மலர்ந்ததாது மூலம்மாய் இவ்வையகம் மலர்ந்ததும்

மலர்ந்தபூ மயக்கம்வந்து அருத்ததும் விடுத்ததும்

புலன்கள்ஐந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்

இலங்கலங்கி நின்றமாயம் என்னமாயம் ஈசனே.

112

பாரடங்க உள்ளதும் பரந்தவானம் உள்ளதும்

ஓரிடமும் இன்றியே ஒன்றிநின்ற ஒண்சுடர்

ஆரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும்

சீரிடங்கள் கண்டவன் சிவன்தெரிந்து ஞானியே!

113

மண்கிடார மேசுமந்து மலையுள்ஏறி மறுகுறீர்,

எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர்,

தம்பிரானை நாள்தோறும் தரையிலே தலைபடக்

கும்பிடாத மாந்தரோடு கூடிவாழ்வது எங்ஙனே?

114

நாவில்நூல் அழிந்ததும் நலம்குலம் அழிந்ததும்

மேவுதேர் அழிந்ததும் விசாரம் குறைந்ததும்

பாவிகாள் இதென்னமாயம் வாமநாடு பூசலாய்

ஆவியார் அடங்குநாளில் ஐவரும் அடங்குவார்.

115

இல்லைஇல்லை என்றுநீர் இயம்புகின்ற ஏழைகாள்,

இல்லைஎன்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ?

இல்லைஅல்ல ஒன்றுமல்ல இரண்டும்ஒன்றி நின்றதை

எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே.

116

காரகார காரகார காவல்ஊழி காவலன்

போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன்

மாரமார மாரமார மரங்கள்ஏழும் எய்தசீ

ராமராம ராமராம ராமஎன்னும் நாமமே.

117

நீடுபாரி லேபிறந்து நேரமான காயந்தான்

வீடுபேறி தென்றபோது வேண்டிஇன்பம் வேண்டுமோ?

பாடிநாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ?

நாடுராம ராமராம ராமமென்னுன் நாமமே!

118

உயிருநன்மை யால்உடல் எடுத்துவந்து இருந்திடும்!

உயிர்உடம்பு ஒழிந்தபோது ரூபரூப மாயிடும்

உயிர்சிவத்தின் மாயைஆகி ஒன்றைஒன்று கொன்றிடும்

உயிரும்சத்தி மாயைஆகி ஒன்றைஒன்று தின்னுமே.

119

நெட்டெழுத்து வட்டமே நிறைந்தவல்லி யோனியும்,

நெட்டெழுத்து வட்டமொன்று நின்றதொன்று கண்டிலேன்

குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்

நெட்டெழுத்தில் வட்டம்ஒன்றில் நேர்படான் நம்ஈசனே!

120

விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்

கண்ணிலாணி யாகவே கலந்துநின்ற தெம்பிரான்

மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்

அண்ணலாரும் எம்முளே அமர்ந்துவாழ்வ துண்மையே.

121

விண்கடந்து நின்றசோதி மேலைவாச லைத்திறந்து

கண்களிக்க உள்ளுளே கலந்துபுக் கிருந்தபின்

மண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்

எண்கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே.

122

மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்

நாளுநாளு முன்னிலொரு நாட்டமாகி நாட்டிடில்

பாலனாகி நீடலாம் பரப்பிரமம் ஆகலாம்

ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே!

123

மின்எழுந்து மின்பரந்து மின்ஒடுங்கு மாறுபோல்

என்னுள்நின்ற என்னுள்ஈசன் என்னுள்ளே அடங்குமே,

கண்ணுள்நின்ற கண்ணில்நேர் மைகண்அறி விலாமையால்

என்னுள்நின்ற வென்னையன்றி யான்அறிந்ததில்லையே!

124

இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்,

அரிக்குமால் பிரமனும் அண்டம்ஏழு அகற்றலாம்.

கருக்கொளாத குழியிலே காலிலாத தூணிலே

நெருப்பறை திறந்தபின்பு நீயும்நானும் ஈசனே!

125

ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய்

போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறது எங்ஙனே?

ஆகலும் அழிதலும் அதன்கண்ணேயம் ஆனபின்

சாகலும் பிறத்தலும் இல்லைஇல்லை இல்லையே!

126

வேதம்நாலும் பூதமாய் விரவும்அங்கு நீரதாய்ப்

பாதமே இலிங்கமாய்ப் பரிந்தபூசை பண்ணினால்

காதினின்று கடைதிறந்து கட்டறுத்த ஞானிகள்

ஆதிஅந்த மும்கடந்து அரியவீடு அடைவரே!

127

பருத்திநூல் முறுக்கிவிட்டுப் பஞ்சிஓதும் மாந்தரே!

துருத்திநூல் முறுக்கிவிட்டுத் துன்பம்நீங்க வல்லீரேல்

கருத்தில்நூல் கலைப்படு காலநூல் கழிந்திடும்

திருத்திநூல் கவலறும் சிவாயஅஞ்சு எழுத்துமே.

128

சாவதான தத்துவச் சடங்குசெய்யும் ஊமைகாள்

தேவர்கல்லும் ஆவரோ? சிரிப்பதன்றி என்செய்வேன்?

மூவராலும் அறியொணாத முக்கணன்முதற் கொழுந்து

காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே.

129

காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள்

காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்

காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்

மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.

130

எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ?

அங்கும்இங்கு மாய்இரண்டு தேவரே இருப்பரோ?

அங்கும்இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ?

வங்கவாரம் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.

131

அறையறை இடைக்கிடந்த அன்றுதூமை என்கிறீர்;

முறைஅறிந்து பிறந்தபோதும் அன்றுதூமை என்கிறீர்

துறைஅறிந்து நீர்குளித்தால் அன்றுதூமை என்கிறீர்

பொறைஇலாத நீசரோடும் பொருந்துமாறது எங்ஙனே?

132

சத்தம்வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும்

மத்தமாகி நீரிலே துவண்டுமூழ்கும் மூடரே!

சுத்தம்ஏது? கட்டதேது? தூய்மைகண்டு நின்றதுஏது?

பித்தர்காயம் உற்றதேது பேதம்ஏது போதமே?

133

மாதாமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான்

மாதம்அற்று நின்றுலோ வளர்ந்துரூபம் ஆனது?

நாதம்ஏது, வேதம்ஏது, நற்குலங்கள் ஏதடா?

வேதம்ஓதும் வேதியர் விளைந்தவாறு பேசடா?

134

தூமைஅற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது?

ஆண்மைஅற்று நின்றலோ வழக்கமற்று நின்றது?

தாண்மைஅற்று ஆண்மைஅற்று சஞ்சலங்கள் அற்றுநின்ற

தூமைதூமை அற்றகாலம் சொல்லும்அற்று நின்றதே!

135

ஊறிநின்ற தூமையை உறைந்துநின்ற சீவனை

வேறுபேசி மூடரே விளைந்தவாறது ஏதடா?

நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன?

சீறுகின்ற மூடனே அத்தூமைநின்ற் கோலமே.

136

தீமைகண்டு நின்றபெண்ணின் தூமைதானும் ஊறியே

சீமைஎங்கும் ஆணும்பெண்ணும் சேர்ந்துலகம் கண்டதே.

தூமைதானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை

தூமைஅற்று கொண்டிருந்த தேசம்ஏது தேசமே?

137

வேணும்வேணும் என்றுநீர் வீண்உழன்று தேடுவீர்?

வேணும்என்று தேடினும் உள்ளதல்லது இல்லையே,

வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின்

வேணும்என்ற அப்பொருள் விரைந்துகாணல் ஆகுமே!

138

சிட்டர்ஓது வேதமும் சிறந்ததாக மங்களும்

நட்டகார ணங்களும் நவின்றமெய்மை நூல்களும்

கட்டிவைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம்

பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின்!

139

நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்

நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அதுஎன்பயன்?

ஆறும்ஆறும் ஆறுமாய் அகத்தில்ஓர் எழுத்துமாய்

ஏறுசீர் எழுத்தைஓத ஈசன்வந்து பேசுமே!

140

காலைமாலை தம்மிலே கலந்துநின்ற காலனார்

மாலைகாலை யாச்சிவந்த மாயம்ஏது செப்பிடீர்?

காலைமாலை அற்றுநீர் கருத்திலே ஒடுங்கினால்

காலைமாலை ஆகிநின்ற காலன்இல்லை இல்லையே.

141

எட்டுமண்ட லத்துளே இரண்டுமண்டலம் வளைத்து

இட்டமண்ட லத்துளே எண்ணிஆறு மண்டலம்

தொட்டமண்ட லத்திலே தோன்றிமூன்று மண்டலம்

நட்டமண்ட லத்துளே நாதன்ஆடி நின்றதே!

142

நாலிரண்டு மண்டலத்துள் நாதன்நின்றது எவ்விடம்?

காலிரண்டு மூலநாடி கண்டதங்கு உருத்திரன்;

சேலிரண்டு கண்கலந்து திசைகள் எட்டுமூடியே

மேலிரண்டு தான்கலந்து வீசிஆடி நின்றதே.

143

அம்மைஅப்பன் உப்புநீர் அறிந்ததே அறிகிலீர்;

அம்மைஅப்பன் உப்புநீர் அரிஅயன் அரனுமாய்

அம்மைஅப்பன் உப்புநீர் ஆதியாதி ஆனபின்

அம்மைஅப்பன் நின்னைஅன்றி யாரும்இல்லை ஆனதே.

144

உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே?

கருத்தரிப்ப தற்குமுன் காரணங்கள் எங்ஙனே?

பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறது எங்ஙனே?

குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே!

145

ஆதிஉண்டு அந்தம்இல்லை அன்றுநாலு வேதம் இல்.

சோதிஉண்டு சொல்லுமில்லை சொல்லிறந்த தேதுமில்;

ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்

ஆதிஅன்று தன்னையும் யார்அறிவது அண்ணலே?

146

புலால்புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுகிறீர்?

புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே?

புலாலுமாய்ப் பிதற்றுமாய் பேருலாவும் தானுமாய்ப்

புலாலிலே முளைத்தெழுந்த பித்தன்காணும் அத்தனே!

147

உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும்

இதரமாய் இருந்ததுஒன்று இரண்டுபட்டது என்னலாம்

மதிரமாக விட்டதேது மாங்கிசப்புலால் அதென்?

சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே?

148

உண்டகல்லை எச்சில்என்று உள்ளெறிந்து போடுகிறீர்;

கண்டஎச்சில் கையலோ பரமனுக்கும் வேறதோ?

கண்டஎச்சில் கேளடா, கலந்தபாணி அப்பிலே

கொண்டசுத்தம் ஏதடா? குறிப்பிலாத மூடரே!

149

ஓதிவைத்த நூல்களும் உணர்ந்துகற்ற கல்வியும்

மாதுமக்கள் சுற்றுமும் மறக்கவந்த நித்திரை

ஏதுபுக் கொளித்ததோ எங்குமாகி நின்றதோ?

சோதிபுக் கொளித்தமாயம் சொல்லடா சுவாமியே!

150

ஈணெருமையின் கழுத்தில் இட்டபொட்ட ணங்கள்போல்

மூணுநாலு சீலையில் முடிந்தவழ்க்கும் மூடர்காள்,

மூணுநாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை

ஊணிஊணி நீர்முடித்த உண்மைஎன்ன உண்மையே?

151

சாவல்நாலு குஞ்சதஞ்சு தாயதான வாறுபோல்

காவலான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே!

கூவமான் கிழநரியக் கூட்டிலே புகுந்தபின்

சாவல்நாலும் குஞ்சதஞ்சும் தான் இறந்து போனவே!

152

மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை

காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பீரேல்

பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்;

ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே!

153

செம்பினில் களிம்புவந்த சீதரங்கள் போலவே

அம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை

வெம்பிவெம்பி வெம்பியே மெலிந்துமேல் கலந்திட

செம்பினில் களிம்புவிட்ட சேதிஏது காணுமே!

154

அணி அரங்கம் – அழகிய சிற்றம்பலம்

நாடிநாடி நம்முளே நயந்துகாண வல்லீரேல்

ஓடிஓடி மீளுவான் உம்முளே அடங்கிடும்

தேடிவந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்

கோடிகோடி காலமும் குறைவிலாது இருப்பிரே!

155

பிணங்குகின்றது ஏதடா? பிரக்ஞைகெட்ட மூடரே?

பிணங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர்.

பிணங்கும்ஓர் இருவினைப் பிணக்கறுக்க வல்லீரேல்!

பிணங்கிலாத பெரியஇன்பம் பெற்றிருக்க லாகுமே!

156

மீன்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்?

மீன்இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்

மான்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்,

மான்உரித்த தோலலோ மார்புநூல் அணிவதும்.

157

ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்

ஆட்டிறைச்சி அல்லவோ யாகம்நீங்கள் ஆற்றலோ?

மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்

மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது?

158

அக்கிடீர் அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பது

முக்கிடீர் உமைப்பிடித்து முத்தரித்து விட்டது,

மைக்கிடீர் பிறந்துஇறந்து மாண்டுமாண்டு போவது,

மொக்கிடீர் உமக்குநான் உணர்த்துவித்தது உண்மையே.

159

ஐயன்வந்து மெய்யகம் புகுந்தவாறது எங்ஙனே?

செய்யதெங்கு இளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே.

ஐயன்வந்து மெய்யகம்புகுந்து கோயில் கொண்டபின்

வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே!

160

நவ்வுமவ்வை யும்கடந்து நாடொணாத சியின்மேல்

வவ்வுயவ்வு ளும்சிறந்த வண்மைஞான போதகம்

ஒவ்வுசத்தி யுள்நிறைந்து உச்சியூ டுருவியே

இவ்வகை அறிந்தபேர்கள் ஈசன்ஆணை ஈசனே.

161

அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ?

புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ?

தர்க்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ?

தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ?

162

பார்த்ததேது? பார்த்திடில் பார்வையூ டழிந்திடும்

கூர்த்ததாய் இருப்பிரேல் குறிப்பில்அச் சிவமதாம்;

பார்த்தபார்த்த போதெல்லாம் பார்வையும் இகந்துநீர்

பூத்தபூவுங் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிரே.

163

நெற்றிபற்றி உழலுகின்ற நீலமா விளக்கினைப்

பத்திஒத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன்

உற்றிருநது பாரடா, உள்ஒளிக்கு மேல்ஒளி

அத்தனார் அமர்ந்திடம் அரிந்தவன் அனாதியே.

164

நீரைஅள்ளி நீரில்விட்டு நீர்நினைந்த காரியம்

ஆரைஉன்னி நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர்?

வேரைஉன்னி வித்தைஉன்னி வித்திலே முளைத்தெழும்

சீரைஉன்ன வல்லீரேல் சிவபதங்கள் சேரலாம்!

165

நெற்றியில் தயங்குகின்ற நீலமாம் விளக்கினை

உய்த்துணர்ந்து பாரடா, உள்ளிருந்த சோதியைப்

பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அதானவர்

அத்தலத்தில் இருந்தபேர்கள் அவர்எனக்கு நாதரே.

166

கருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்றது எவ்விடம்?

உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்புநின்றது எவ்விடம்?

அருள்தரிக்கு முன்னெலாம் ஆசைநின்றது எவ்விடம்?

திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம்என்று கூறுவீர்.

167

கருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்றது தேயுவில்,

உருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்ற தேயுவில்

அருள்தரிக்கு முன்னெலாம் ஆசைநின்றது வாயுவில்

திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்.

168

திருக்கு – சந்தேகம்

தாதரான தாதரும் தலத்தில்உள்ள சைவரும்

கூதரைப் பறைச்சிமக்கள் கூடிசெய்த காரியம்

வீதிபோகும் ஞானியை விரைந்துகல் எறிந்ததும்

பாதகங்கள் ஆகவே பலித்ததே சிவாயமே.

169

ஓடிஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும்

பாவியான பூனைவந்து பாலிலே குதித்ததும்

பணிக்கன்வந்து பார்த்ததும் பாரம்இல்லை என்றதும்

இழைஅறுந்து போனதும் என்னமாயம் ஈசனே?

170

சதுரம்நாலு மறையும்எட்டு தானதங்கி மூன்றுமே

எதிரதான வாயுவாறு என்னும்வட்ட மேவியே.

உதிரதான வரைகள்எட்டும் எண்ணும்என் சிரசின்மேல்

கதிரதான காயகத்தில் கலந்தெழுந்த நாதமே.

171

நாலொடாறு பத்துமேல் நாலுமூன்றும் இட்டபின்

மேலுபத்து மாறுடன் மேதிரண்ட தொன்றுமே

கோலிஅஞ் செழுத்துளே குருஇருந்து கூறிடில்

தோலுமேனி நாதமாய்த் தோற்றிநின்ற கோசமே.

172

கோசமாய் எழுந்ததும் கூடுருவி நின்றதும்

தேசமாய்ப் பிறந்ததும் சிவாயம்அஞ் செழுத்துமே

ஈசனார் அருந்திட அனேகனேக மந்திரம்

ஆசயம் நிறைந்துநின்ற ஐம்பத்தோர் எழுத்துமே.

173

அங்கலிங்க பீடமாய் ஐயிரண்டு எழுத்திலும்

பொங்குதா மரையினும் பொருந்துவார் அகத்தினும்

பங்குகொண்ட சோதியும் பரந்தஅஞ்சு எழுத்துமே

சிங்கநாத ஓசையும் சிவாயம் அல்லது இல்லையே.

174

உவமையிலாப் பேரொளிக்குள் உருவமானது எவ்விடம்?

உவமையாகி அண்டத்தில் உருவிநின்றது எவ்விடம்?

தவமதான பரமனார் தரித்துநின்றது எவ்விடம்?

தற்பரத்தில் சலம்பிறந்து தங்கிநின்றது எவ்விடம்?

175

ககமாக எருதுமூன்று கன்றைஈன்றது எவ்விடம்?

சொல்லுகீழு லோகம்ஏழும் நின்றவாறது எவ்விடம்?

அவனும்அவளும் ஆடலால் அருஞ்சிவன் பிறந்ததே,

அவள்தான் மேருவும் அவமைதானது எவ்விடம்?

176

உதிக்கநின்றது எவ்விடம்? ஒடுங்குகின்றது எவ்விடம்?

கதிக்கநின்றது எவ்விடம்? கண்ணுறக்கம் எவ்விடம்?

மதிக்கநின்றது எவ்விடம்? மதிமயக்கம் எவ்விடம்?

விதிக்கவல்ல ஞானிகள், விரிந்துரைக்க வேணுமே.

177

திரும்பியாடு வாசல்எட்டு திறம்உரைத்த வாசல்எட்டு,

மருங்கிலாத கோலம்எட்டு வன்னியாடு வாசல்எட்டு,

துரும்பிலாத கோலம்எட்டு சுற்றிவந்த மருளரே!

அரும்பிலாத பூவும்உண்டு ஐயன்ஆணை உண்மையே!

178

தானிருந்து மூலஅங்கி தணல்எழுப்பி வாயுவால்

தேனிருந்து அறைதிறந்து தித்திஒன்று ஒத்ததே

வானிருந்து மதியமூன்று தண்டலம் புகுந்தபின்

ஊனிருந்து அளவுகொண்ட யோகிநல்ல யோகியே!

179

முத்தனாய் நினைந்தபோது முடிந்தஅண்டத் துச்சிமேல்

பத்தனாரும் அம்மையும் பரிந்துஆடல் ஆடினார்,

சித்தரான ஞானிகள், தில்லைஆடல் என்பீர்காள்!

அத்தன்ஆடல் உற்றபோது அடங்கல்ஆடல் உற்றவே.

180

ஒன்றும்ஒன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே

அன்றும்இன்றும் ஒன்றுமே அனாதியானது ஒன்றுமே

கன்றல்நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்

அன்றுதெய்வம் உம்முளே அரிந்ததே சிவாயமே.

181

நட்டதா வரங்களும் நவின்ற சாத்திரங்களும்

இட்டமானது ஓமகுண்டம் இசைந்தநாலு வேதமும்

கட்டிவைத்த புத்தகம் கடும்பிதற்று இதற்கெலாம்

பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறியவே.

182

வட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த அம்புலி

சட்டசமீ பத்திலே சங்குசக் கரங்களாய்

விட்டதுஅச்சு வாசலில் கதவினால் அடைத்தபின்

முட்டையில் எழுந்தசிவன் விட்டவாறது எங்ஙனே?

183

கோயில்பள்ளி ஏதடா? குறித்துநின்றது ஏதடா?

வாயினால் தொழுதுநின்ற மந்திரங்கள் ஏதடா?

ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்

காயமான பள்ளியில் காணலாம் இறையையே.

184

நல்லவெள்ளி ஆறதாய் நயந்தசெம்பு நாலதாய்

கொல்லுநாகம் மூன்றதாய் குலாவுசெம்பொனி ரண்டதாய்

வில்லின்ஓசை ஒன்றுடன் விளங்கஊத வல்லீரேல்

எல்லைஒத்த சோதியானை எட்டுமாற்ற லாகுமே.

185

மனத்தகத்து அழுக்கறாத மவுனஞான யோகிகள்;

வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்;

மனத்தகத்து அழுக்கறுத்த மவினஞான யோகிகள்

பிணத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே!

186

உருவும்அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே

மருவும்அல்ல கந்தம்அல்ல மந்தநாடி உற்றதல்ல

பெரியதல்ல சிறியதல்ல பேசும்ஆவி தானும்அல்ல

அரியதாக நின்றநேர்மை யாவர்காண வல்லிரே.

187

ஓரெழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே

ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்

மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை

நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே.

188

ஆதிஅந்த மூலவிந்து நாதம்ஐந்து பூதமாய்

ஆதிஅந்த மூலவிந்து நாதம்ஐந் தெழுத்துமாய்

ஆதிஅந்த மூலவிந்து நாதம்மேவி நின்றதும்

ஆதிஅந்த மூலவிந்து நாதமே சிவாயமே.

189

அன்னம்இட்ட பேரெலாம் அனேககோடி வாழவே

சொன்னமிட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்

விண்ணம்இட்ட பேரேலாம் வீழ்வர்வெந் நரகிலே

கன்னம்இட்ட பேரெலாம் கடந்துநின்றல் திண்ணமே!

190

ஓதொணாமல் நின்றநீர் உறக்கம்ஊணும் அற்றநீர்

சாதிபேதம் அற்றநீர் சங்கையின்றி நின்ற நீர்

கோதிலாத அறிவிலே குறிப்புணர்ந்து நின்றநீர்

ஏதும்இன்றி நின்றநீர் இயங்குமாறு எங்ஙனே?

191

பிறந்தபொது கோவணம் இலங்குநூல் குடுமியும்

பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூலி உடங்கெலாம்

மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?

நிலம்பிளந்து வான்இடிந்து நின்றதுஎன்ன வல்லீரே?

192

துருத்தியுண்டு கொல்லனுண்டு சொர்ணமான சோதியுண்டு

திருத்தமாம் மனத்தில்உன்னித் திகழஊத வல்லீரேல்,

பெருத்ததூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும்

நிருத்தமான சோதியும் நீயும்அல்லது இல்லையே.

193

வேடமிட்டு மின்துலக்கி மிக்கதூப தீபமாய்

ஆடறுத்து கூறுபோட்ட அவர்கள்போலும் பண்ணுறீர்

தேடிவத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே

போடுகின்ற புட்பபூசை பூசைஎன்ன பூசையே?

194

முட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை

கட்டிக்கொண்டு நின்றிடம் கடந்துநோக்க வல்லீரேல்

திட்டும்அற்று சுட்டும்அற்று முடியில்நின்ற நாதனை

எட்டுத்திக்கும் கையினால் இருந்தவீட தாகுமே.

195

அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே

நெருக்கிஏறு தாரகை நெருங்கிநின்ற நேர்மையை

உருக்கிஓர் எழுத்துமே ஒப்பிலாத வெளியிலே

இருக்கவல்ல பேரலோ இனிப்பிறப்பது இல்லையே.

196

அருக்கன் – சூரியன், சோமன் – சந்திரன்

மூலவட்டம் மீதிலே முளைத்தஅஞ்சு எழுத்தின்மேல்

கோலவட்டம் மூன்றுமாய் குலைந்தலைந்து நின்றநீர்

ஓலைவட்ட மன்றுளே நவின்றஞானம் ஆகிலோ

ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே.

197

சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள்

முத்துசரம் எட்டுளே மூலாதார வறையிலே

அச்சமற்ற சவ்வுளே அரிஅரன் அயனுமாய்

உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே.

198

பூவும்நீரும் என்மனம் பொருந்துகோயில் என்உளம்

ஆவியோடி லிங்கமாய் அகண்டம்எங்கும் ஆகிலும்

மேவுகின்ற ஐவரும் விளங்குதூப தீபமாய்

ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்திசந்தி இல்லையே.

199

உருக்கலந்த பின்னலோ உன்னைநான் அறிந்தது

இருக்கில்என், மறைக்கில்என் நினைந்திருந்த போதெலாம்

உருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ?

திருக்கலந்து போதலோ தெளிந்ததே சிவாயமே.

200

சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துதேவ ராகலாம்

சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துவானம் ஆளலாம்

சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்துகொண்ட வான்பொருள்

சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்துகொள்ளும் உண்மையே.

201

பொய்க்குடத்தில் ஐந்தொதுங்கிப் போகம்வீசு மாறுபோல்

இச்சடமும் இந்திரியமும் நீருமேல் அலைந்ததே

அக்குடம் சலத்தைமொண்டு அமர்ந்திருந்த வாறுபோல்

இச்சடம் சிவத்தைமொண்டு உகந்தமர்ந்து இருப்பதே.

202

பட்டமும் கயிறுபோல் பறக்கநின்ற சீவனைப்

பட்டறிவினாலே பார்த்துநீ படுமுடிச்சு போடடா;

திட்டவும் படாதடா, சீவனை விடாதடா

கட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்வனை.

203

அல்லிறந்து பகலிறந்து அகப்பிரமம் இறந்துபோய்

அண்டரண்ட மும்கடந்த அனேகனேக ரூபமாய்ச்

சொல்லிறந்த மனமிறந்த சுகசொரூப உண்மையைச்

சொல்லியாற என்னில்வேறு துணைவரில்லை ஆனதே.

204

ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;

கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே

மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்

துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே.

205

அங்கலிங்க பீடமும் அசவைமூன்று எழுத்தினும்

சங்குசக் கரத்திலும் சகல வானத்திலும்

பங்குகொண்ட யோகிகள் பரமவாசல் அஞ்சினும்

சிங்கநாத ஓசையும் சிவாயம்அல்ல தில்லையே.

206

அசவை – அசுபா மந்திரம்

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்;

அஞ்செழுத்தும் நெஞ்சழுத்து அவ்வெழுத் தறிந்தபின்

அஞ்செழுத்தும் அவ்வின்வண்ணம் ஆனதே சிவாயமே.

207

ஆதரித்த மந்திரம் அமைந்தஆக மங்களும்

மாதர்மக்கள் சுற்றமும் மயக்கவந்த நித்திரை

ஏதுபுக் கொளித்ததோ, எங்கும்ஆகி நின்றதோ?

சோதிபுக் கொளித்திடம் சொல்லடா சுவாமியே.

208

அக்கரம் அனாதியோ, ஆத்துமா அனாதியோ?

புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ?

தக்கமிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ?

மிக்கவந்த யோகிகாள், விரைந்துரைக்க வேணுமே.

209

ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்

ஒன்பதாம் ராமராம ராமஎன்னும் நாமமே

வன்மமான பேர்கள்வாக்கில் வந்துநோய் அடைப்பதாம்

அன்பரான பேர்கள்வாக்கில் ஆழ்ந்தமைந்து இருப்பதே.

210

அள்ளிநீரை இட்டதேது? அங்கையில் குழைந்ததேது?

மெள்ளவே முணமுணவென்று விளம்புகின்ற மூடர்காள்

கள்ளவேடம் இட்டதேது கண்ணைமூடி விட்டதேது?

மெள்ளவே குருக்களே, விளம்பிடீர் விளம்பிடீர்.

211

அன்னைகர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்

முன்னையே தரித்தும் பனித்துளிபோலாகுமே;

உன்னிதொக் குளழலும் தூமையுள்ளுளே அடங்கிடும்

பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே.

212

அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே,

அழுக்கிருந்தது எவ்விடம், அழகில்லாதது எவ்விடம்.

அழுக்கிருந்தது எவ்விடத்து அழுக்கறுக்க வல்லீரேல்

அழுக்கிலாதது சோதியோடு அணுகிவாழ லாகுமே.

213

அணுத்திரண்ட கண்டமாய் அனைத்துபல்லி யோனியாய்

மனுப்பிறந்து ஓதிவைத்த நூலிலே மயங்குறீர்

சனிப்பதுஏது; சாவதுஏது; தாபரத்தின் ஊடுபோய்

நினைப்பதுஏது? நிற்பதுஏது; நீர்நினைந்து பாருமே.

214

ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம்

சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை

போதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள்,

சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே!

215

ஆக்கைமூப்பது இல்லையே ஆதிகா ரணத்திலே

நாக்கைமூக்கையுள் மடித்து நாதநாடி யூடுபோய்

ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லீரேல்

பார்க்கப்பார்க்கத் திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே.

216

அஞ்சும்அஞ்சும் அஞ்சும்அஞ்சும் அல்லல்செய்து நிற்பதும்

அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்

அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லீரேல்

அஞ்சும்அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே.

217

அஞ்செழுத்தி னாதியாய் அமர்ந்துநின்றது ஏதடா?

நெஞ்செழுத்தி நின்றுகொண்டு நீசெபிப்பது ஏதடா?

அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா?

பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்துரைக்க வேண்டுமே.

218

உயிரிருந்தது எவ்விடம்? உடம்பெடுப்பு தன்முனம்?

உயிரதாவது ஏதடா? உடம்பதாவது ஏதடா?

உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா?

உயிரினால் உடம்பெடுத்த உண்மைஞானி சொல்லடா.

219

சுழித்தவோர் எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே

துன்ப்இன்ப முங்கடந்து செல்லுமூல நாடிகள்

அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே

ஆறுபங்க யம்கலந்து அப்புறத் தலத்துளே.

220

உருத்தரிப்ப தற்குமுன் உயிர்புகுந்த நாதமும்

கருத்தரிப்ப தற்குமுன் காயம் என்ன சோணிதம்

அருள்தரிப்ப தற்குமுன் அறிவுமூலா தாரமாம்

குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடும் குருக்களே.

221

எங்கும்உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்

பங்குகூறு போடுவார், பாடுசென்று அணுகிலார்

எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ?

உங்கள்பேதம் அன்றியே உண்மைஇரண்டு இல்லையே?

222

அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்ப்

பெரியதாகி உலகுதன்னில் நின்றபாதம் ஒன்றலோ

விரிவதென்று வேறுசெய்த வேடமிட்ட மூடரே,

அறிவினோடு பாரும்இங்கும் அங்கும் ஒன்றதே.

223

வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர்

சிந்தையுள் நினைந்துமே தினம்செபிக்கு மந்திரம்

முந்துமந்தி ரத்திலோ, மூலமந்திரத்திலோ,

எந்தமந்தி ரத்திலோ ஈசன்வந்து இயங்குமே?

224

அகாரகார ணத்திலே அனேகனேக ரூபமாய்

உகாரகார ணத்திலே உருத்தரித்து நின்றனன்

மகாரகார ணத்திலே மயங்குகின்ற வையகம்

சிகாரகார ணத்திலே தெளிந்ததே சிவாயமே.

225

அவ்வெழுத்தில் உவ்வுவந்து அகாரமும் சனித்ததோ?

உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றைஒன்றி நின்றதோ!

செவ்வைஒத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும்

மிவ்வையொத்த ஞானிகாள், விரித்துரைக்க வேணுமே.

226

மிவ்வை – நற்குணம்

ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்

சோதியான மூன்றிலும் சொரூபம்அற்ற ரெண்டிலும்

நீதியான தொன்றிலே நிறைந்துநின்ற வத்துவை

ஆதியான தொன்றுமே அற்றதஞ் செழுத்துமே.

227

வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில்

ஊனிலாதது ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில்

நானிலாதது ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்

தானிலாதது ஒன்றுமில்லை தயங்கி ஆடுகின்றதே!

228

சுழித்ததோர் எழுத்தைஉன்னி சொல்லுமுகத்து இருத்தியே

துன்ப்இன்ப முங்கடந்து சொல்லும்நாடி யூடுபோய்

அழுத்தமான அக்கிரத்தின் அங்கியை எழுப்பியே

ஆறுபங்க யம்கடந்து அப்புறத்து வெளியிலே.

229

விழுத்தகண் குவித்தபோ தடைந்துபோய் எழுத்தெலாம்

விளைந்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே

அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில்

அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை ஆனதே.

230

நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி ஓடுறீர்

நல்லமஞ் சனங்களுண்டு நாதன்உண்டு நம்முளே

எல்லைமஞ் சனங்கள்தேடி ஏகபூசை பண்ணினால்

தில்லைமேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே.

231

உயிர்அகத்தில் நின்றிடும் உடம்பெடுத்த தற்குமுன்

உயிர்அகாரம் ஆயிடும் உடல்உகாரம் ஆயிடும்

உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச்சிவம்

உயிரினால் உடம்புதான் எடுத்தவாறு உரைக்கினேன்.

232

அண்டம்ஏழும் உழலவே அனந்தயோனி உழலவே

பண்டைமால், அயனுடன் பரந்துநின்று உழலவே

எண்திசை கடந்துநின்ற இருண்டசத்தி உழலவே

அண்டரண்டம் ஒன்றதாய் ஆதிநட்டம் ஆடுமே.

233

உருவநீர் உறுப்புகொண்டு உருத்தரித்து வைத்திடும்

பெரியபாதை பேசுமோ பிசாசைஒத்த மூடரே,

கரியமாலம் அயனுமாக காணொணாத கடவுளை

உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே.

234

பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அதென்றுநீர்

எண்ணமுற்றும் என்னபேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள்

பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்

ஒண்ணுமாகி உலகளித்த ஒன்றைநெஞ்சில் உண்ணுமே.

235

நாலதான போனியும் நவின்றவிந்தும் ஒன்றதாய்

ஆலதான வித்துளே அமர்ந்தொடுங்கு மாறுபோல்

சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம்

மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.

236

அருவமாய் இருந்தபோது அன்னைஅங்கு அறிந்திலை

உருவமாய் இருந்தபோது உன்னைநான் அறிந்தனன்

குருவினான் தெளிந்துகொண்டு கோதிலாத ஞானமாம்

பருவமான போதலோ பரப்பிரமம் ஆனதே.

237

பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும்

மறப்பதும் நினைப்பதும் மறைந்ததைத் தெளிந்ததும்

துறப்பதும் கொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்

பிறப்பதும் இறப்பதும் பிறந்தவீடு அடங்குமே.

238

கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்தமால்

விண்ணிலே இருப்பனே மேவிஅங்கு நிற்பனே

தன்னுளே இருப்பனே தராதலம் படைத்தவன்

என்னுளே இருப்பனே எங்குமாகி நிற்பனே.

239

ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும்

கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ?

ஓடிஇட்ட பிச்சையும் உகந்துசெய்த தர்மமும்

சாடிவிட்ட குதிரைபோல் தர்மம்வந்து நிற்குமே.

240

எள்இரும்பு கம்பளி இடும்பருத்தி வெண்கலம்

அள்ளிஉண்ட நாதனுக்கோர் ஆடைமாடை வத்திரம்

உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதானம் ஈதிரால்

மெள்ளவந்து நோய் அனைத்தும் மீண்டிடும் சிவாயமே.

241

ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே

தேரிலே வடத்தைவிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்

ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை

போரிலான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே.

242

மருள்புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே

குருக்கொடுத்த மந்திரம் கொண்டுநீந்த வல்லீரேல்

குருக்கொடுத்த தொண்டரும் முகனொடித்த பிள்ளையும்

பருத்திபட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே.

243

அன்னைகர்ப்ப அறைஅதற்குள் அங்கியின்பிர காசமாய்

அந்தறைக்குள் வந்திருந்து அரியவந்து ரூபமாய்

தன்னைஒத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய்

தங்கநற் பெருமைதந்து தலைவனாய் வளர்ந்ததே.

244

உன்னையற்ப நேரமும் மறந்திருக்க லாகுமோ

உள்ளமீது உறைந்தெனை மறைப்பிலாத சோதியைப்

பொன்னவென்ற பேரொளிப் பொருவில்லாத ஈசனே

பொன்னடிப் பிறப்பில்லாமை என்றுநல்க வேணுமே.

245

பிடித்ததண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள்

தடித்தகோலம் அத்தைவிட்டு சாதிபேதங் கொண்மினோ,

வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மைகூற வல்லீரேல்

திடுக்கமுற்ற ஈசனைச் சென்றுகூட லாகுமே.

246

சத்திநீ தயவுநீ தயங்குசங்கின் ஓசைநீ

சித்திநீ சிவனும்நீ சிவாயமாம் எழுத்துநீ

முத்திநீ முதலும்நீ மூவரான தேவர்நீ

அத்திபூரம் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.

247

சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே

பொத்தகத்தை மெத்தவைத்துப் போதமோதும் பொய்யரே

நிட்டைஏது ஞானமேது? நீரிருந்த அட்சரம்

பட்டைஏது? சொல்லீரே பாதகக் கபடரே?

248

உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும்

வெண்மையாகி நீரிலே விரைந்துநீர தானதும்

தண்மையான காயமே தரித்துஉருவம் ஆனதும்

தெண்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே.

249

வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே

அஞ்செழுத்தின் உண்மையை அறிகிலாத மாந்தர்காள்

வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லீரேல்

அஞ்செழுத்தின் உண்மையை அறிந்துகொள்ள லாகுமே.

250

காயிலாத சோலையில் கனியுகந்த வண்டுகள்

ஈயிலாத தேனையுண்டு இராப்பகல் உறங்குறீர்

பாயிலாத கப்பலேறி அக்கரைப் படுமுனே

வாயினால் உரைப்பதாகு மோமவுன ஞானமே.

251

பேய்கள்பேய்கள் என்கிறீர் பிதற்குகின்ற பேயர்காள்,

பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோ

ஆதிபூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ

காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே.

252

மூலமண்ட லத்திலே முச்சதுரம் ஆதியாய்

நாலுவாசல் எம்பிரான் நடுஉதித்த மந்திரம்

கோலிஎட்டு இதழுமாய் குளிர்ந்தலர்ந்த தீட்டமாய்

மேலும்வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே.

253

ஆதிநாடி நாடிஓடிக் காலைமாலை நீரிலே

சோதிமூல மானநாடி சொல்லிறந்த தூவெளி

ஆதிகூடி நெற்பறித்தது அகாரமாதி ஆகமம்

பேதபேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே.

254

பாங்கினோடு இருந்துகொண்டு பரமன்அஞ் செழுத்துளே

ஓங்கிநாடி மேல்இருந்து உச்சரித்த மந்திரம்

மூங்கில்வெட்டி நார்உரித்து முச்சில்செய் விதத்தினில்

ஆய்ந்தநூலில் தோன்றுமே அரிந்துணர்ந்து கொள்ளுமே.

255

புண்டரீக மத்தியில் உதித்தெழந்த சோதியை

மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை

அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லீரேல்

கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே.

256

புண்டரீகம் – தாமரை

அம்பலங்கள் சந்தியில் ஆடுகின்ற வம்பனே

அன்பனுக்குள் அன்பனாய் நிற்பதுஆதி வீரனே

அன்பருக்குள் அன்பராய் நின்றஆதி நாதனே

உம்பருக்கு உண்மையாய் நின்றஉண்மை உண்மையே.

257

அண்ணலாவது ஏதடா? அறிந்துரைத்த மந்திரம்

தண்ணலாக வந்தவன் சகலபுராணம் கற்றவன்

கண்ணனாக வந்ததன் காரணத் துதித்தவன்

ஒண்ணதாவது ஏதடா? உண்மையான மந்திரம்?

258

உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி நின்றிடம்

மெள்ளவந்து கிட்டிநீர் வினவவேணும் என்கிறீர்?

உள்ளதும் புறம்பதும் ஒத்தபோது நாதமாம்

கள்ளவாச லைத்திறந்து காணவேணும் மந்திரம்.

259

ஆரலைந்து பூதமாய் அளவிடாத யோனியும்

பாரமான தேவரும் பழுதிலாத பாசமும்

ஓரொணாத அண்டமும் உலோகலோக லோகமும்

சேரவெந்து போயிருந்த தேகம்ஏது செப்புமே?

260

என்னகத்துள் என்னைநான் எங்குநாடி ஓடினேன்?

என்னகத்துள் என்னைநான் அறிந்திலாத தாகையால்

என்னகத்துள் என்னைநான் அறிந்துமே தெரிந்தபின்

என்னகத்துள் என்னைஅன்றி யாதுமொன்று மில்லையே.

261

விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கு மாறுபோல்

என்னுள்நின்றும் எண்ணும்ஈசன் என்னகத்திருக் கையால்

கண்ணினின்று கண்ணில்தோன்றும் கண்ணிறி விலாமையால்

என்னுள்நின்ற என்னையும் யானறிந்தது இல்லையே.

262

அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்

அடக்கினும் அடக்கொணாத அன்பிருக்கும் என்னுளே

கிடக்கினும் இருக்கினும் கிலேசம்வந்து இருக்கினும்

நடக்கினும் இடைவிடாத நாதசங் கொலிக்குமே.

263

மட்டுலாவு தண்துழாய் அலங்கலாய் புனற்கழல்

வீட்டுவீழில் தாகபோக விண்ணில்மண்ணில் வெளியினும்

எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக்

கட்டிவீடி லாதுவைத்த காதலின்பம் ஆகுமே.

264

ஏகமுத்தி மூன்றுமுத்தி நாலுமுத்தி நன்மைசேர்

போகமுற்றி புண்ணியத்தில் முத்திஅன்றி முத்தியாய்

நாகமுற்றி சயனமாய் நலங்கடல் கடந்ததீ

யாகமுற்றி ஆகிநின்ற தென்கொலாதி தேவனே.

265

மூன்றுமுப்பது ஆறினோடு மூன்றுமூன்று மாயமாய்

மூன்றுமுத்தி ஆகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்த்

தோன்றுசோதி மூன்றுதாய் துலக்கமில் விளக்கதாய்

ஏன்றெனாவின் உள்புகுந்த தென்கோலோ நம்ஈசனே.

266

ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அல்லவற்றுள் ஆயுமாய்

ஐந்துமூன்றும் ஒன்றுமாகி நின்றஆதி தேவனே

ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் அமைந்தனைத்து நின்றநீ

ஐந்தும்ஐந்தும் ஆயநின்னை யாவர்காண வல்லரே.

267

ஆறும்ஆறும் ஆறுமாய் ஓர்ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய்

ஏறுசீர் இரண்டுமூன்றும் ஏழும்ஆறும் எட்டுமாய்

வேறுவேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்

ஊறும்ஓசை யாய்அமர்ந்த மாயமாம் மாயனே.

268

எட்டும்எட்டும் எட்டுமாய் ஓர்ஏழும் ஏழுமாய்

எட்டும் ஒன்றும் மூன்றுமாகி நின்றஆதி தேவனே

எட்டுமாய பாதமோடு இறைஞ்சி நின்றவண்ணமே

எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல்நீங்கி நிற்பரே.

269

பத்தினோடு பத்துமாய் ஓர்ஏழினோடு ஒன்பதாய்

பத்துநாற் திசைக்குள்நின்ற நாடுபெற்ற நன்மையால்

பத்துமாய கொத்தமோடும் அத்தலமிக் காதிமால்

பத்தர்கட் கலாதுமுத்தி முத்திமுத்தி யாகுமே.

270

வாசியாகி நேசம்ஒன்றி வந்தெதிர்த்த தென்னுக

நேசமாக நாளுலாவ நன்மைசேர் பாவங்களில்

வீசிமேல் நிமிர்ந்ததோளி யில்லையாக்கி னாய்கழல்

ஆசையாய் மறக்கலாது அமரர்ஆகல் ஆகுமே.

271

எளியதாக காயமீதில் எம்பிரான் இருப்பிடம்

அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும்

கொளுகையான சோதியும் குலாவிநின்றது அவ்விடம்

வெளியதாகும் ஒன்றிலே விளைந்ததே சிவாயமே.

272

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்

அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின்

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே.

273

பொய்யுரைக்க போகமென்று பொய்யருக் கிருக்கையால்

மெய்யுரைக்க வேண்டுதில்லை மெய்யர்மெய்க் கிலாமையால்

வையகத்தில் உண்மைதன்னை வாய்திறக்க அஞ்சினேன்

நையவைத்தது என்கொலோ நமசிவாய நாதனே!

274

ஒன்றைஒன்று கொன்றுகூட உணவுசெய்து இருக்கினும்

மன்றினூடு பொய்களவு மாறுவேறு செய்யினும்

பன்றிதேடும் ஈசனைப் பரிந்துகூட வல்லீரேல்

அன்றுதேவர் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.

275

மன்று – கடை

மச்சகத் துளேஇவர்ந்து மாயைபேசும் வாயூவை

அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொள்விரேல்

இச்சைஅற்ற எம்பிரான் எங்கும்ஆகி நிற்பனே

அச்சகத் துளேயிருந்து அறுவுணர்த்திக் கொண்டபின்.

276

வயலிலே முலைத்தநெல் களையதான வாறுபோல்

உலகினோரும் உண்மைகூறில் உய்யுமாறது எங்ஙனே

விரகிலே முளைத்தெழுந்த மெய்யலாது பொய்யதாய்

நரகிலே பிறந்திருந்து நாடுபட்ட பாடதே.

277

விரகு – விரகதாபம்

ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர்

தேடுகின்ற பாவிகாள், தெளிந்தஒன்றை ஓர்கிலீர்;

காடுநாடு வீடுவீண் கலந்துநின்ற கள்வனை

நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.

278

ஆடுகின்ற அண்டர்கூடும் அப்புறம திப்புறம்

தேடுநாலு வேதமும் தேவரான மூவரும்

நீடுவாழி பூதமும் நின்பதோர் நிலைகளும்

ஆடுவாழின் ஒழியலா தனைத்துமில்லை இல்லையே.

279

ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே

போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே

தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே

யாவரும் பரத்துளே யானும் அப்பரத்துளே.

280

ஏழுபார் எழுகடல் இடங்கள்எட்டு வெற்புடன்

சூழுவான் கிரிகடந்து சொல்லும் ஏழுலகமும்

ஆழிமால் விசும்புகொள் பிரமாண்டரண்ட அண்டமும்

ஊழியான் ஒளிக்குளே உதித்துடன் ஒடுங்குமே.

281

கயத்துநீர் இறைக்குறீர் கைகள்சோர்ந்து நிற்பதேன்?

மனத்துள்ஈரம் ஒன்றிலாத மதிஇலாத மாந்தர்காள்;

மனத்துள்ஈரம் கொண்டுநீர் அழுக்கறுக்க வல்லீரேல்

நினைத்திருந்த சோதியும் நீயும்நானும் ஒன்றலோ?

282

நீரிலே பிறந்திருந்து நீர்சடங்கு செய்கிறீர்

ஆரைஉன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்

வேரைஉன்னி வித்தைஉன்னி வித்திலே முளைத்தெழும்

சீரைஉன்ன வல்லீரேல் சிவபதம் அடைவிரே.

283

பத்தொடொத்த வாசலில் பரந்துமூல வக்கரம்

முத்திசித்தி தொந்தமென்று இயங்குகின்ற மூலமே

மத்தசித்த ஐம்புலன் மாகரமான கூத்தையே

அத்தியூரர் தம்முளே அமைந்ததே சிவாயமே.

284

அணுவினோடும் அண்டமாய் அளவிடாத சோதியைக்

குணமதாகி உம்முளே குறித்திருக்கில் முத்தியாம்

முணமுணென்று உம்முளே விரலைஒன்றி மீளவும்

தினந்தினம் மயக்குவீர் செம்புபூசை பண்ணியே.

285

மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம்

மூடமாக மூடுகின்ற மூடமேது *முடரே

காலனான அஞ்சுபூதம் அஞ்சிலே ஒடுங்கினால்

ஆலயோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ?

286

முச்சதுர மூலமாகி முடிவுமாகி ஏகமாய்

அச்சதுரம் ஆகியே அடங்கியோர் எழுத்துமாய்

மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்

உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே.

287

வண்டுலங்கள் போலும்நீர் மனத்துமாசு அறுக்கிலீர்

குண்டலங்கள் போலுநீர் குளத்திலே முழுகுறீர்

பண்டும் உங்கள் நான்முகன் பறந்துதேடி காண்கிலான்,

கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே.

288

நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூறிதன்று

பந்தமன்று வீடுமன்று பாவகங்கள் அற்றது.

கெந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே

அந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே உரைப்பதே.

289

பொருந்துநீரும் உம்முளே புகுந்துநின்ற காரணம்

எருதிரண்டு கன்றைஈன்ற ஏகமொன்றை ஓர்கிலிர்

அருகிருந்து சாவுகின்ற ஆவையும் அறிந்திலீர்

குருவிருந்து உலாவுகின்ற கோலம்என்ன கோலமே?

290

அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ?

சிம்புகளாய்ப் பரந்துநின்ற சிற்பரமும் நீயலோ?

எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால்

எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே.

291

ஈரொளிய திங்களே இயங்கிநின்றது தற்பரம்

ஏரொளீய திங்களே அஃது யாவரும் அறிகிலீர்

காரொளிப் படலமும் கடந்துபோன தற்பரம்

தாரொளிப் பெரும்பதம் ஏகநாத பாதமே.

292

கொள்ளொணாது மெல்லொணாது கோதாறக் குதட்டடா

தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத்துளே

தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன்

விள்ளொணாது பொருளைநான் விளம்புமாறது எங்ஙனே?

293

வாக்கினால் மனத்தினால் மதித்தகார ணத்தினால்

நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்

நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில்

நோக்கொணாத நோக்குவந்து நோக்கைஎங்கண் நோக்குமே.

294

உள்ளினும் புறம்பினும் உலகமெங்கணும் பரந்து

எள்ளில்எண்ணெய் போலநின்று இயங்குகின்ற எம்பிரான்

மெள்ளவந்து என்னுட்புகுந்து மெய்த்தவம் புரிந்தபின்

வள்ளலென்ன வள்ளலுக்கு வண்ணமென்ன வண்ணமே?

295

வேதமொன்று கண்டிலேன் வெம்பிறப்பு இலாமையால்

போதம்நின்ற வடிவதாய்ப் புவனமெங்கும் ஆயினாய்,

சோதியுள் ஒளியுமாய்த் துரியமோடு அதீதமாய்

ஆதிமூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே.

296

சாண்இரு மடங்கினால் சரிந்தகொண்டை தன்னுளே

பேணிஅப் பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர்,

தோணியான ஐவரைத் துறந்தறுக்க வல்லீரேல்

காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே.

297

அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால்

நெஞ்சுகூற உம்முளே நினைப்பதோர் எழுத்துளே

அஞ்சுநாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால்

அஞ்சும்ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே.

298

அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம்

சக்கரத்து சிவ்வைருண்டு சம்புளத் திருந்ததும்

எள்கரந்த எண்ணெய்போல் எவ்வெழுத்தும் எம்பிரான்

உள்கரந்து நின்றநேர்மை யாவர்காண வல்லரே.

299

ஆகமத்தின் உட்பொருள் அகண்டமூலம் ஆதலால்

தாகபோக மின்றியே தரித்ததற் பரமும்நீ

ஏகபாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே

ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே.

300

மூலவாசல் மீதுளேஓர் முச்சரம் ஆகியே

நாலுவாசல் எண்விரல் நடுஉதித்த மந்திரம்

கோலம்ஒன்றும் அஞ்சுமாகும் இங்கலைந்து நின்றநீ

வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே.

301

சுக்கிலத் தடியுளே சுழித்ததோர் எழுத்துளே

அக்கரத் தடியுளே அமர்ந்தஆதி சோதிநீ

உக்கரத் தடியுளே உணர்ந்த அஞ்செழுத்துளே

அக்கரம் அதாகியே அமர்ந்ததே சிவாயமே.

302

குண்டலத்து ளேயுளே அறுத்தகத்து நாயகன்

கண்டவந்த மண்டலம் கருத்தழித்த கூத்தனை

விண்டலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள்

கண்டுகொண்ட மண்டலம் சிவாயமல்லது இல்லையே.

303

சுற்றும்ஐந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி

சத்தியும் சிவனுமாக நின்றதன்மை ஓர்கிலீர்

சத்தியாவு தும்முடல், தயங்குசீவ னுட்சிவம்

பித்தர்காள் அறிந்திலீர் பிரான்இருந்த கோலமே.

304

மூலம்என்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே

நாலுவேதம் நாவுளே நவின்றஞான மெய்யுளே

ஆலம்உண்ட கண்டனும் அரிஅயனும் ஆதலால்

ஓலம்என்ற மந்திரம் சிவாயமல்லது இல்லையே.

305

தத்துவங்கள் என்றுநீர் தமைக்கடிந்து போவீர்காள்

தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ?

முத்திசீவன் நாதமே மூலபாதம் வைத்தப்பின்

அத்தனாரும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.

306

மூன்றுபத்து மூன்றையும் மூன்றுசொன்ன மூலனே

தோன்றுசேர ஞானிகாள் துய்யபாதம் என்தலை

என்றுவைத்த வைத்தபின் இயல்பும் அஞ்செழுத்தையும்

தோன்றஓத வல்லீரேல் துய்யசோதி காணுமே.

307

உம்பர் வானகத்தினும் உலகபாரம் ஏழினும்

நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்

செம்பொன் மாடம் மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான்

எம்பிரான் அலாதுதெய்வம் இல்லைஇல்லை இல்லையே.

308

பூவலாய் ஐந்துமாய் புனலில்நின்ற நான்குமாய்

தீயிலாய மூன்றுமாய்ச் சிறந்தகால் இரண்டுமாய்

வேயிலாய தொன்றுமாய் வேறுவேறு தன்மையாய்

நீயலாமல் நின்றநேர்மை யாவர்காண வல்லரே?

309

அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவுகால் இரண்டுமாய்

செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்தஅப்பு நான்குமாய்

ஐந்துபாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனைச்

சிந்ததையில் தெளிந்தமாயை யாவர்காண வல்லரே.

310

மனவிகாரம் அற்றுநீர் மதித்திருக்க வல்லீரேல்

நினைவிலாத மணிவிளக்கு நித்தமாகி நின்றிடும்;

அனைவர் ஓதும் வேதமும் அகம்பிதற்ற வேணுமேல்

கனவுகண்டது உண்மைநீர் தெளிந்ததே சிவாயமே.

311

இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?

சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?

முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப்

பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே.

312

நீரிலே முளைத்தெழுந்த தாமரையின் ஓரிலை

நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல்

பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்

பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பீரே.

313

உறக்கிலென், விழிக்கிலென், உணர்வுசென்று ஒடுங்கிலென்

சிறந்த ஐம்புலன்களும் திசைத்திசைகள் ஒன்றிலென்?

புறமும்உள்ளும் எங்ஙனம் பொருந்திருந்த தேகமாய்

நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பது ஏதும் இல்லையே.

314

ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர்எழுத்தும் ஒன்றதே

வேதம் என்ற தேகமாய் விளம்புகின்றது அன்றிது,

நாதம்ஒன்று நான்முகன் மாலும்நானும் ஒன்றதே!

ஏதுமின்றி நின்றதொன்றை யான்உணர்ந்த நேர்மையே

315

பொங்கியே தரித்தஅச்சுப் புண்டரீக வெளியிலே

தங்கியே தரித்தபோது தாதுமா துளையதாம்

அங்கியுள் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்க்

கொம்புமேல் வடிவுகொண்டு குருஇருந்த கோலமே.

316

மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறது எங்கெனில்

மண்ணினோடு சோதிபோல் கலந்தநாத விந்துவும்

அண்ணலோடு சத்தியும் அஞ்சுபஞ்சு பூதமும்

மண்ணினோடு கொடுத்தழிப் பாரொடேழும் இன்றுமே.

317

ஒடுக்குகின்ற சோதியும் உந்திநின்ற ஒருவனும்

நடுத்தலத்தில் ஒருவனும் நடந்துகாலில் ஏறியே

விடுத்துநின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்

அடுத்துநின்ற அறிமினோ அனாதிநின்ற ஆதியே.

318

உதித்தமந் திரத்தினும் ஒடுங்கும் அக்கரத்தினும்

மதித்தமண் டலத்தினும் மறைந்துநின்ற சோதிநீ,

மதித்தமண் டலத்துளே மரித்துநீ இருந்தபின்

சிரித்தமண் டலத்துளே சிறந்ததே சிவாயமே.

319

திருத்திவைத்த சற்குருவைச் சீர்பெற வணங்கிலீர்

குருக்கொடுக்கும் பித்தரே கொண்டுநீந்த வல்லீரோ?

குருக்கொடுக்கும் பித்தரும் குருக்கொள்வந்த சீடனும்

பருத்திபட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே.

320

விழித்தகண் துதிக்கவும் விந்துநாத ஓசையும்,

மேருவும் கடந்தஅண்ட கோளமும் கடந்துபோய்

எழுத்தெலாம் அழிந்துவிட்ட இந்திரசால வெளியிலே

யானும்நீயு மேகலந்த தென்னதன்மை ஈசனே.

321

ஓம்நமோ என்றுமுளே பாவையென்று அறிந்தபின்,

பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின்,

நானும்நீயும் உண்டடா நலங்குலம் அதுஉண்டடா,

ஊணும்ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் உனக்குளே.

322

ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதால்

நன்புலன்க ளாகிநின்ற நாதருக்கது ஏறுமோ

ஐம்புலனை வென்றிடாது அவத்துமே உழன்றிடும்

வம்பருக்கும் ஈவதும் கொடுப்பதும் அவத்தமே.

323

ஆணியான ஐம்புலன்கள் அவையும்மொக்குகள் ஒக்குமோ?

யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கு மொக்குமோ?

வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே உணர்திரேல்

ஊண்உறக்க போகமும் உமக்கெனக்கும் ஒக்குமே.

324

ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்கஅஞ் செழுத்துளே

நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்

கூடுகின்ற பண்டித குணங்கள்மூன்று எழுத்துளே

ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே.

325

புவனசக்க ரத்துளே பூதநாத வெளியிலே,

பொங்குதீப அங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத்

தவனசோமர் இருவரும் தாம்இயங்கும் வாசலில்

தண்டுமாறி ஏறிநின்ற சரசமான வெளியிலே.

326

மவுனஅஞ் செழுத்திலே வாசிஏறி மெள்ளவே

வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின்

அவனும்நானும் மெய்கலந்து அனுபவித்த அளவிலே

அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே.

327

வாளுறையில் வாளடக்கம் வாயுறையில் வாய்வடக்கம்

ஆளுறையில் ஆளடக்கம் அருமைஎன்ன வித்தைகாண்!

தாளுறையில் தாளடக்கம் தன்மையான தன்மையும்

நாளுறையில் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே.

328

வழுத்திடான் அழித்திடான் மாயரூபம் ஆகிடான்

கழன்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும்

துவண்டிடான் அசைந்திடான் தூயதூபம் ஆகிடான்

சுவன்றிடான் உரைத்திடான் சூட்சசூட்ச சூட்சமே.

329

ஆகிகூவென் றேஉரைத்த அட்சரத்தின் ஆனந்தம்

யோகியோகி என்பர்கோடி உற்றறிந்து கண்டிடார்

பூகமாய் மனக்குரங்கு பொங்கும்மங்கும் இங்குமாய்

ஏகம்ஏக மாகவே இருப்பர்கோடி கோடியே.

330

கோடிகோடி கோடிகோடி குவலயத்தோர் ஆதியை

நாடிநாடி நாடிநாடி நாளகன்று வீணதாய்த்

தேடிதேடி தேடிதேடித் தேகமும் கசங்கியே

கூடிகூடி கூடிகூடி நிற்பர்கோடி கோடியே.

331

கருத்திலான் வெளுத்திலான் பரன்இருந்த காரணம்

இருத்திலான் ஒளித்திலான் ஒன்றும்இரண்டும் ஆகிலான்

ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான்

கருத்தில்கீயும் கூவும்உற்றோன் கண்டறிந்த ஆதியே.

332

வாதிவாதி வாதிவாதி வண்டலை அறிந்திடான்

ஊதிஊதி ஊதிஊதி ஒளிமழுங்கி உளறுவான்

வீதிவீதி வீதிவீதி விடைஎருப் பொறுக்குவான்

சாதிசாதி சாதிசாதி சகாரத்தைக் கண்டிடான்.

333

ஆண்மைஆண்மை ஆண்மைஆண்மை ஆண்மைகூறும் அசடரே

காண்மையான வாதிரூபம் காலகால காலமும்

பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும்

நாண்மையாகி நரலைவாயில் நங்குமிங்கும் அங்குமே.

334

மிங்குஎன்ற அட்சரத்தின் மீட்டுவாகிக் கூவுடன்

தூங்கமாகச் சோமனோடு சோமன்மாறி நின்றிடும்

அங்கமா முனைச்சுழியில் ஆகும்ஏகம் ஆகையால்

கங்குலற்றுக் கியானமுற்றுக் காணவாய் சுடரொளி.

335

சுடரெழும்பும் சூட்சமும் கழிமுனையின் சூட்சமும்

அடரெழும்பி ஏகமாக அமர்ந்துநின்ற சூட்சமும்

திடரதான சூட்சமும் திரியின்வாலை சூட்சமும்

கடலெழும்பு சூட்சமும் கண்டறிந்தோன் ஞானியே.

336

ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடிகோடியே

வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே

தானிலா சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்

மூனிலாமல் கோடிகோடி முன்னறிந்த தென்பரே.

337

சூட்சமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே

வீச்சமான வீயிலே விபுலைதங்கும் வாயிலே

கூச்சமான கொம்பிலே குடிஇருந்த கோவிலே

தீட்சையான தீவிலே சிறந்ததே சிவாயமே.

338

பொங்கிநின்ற மோனமும் பொதிந்துநின்ற மோனமும்

தங்கிநின்ற மோனமும் தயங்கிநின்ற மோனமும்

கங்கையான மோனமும் கதித்துநின்ற மோனமும்

திங்களான மோனமும் சிவனிருந்த மோனமே.

339

மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில்

பானமான வீதியில் பசைந்தசெஞ் சுடரினில்

ஞானமான மூலையில் நரலைதங்கும் வாயிலில்,

ஓனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே.

340

உதித்தெழுந்த வாலையும் உயங்கிநின்ற வாலையும்

கதித்தெழுந்த வாலையும் காலையான வாலையும்

மதித்தெழுந்த வாலையும் மறைந்துநின்ற ஞானமும்

கொதித்தெழுந்து கும்பலாகி கூவும்கீயும் ஆனதே.

341

கூவும்கீயும் மோனமாகி கொள்கையான கொள்கையை

மூவிலே உதித்தெழுந்த முச்சுடர் விரிவிலே

பூவிலே நறைகள்போலப் பொருந்திநின்ற பூரணம்

ஆவிஆவி ஆவிஆவி அன்பருள்ளம் உற்றதே.

342

ஆண்மைகூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியை

காண்மையாகக் காண்பீரே கசடறுக்க வல்லீரே

தூண்மையான வாதிசூட்சம் சோபமாகும் ஆகுமே

நாண்மையான வாயிலில் நடித்துநின்ற நாதமே.

343

நாதமான வாயிலில் நடித்துநின்ற சாயலில்

வேதமான வீதியில் விரிந்தமுச் சுடரிலே

கீதமான கீயிலே கிளர்ந்துநின்ற கூவிலே

பூதமான வாயிலைப் புகலறிவன் ஆதியே.

344

ஆவிஆவி ஆவிஆவி ஐந்துகொம்பின் ஆவியே

மேவிமேவி மேவிமேவி மேதினியில் மானிடர்

வாவிவாவி வாவிவாவி வண்டர்கள் அறிந்திடார்

பாவிபாவி பாவிபாவி படியிலுற்ற மாந்தரே.

345

வித்திலே முளைத்தசோதி வில்வளையின் மத்தியில்

முத்திலே ஒளிவதாகி மோனமான தீபமே

நத்திலே திரட்சிபோன்ற நாதனை அறிந்திடார்

வத்திலே கிடந்துழன்ற வாலையான சூட்சமே.

346

மாலையோடு காலையும் வடிந்துபொங்கும் மோனமே

மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே

மூலையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர்

தாலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே.

347

மோனமான வீதியில் முடுகிநின்ற நாதமே

ஈனமின்றி வேகமான வேகம்என்ன வேகமே

கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில்

ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே.

348

உச்சிமத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில்

பச்சியுற்ற சோமனும் பரந்துநின்று லாவவே

செச்சியான தீபமே, தியானமான மோனமே,

கச்சியான மோனமே, கடந்ததே சிவாயமே.

349

அஞ்சுகொம்பில் நின்றுநாதம் ஆலைபோல் எழும்பியே

பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே

செஞ்சுடர் உதித்தபோது தேசிகன் கழன்றுடன்

பஞ்சபூதம் ஆனதே பறந்துநின்ற மோனமே.

350

சடுதியான கொம்பிலே தத்துவத்தின் இயலிலே

அடுதியான ஆவிலே அரன்இருந்த ஊவிலே

இடுதிஎன்ற சோலையில் இருந்தமுச் சுடரிலே

நடுதிஎன்று நாதம்ஓடி நன்குற அமைந்ததே.

351

அமையுமாலின் மோனமும் அரன்இருந்த மோனமும்

சமையும்பூத மோனமும் தரித்திருந்த மோனமும்

இமையும்கொண்ட வேகமும் இலங்கும்உச்சி மோனமும்

தமையறிந்த மாந்தரே சடத்தைஉற்று நோக்கிலார்.

352

பாய்ச்சலூர் வழியிலே பரன்இருந்த சுழியிலே

காய்ச்சகொம்பின் நுனியிலே கனியிருந்த மலையிலே

வீச்சமானது ஏதடா? விரிவுதங்கும் இங்குமே

மூச்சினோடு மூச்சைவாங்கு முட்டிநின்ற சோதியே.

353

சோதிசோதி என்றுநாடித் தோற்பவர் சிலவரே

ஆதிஆதி என்றுநாடும் ஆடவர் சிலவரே

வாதிவாதி என்றுசொல்லும் வம்பரும் சிலவரே

நீதிநீதி நீதிநீதி நின்றிடும் முழுச்சுடர்.

354

சுடரதாகி எழும்பியங்குத் தூபமான காலமே

இடரதாய்ப் புவியும்விண்ணும் ஏகமாய் அமைக்கமுன்

படரதாக நின்றஆதி பஞ்சபூதம் ஆகியே

அடரதாக அண்டம்எங்கும் ஆண்மையாக நின்றதே.

355

நின்றிருந்த சோதியை நிலத்தில்உற்ற மானிடர்

கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்று உலாவுவோர்

கண்டமுற்ற மேன்முனையில் காட்சிதன்னைக் காணுவார்

கன்றிஅற்று நாலைபொங்கி நாதமும் மகிழ்ந்திடும்.

356

வயங்குமோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமும்

கயங்கள்போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே

பயங்கொடின்றி இன்றியே படர்ந்துநின்ற பான்மையை

நயங்கள்கோவென் றேநடுங்கி நங்கையான தீபமே.

357

தீபஉச்சி முனையிலே திவாகரத்தின் கழியிலே

கோபமாறு கூவிலே கொதித்துநின்ற தீயிலே

தாபமான மூலையில் சமைந்துநின்ற சூட்சமும்

சாபமான மோட்சமும் தடிந்துநின்று இலங்குமே.

358

திவாகரம் – சூரிய ஒளி

தேசிகன் சுழன்றதே திரிமுனையின் வாலையில்

வேசமோடு வாலையில் வியன்இருந்த மூலையில்

நேசசந்தி ரோதயம் நிறைந்திருந்த வாயிலில்

வீசிவீசி நின்றதே விரிந்துநின்ற மோனமே.

359

உட்கமல மோனமீதில் உயங்கிநின்ற நந்தியை

விக்கலோடு கீயுமாகி வில்வளைவின் மத்தியில்

முட்பொதிந்தது என்னவே முடுகிநின்ற செஞ்சுடர்

கட்குவைகள் போலவும் கடிந்துநின்ற காட்சியே.

360

உந்தியில் சுழிவழியில் உச்சியுற்ற மத்தயில்

சந்திரன் ஒளிகரணம் தாண்டிநின்ற செஞ்சுடர்

பந்தமாக வில்வளைவில் பஞ்சபூத விஞ்சையாம்

கிந்துபோல கீயில்நின்று கீச்சுமூச்சு என்றதே.

361

செச்சையென்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும்

பச்சையாகி நின்றதே பரவெளியின் பான்மையே

இச்சையான ஊவிலே இருந்தெழுந்த ஈயிலே

உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே.

362

ஆறுமூலைக் கோணத்தில் அமைந்தஒன்ப தாத்திலே

தாறுமென்று நங்கையான நாவியும் தெரிந்திடக்

கூறுமென்று ஐவர்அங்கு கொண்டுநின்ற மோனமே

பாறுகொண்டு நின்றது பரந்ததே சிவாயமே.

363

பறந்ததே கறந்தபோது பாய்ச்சலூரின் வழியிலே

பிறந்ததே பிராணன்அன்றிப் பெண்ணும்ஆணும் அல்லவே

துறந்ததோ சிறந்ததோ தூயதுங்கம் ஆனதோ

இறந்தபோதில் அன்றதே இலங்கிடும் சிவாயமே.

364

அருளிருந்த வெளியிலே அருக்கன்நின்ற இருளிலே

பொருளிருந்த சுழியிலே புரண்டெழுந்த வழியிலே

தெருளிருந்த கலையிலே தியங்கிநின்ற வலையிலே

குருவிருந்த வழியினின்று ஊவும்ஈயும் ஆனதே.

365

ஆனதோர் எழுத்திலே அமைந்துநின்ற ஆதியே

கானமோடு தாலமீதில் கண்டறிவது இல்லையே;

தானும்தானும் ஆனதே சமைந்தமாலை காலையில்

ஏனலோடு மாறுபோல் இருந்ததே சிவாயமே.

366

ஆறுகொண்ட வாரியும் அமைத்துநின்ற தெய்வமும்

தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூரமும்

வீறுகொண்ட மோனமும் விளங்கும் உட்கமலமும்

மாறுகொண்ட ஊவிலே மடிந்ததே சிவாயமே.

367

வாயில்கண்ட கோணமில் வயங்கும்ஐவர் வைகியே

சாயல்கண்டு சார்ந்ததும் தலைமன்னாய் உறைந்ததும்

காயவண்டு கண்டதும் கருவூர்அங்குச் சென்றதும்

பாயும்என்று சென்றதும் பறந்ததே சிவாயமே.

368

பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே

மறந்ததே கவ்வுமுற்ற வாணர்கையின் மேவியே

பிறந்ததே இறந்தபோதில் பீடிடாமற் கீயிலே

சிறந்துநின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே.

369

வடிவுபத்ம ஆசனத்து இருத்திமூல அனலையே

மாருதத்தி னால் எழுப்பி வாசல்ஐந்து நாலையும்

முடிவுமுத்தி ரைப்படுத்தி மூலவீணா தண்டினால்

முளரிஆல யம்கடந்து மூலநாடி ஊடுபோம்.

370

அடிதொடக்கி முடியளவும் ஆறுமா நிலம்கடந்து

அப்புறத்தில் வெளிகடந்த ஆதிஎங்கள் சோதியை

உடுபதிக்கண் அமுதருந்தி உண்மைஞான உவகையுள்

உச்சிபட்டு இறங்குகின்ற யோகிநல்ல யோகியே.

371

உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி நின்றிடம்

மெள்ளவந்து கிட்டிநீர் வினாவவேண்டும் என்கிறீர்

உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம்

கள்ளவாசலைத் திறந்து காணவேண்டும் மாந்தரே.

372

முத்திசித்தி தொந்தமாம் முயங்குகின்ற மூர்த்தியை

மற்றுஉதித்த ஐம்புலன்கள் ஆகுமத்தி அப்புலன்

அத்தர்நித்தர் காள்கண்டர் அன்பினால் அனுதினம்

உச்சரித்து உளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே.

373

மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்றெழுந்த தேவராய்

மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகெலாம்

ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய்த்

தோன்றும்ஓர் எழுத்தினோடு சொல்லலொன்றும் இல்லையே.

374

வெளியுருக்கி அஞ்செழுத்து விந்துநாத சந்தமும்

தளியுருக்கி நெய்கலந்து சகலசுத்தி ஆனதும்

வெளியிலும் அவ்வினையிலும் இருவரை அறிந்தபின்

வெளிகடந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே.

375

மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே

மந்திரங்கள் கற்றுநீர் மரித்தபோது சொல்வீரோ?

மந்திரங்கள் உம்முளே மதித்தநீரும் உம்முளே

மந்திரங்கள் ஆவது மனத்தின்ஐந்து எழுத்துமே.

376

முப்புறத்தில் அப்புறம் முக்கண்ணன்வினைவிலே

சிற்பரத்துள் உற்புனம் சிவாயம்அஞ் செழுத்துமே

தற்பரம் உதித்துநின்ற தாணுஎங்கும் ஆனபின்

இப்புறம் ஒடுங்குமோடி எங்கும்லிங்கம் ஆனதே.

377

ஆடிநின்ற சீவன்ஓர் அஞ்சுபஞ்ச பூதமோ

கூடிநின்ற சோதியோ, குலாவிநின்ற மூலமோ?

நாடுகண்டு நின்றதோ, நாவுகற்ற கல்வியோ?

வீடுகண்டு விண்டிடினி வெட்டவெளியும் ஆனதே.

378

உருத்தரித்த போதுசீவன் ஒக்கநின்ற உண்மையும்

திருத்தமுள்ளது ஒன்றிலும் சிவாயம்அஞ் செழுத்துமாம்.

இருத்துநின்று உறுத்தடங்கி ஏகபோகம் ஆனபின்

கருத்தினின்று உதித்ததே கபாலம்ஏந்தும் நாதனே.

379

கருத்தரித்து உதித்தபோது கமலபீடம் ஆனதும்

கருத்தரித்து உதித்தபோது காரணங்கள் ஆனதும்

கருத்தரித்து உதித்தபோது காண்இரண்டு கண்களாய்க்

கருத்தினின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே.

380

ஆனவன்னி மூன்றுகோணம் ஆறிரண்டு எட்டிலே

ஆனசீவன் அஞ்செழுத்து அகாரமிட்டு அலர்ந்ததும்

ஆனசோதி உண்மையும் அனாதியான உண்மையும்

ஆனதாய் தானதாய் அவலமாய் மறைந்திடும்.

381

ஈன்றெழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே

நான்றபாம்பின் வாயினால் நாலுதிக்கும் ஆயினான்

மூன்றுமூன்று வளையமாய் முப்புரம் கடந்தபின்

ஈன்றெழுந்த அவ்வினோசை எங்குமாகி நின்றதே.

382

எங்கும்எங்கும் ஒன்றலோ ஈரேழ்லோகமும் ஒன்றலோ?

அங்கும்இங்கும் ஒன்றலோ அனாதியானது ஒன்றலோ?

தங்குதாபரங்களும் தரித்தவாரது ஒன்றலோ?

உங்கள்எங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே.

383

அம்பரத்தில் ஆடும்சோதி யானவன்னி மூலமாம்

அம்பரமும் தம்பரமும் அகோரமிட்டு அலர்ந்ததே

அம்பரக் குழியிலே அங்கமிட்டு ருக்கிட

அம்பரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே.

384

வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை நாவிலே

ஓடிநின்று உருவெடுத்து உகாரமாய் அலர்ந்ததும்

ஆடிஆடி அங்கமும் அகப்படக் கடந்தபின்

கூடிநின்று உலாவுவமே குருவிருந்த கோலமே.

385

விட்டடி விரைத்ததோ அவ்வேர்உருக்கி நின்றதோ

எட்டிநின்ற சீவனும் ஈரேழ்லோகம் கண்டதோ?

தட்டுருவம் ஆகிநின்ற சதாசிவத்து ஒளியதோ

வட்டவீடு அறிந்தபேர்கள் வானதேவர் ஆவரோ.

386

வானவர் நிறைந்தசோதி மானிடக் கருவிலே

வானதேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வானவர்

வானகமும் மண்ணகமும் வட்டவீடு அறிந்தபின்

வானெலாம் நிறைந்தமன்னு மாணிக்கங்கள் ஆனவே.

387

பன்னிரண்டு கால்நிறுத்தி பஞ்சவண்ணம் உற்றிடின்

மன்னியே வெளிக்குள்நின்று வேறிடத்து அமர்ந்ததும்

சென்னியாம் தலத்திலே சீவன்நின்று இயங்கிடும்

பன்னிஉன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆனதே.

388

உச்சகண்டு கண்கள்கட்டி உண்மைகண்டது எவ்விடம்?

மச்சுமாளி கைக்குளே மானிடம் கலப்பிரேல்

எச்சிலான வாசலும் ஏகபோகம் ஆய்விடும்

பச்சைமாலும் ஈசனும் பரத்ததே சிவாயமே.

389

வாயிலிட்டு நல்லுரிசை அட்சரத் தொலியிலே

கோயிலிட்டு வாவியும் அங்கொம்பிலே உலர்ந்ததும்

ஆயிலிட்ட காயமும் அனாதியிட்ட சீவனும்

வாயுவிட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே.

390

அட்சரத்தை உச்சரித்து அனாதியங்கி மூலமாய்

அட்சரத்தை யும்திறந்து அகோரமிட்டு அலர்ந்ததும்

மட்சரத்தில் உட்கரம் அகப்படக் கடந்தபின்

அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே.

391

கோயிலும் குளங்களும் குறியினிற் குருக்களாய்

மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர்,

ஆயனை அரனையும் அறிந்துணர்ந்து கொள்விரேல்

தாயினும் தகப்பனோடு தான்அமர்ந்தது ஒக்குமே.

392

கோயில் எங்கும் ஒன்றலோ, குளங்கள்நீர்கள் ஒன்றலோ?

தேயுவாயு ஒன்றலோ, சிவனும்அங்கே ஒன்றலோ?

ஆயசீவன் எங்குமாய் அமர்ந்துதவாரது ஒன்றலோ?

காயம்ஈதறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே.

393

காதுகண்கள் மூக்குவாய் கலந்தவாரது ஒன்றலோ?

சோதியிட்டு எடுத்ததும் சுகங்கள்அஞ்சும் ஒன்றலோ?

ஓதிவைத்த சாத்திரம் உதித்தவாரது ஒன்றலோ?

நாதவீடு அறிந்தபேர்கள் நாதர்ஆவர் காணுமே.

394

அவ்வுதித்த அட்சரத்தின் உட்கலந்த அட்சரம்

சவ்வுதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால்

மவ்வுதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள்,

உவ்வுதித்தது அவ்வுமாய் உருத்தரித்தது உண்மையே.

395

அகாரமென்னும் அக்கரத்தில் அக்கரம் ஒழிந்ததோ?

அகாரமென்னும் அக்கரத்தில் அவ்வுவந்து உதித்ததோ?

உகாரமும் அகாரமும் ஒன்றிநன்று நின்றதோ?

விகாரமற்ற ஞானிகாள், விரிந்துரைக்க வேணுமே.

396

சத்தியாவது உன்னுடல், தயங்குசீவன் உட்சிவம்

பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே.

சுத்திஐந்து கூடம்ஒன்று சொல்லிறந்த தோர்வெளி

சத்திசிவமும் ஆகிநின்று தண்மையாவது உண்மையே.

397

சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளே

முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மேட்டினில்

மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்

உச்சரிக்கும் மந்திரம் ஓம்நம சிவாயமே.

398

அக்கரம் அனாதிஅல்ல ஆத்துமம் அனாதிஅல்ல

புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதிஅல்ல

தக்கமிக்க நூல்களும் சாத்திரமும் அனாதிஅல்ல

ஒக்கநின்று உடன்கலந்த உண்மைகாண் அனாதியே.

399

மென்மையாகி நின்றதேது விட்டுநின்று தொட்டதேது?

உண்மையாக நீயுரைக்க வேணும்எங்கள் உத்தமா?

பெண்மையாக நின்றதொன்று விட்டுநின்று தொட்டதை

உண்மையாய் உரைக்கமுத்தி உட்கலந்து இருந்ததே.

400

அடக்கினால் அடங்குமோ அண்டம்அஞ் செழுத்துளே?

உடக்கினால் எடுத்தகாயம் உண்மையென்று உணர்ந்துநீ

சடக்கிலாறு வேதமும் தரிக்கஓதி லாமையால்

விடக்குநாயு மாயவோதி வேறுவேறு பேசுமோ?

401

உடக்கு – உள்மர்மம்

உண்மையான சக்கரம் உபாயமாய் இருந்ததும்

தண்மையான காயமும் தரித்தரூபம் ஆனதும்

வெண்மையாகி நீரலே விளைந்துநின்ற தானதும்

உண்மையான ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே.

402

எள்ளகத்தில் எண்ணெய்போல் எங்குமாகி எம்பிரான்

உள்ளகத்தி லேயிருக்க ஊசலாடும் மூடர்காள்

கொள்ளைநாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லீரேல்

வள்ளலாகி நின்றசோதி காணலாகும் மெய்மையே.

403

வேணும் என்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே

தாணுஉண்டங்கு என்கிறீர் தரிக்கிலீர், மறக்கிலீர்

தாணுவொன்று மூலநாடி தன்னுள்நாடி உம்முளே

காணும்அன்றி வேறுயாவும் கனாமயக்கம் ஒக்குமே.

404

வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவக்கிறீர்

உழக்கிலாது நாழியான வாறுபோலும் ஊமைகாள்,

உழக்குநாலு நாழியான வாறுபோலும் உம்முளே

வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள்ஈசன் மன்னுமே.

405

அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம்

உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம்

மகாரமானது அம்பலம் வடிவானது அம்பலம்

சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே.

406

சக்கரம் பறந்தோடி சக்கரம்மேல் பலகையாய்

செக்கிலாடும் எண்ணெய்போலச் சிங்குவாயு தேயுவும்

உக்கிலே ஒளிக்கலந்து உகங்களும் கலக்கமாய்ப்

புக்கிலே புகுந்தபோது போனவாறது எங்ஙனே?

407

வளர்ந்தெழுந்த கொங்கைதன்னை மாயமென்று எண்ணிநீர்

அருள்கொள்சீவ ராருடம்பை உண்மையகத் தேர்வீர்காள்

விளங்குஞானம் மேவியே மிக்கோர்சொல்லலைக் கேட்பிரேல்

களங்கமற்று நெஞ்சுளே கருத்துவந்து புக்குமே.

408

நாலுவேதம் ஓதுகின்ற ஞானம்ஒன்று அறிவீரோ?

நாலுசாமம் ஆகியே நவின்றஞான போதமாய்

ஆலம்உண்ட கண்டனும் அயனும்அந்த மாலுமாய்ச்

சாலஉன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே.

409

சுற்றும்என்று சொல்வதும் சுருதிமுடிவில் வைத்திடீர்

அத்தம்நித்தம் ஆடியே அர்ந்திருந்தது எவ்விடம்?

பத்திமுற்றி அன்பர்கள் பரத்தில்ஒன்று பாழது,

பித்தரே, இதைக்கருதி பேசலாவது எங்ஙனே?

410

எங்ஙனே விளக்கதற்கு ஏற்றவாறு நின்றுதான்

எங்ஙனே எழுந்தருளி ஈசன்நேசர் என்பரேல்

அங்ஙனே இருந்தருளும் ஆதியான தற்பரம்

சிங்கம்அண்மி யானைபோலத் திரிமலங்கள் அற்றவே.

411

அற்றவுள் அகத்தையும் அலகிடும் மெழுக்கிடும்

மெத்ததீபம் இட்டதில் ப்ரவாதபூசை ஏய்த்தியே

நற்றவம் புரிந்தும்ஏக நாதர்பாதம் நாடியே

கற்றிருப்ப தேசரிதை கண்டுகொள்ளும் உம்முளே.

412

பார்த்துநின்றது அம்பலம் பரமன்ஆடும் அம்பலம்

கூத்துநின்றது அம்பலம் கோரமானது அம்பலம்

வார்த்தையானது அம்பலம் வன்னியானது அம்பலம்

சீற்றமாவது அம்பலம் தெளிந்ததே சிவாயமே.

413

சென்றுசென்று இடந்தொறும் சிறந்தசெம்பொன் அம்பலம்

அன்றும்இன்றும் நின்றதோர் அனாதியான அம்பலம்

என்றும்என்றும் இருப்பதோர் இறுதியான அம்பலம்

ஒன்றிஒன்றி நின்றதுள் ஒனிந்ததே சிவாயமே.

414

தந்தையாய் தருமம்நீ சகலதே வதையும்நீ

சிந்துநீ தெளிவும்நீ சித்திமுத்தி தானும்நீ

விந்துநீ விளைவுநீ மேலதாய் வேதம்நீ

எந்தைநீ இறைவன்நீ என்னை ஆண்ட ஈசனே.

415

எப்பிறப்பி லும்பிறந்து இறந்துஅழிந்த ஏழைகாள்

இப்பிறப்பி லும்பிறந்து என்னநீறு பூசுறீர்

அப்புடன் மலம்அறுத்தே ஆசைநீக்க வல்லீரேல்

செப்புநாத ஓசையில் தெளிந்துகாணல் ஆகுமே.

416

அப்பு – நீர்

எட்டுயோகம் ஆனதும் இயங்குகின்ற நாதமும்

எட்டுஅக்க ரத்துளே உகாரமும் அகாரமும்

விட்டலர்ந்து மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய்

அட்ட அட்சரத்துளே அமர்ந்ததே சிவாயமே.

417

பிரான்பிரான் என்றுநீர் பிதற்றுகின்ற மூடரே

பிரானைவிட்டு எம்பிரான் பிரிந்தவாறது எங்ஙனே?

பிரானுமாய்ப் பிரானுமாயப் பேருலகந் தானுமாய்

பிரானிலே முளைத்தெழுந்த பித்தர்காணும் உம்முடல்.

418

அந்த – முடிவு

ஆதியில்லை அந்தமில்லை ஆனநாலு வேதமில்லை

சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிறந்த தூவெளி

நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும்

ஆதிகண்டு கொண்டபின் அஞ்செழித்தும் இல்லையே.

419

அம்மையப்பன் அப்பன்நீர் அமர்ந்தபோது அறிகிலீர்

அம்மையப்பன் ஆனநீர் ஆதியான் பாசமே

அம்மையப்பன் நின்னைஅன்றி யாருமில்லை ஆனபின்

அம்மையப்பன் நின்னைஅன்றி யாருமில்லை இல்லையே.

420

முந்தஓர் எழுத்துளே முளைத்தெழந்த செஞ்சுடர்

அந்தஓர் எழுத்துளே பிறந்துகாயம் ஆனதும்

அந்தஓர் எழுத்துளே ஏகமாகி நின்றதும்

அந்தஓர் எழுத்தையும் அறிந்துணர்ந்து கொள்ளுமே.

421

கூட்டம்இட்டு நீங்களும் கூடிவேதம் ஓதுறீர்

ஏட்டகத்துள் ஈசனும் இருப்பதென்ன எழுத்துளே?

நாட்டம் இட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே

ஆட்டகத்துள் ஆடிடும் அம்மைஆணை உண்மையே.

422

ஆட்டகம் – ஆனந்த தாண்டவம் ஆடுகின்ற இடம்.

காக்கை மூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம்

நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞானநாடி ஊடுபோய்

ஏக்கைநோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில்

பார்த்தபார்த்த திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆனதே.

423

ஏக்கை – ஏக்கம்

ஓசைஉள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே

வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர்

பூசைக்கு வைத்தகல்லில் பூவும்நீரும் சாத்துறீர்

ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே?

424

ஓட்டுவைத்துக் கட்டிநீர் உபாயமான மந்திரம்

கட்டுபட்ட போதிலும் கருத்தன்அங்கு வாழுமோ?

எட்டும்எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை

வட்டம்இட்ட யவ்விலே வைத்துணர்ந்து பாருமே.

425

இந்தஊரில் இல்லைஎன்று எங்குநாடி ஓடுறீர்?

அந்தஊரில்ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே?

அந்தமான பொந்திலாறில் மேவிநின்ற நாதனை

அந்தமான சீயில்அவ்வில் அறிந்துணர்ந்து கொள்ளுமே.

426

புக்கிருந்த தும்முளே பூரியிட்ட தோத்திரம்

தொக்குசட்சு சிங்குவை ஆக்கிராணன் சூழ்ந்திடில்

அக்குமணியும் கொன்றைசூடி அம்பலத்துள் ஆடுவார்

மிக்கசோதி அன்புடன் விளம்பிடாது பின்னையே.

427

பின்னெழுந்த மாங்கிசத்தைப் பேதையர் கண்பற்றியே

பின்புமாங்கி சத்தினால் போகமாய்கை பண்ணினால்

துன்புறும் வினைகள்தாம் சூழ்ந்திடும்பின் என்றலோ

அன்பராய் இருந்தபேர்கள் ஆறுநீந்தல் போல்வீடே.

428

விட்டிருந்த தும்முளே விசனமற்று இருக்கிறீர்

கட்டிவைத்த வாசல்மூன்று காட்சியான வாசல்ஒன்று

கட்டிவைத்த வாசலும் கதவுதாள் திறந்துபோய்த்

திட்டமான ஈசனைத் தெளியுமாங் கிசத்துளே.

429

ஆகும் ஆகும் ஆகுமே அனாதியான அப்பொருள்

ஏகர்பாதம் நாடிநாடி ஏத்திநிற்க வல்லீரேல்

பாகுசேர்மொழி உமைக்குப் பாலனாகி வாழலாம்

வாகுடன் நீர்வன்னியை சமருவியே வருந்திடீர்.

430

வாகு – வலிமை

பாலகனாக வேணும்என்று பத்திமுற்றும் என்பிரேல்

நாலுபாதம் உண்டதில் நினைந்திரண்டு அடுத்ததால்

மூலநாடி தன்னில்வன்னி மூட்டிஅந்த நீருண

ஏலவார் குழலியூடே ஈசர்பாதம் எய்துமே.

431

எய்துநின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்தவல்லீரேல்

எய்தும் உண்மைதன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும்

மைஇலங்கு கண்ணிபங்கள் வாசிவானில் ஏறிமுன்

செய்தவல் வினைகளும் சிதறும்அஃது திண்ணமே.

432

பங்கன் – பார்வதியை இடப்பாகத்தில் உடையவன்

வாசி – காற்று

திண்ணம்என்று சேதிசொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ

அண்ணல் அன்புளன்புருகி அறிந்து நோக்கலாயிடும்

மண்ணும் அதிரவிண்ணும் அதிரவாசியை நடத்திடில்

நண்ணிஎங்கள் ஈசனும் நமதுகடலில் இருப்பனே.

433

இருப்பன் எட்டெட்டுஎண்ணிலே இருந்துவேற தாகுவன்

நெருப்பவாயு நீருமண்ணும் நீள்விசும்பும் ஆகுவன்

கருப்புகுந்து காலமே கலந்தசோதி நாதனைக்

குருப்புனலில் மூழ்கினார் குறித்துணர்ந்து கொள்வரே.

434

கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்புணர்ந்த ஞானிகள்

அள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டிவேண்டி ஏத்தினால்

உள்ளுமாய்ப் புறம்புமாம் உணர்வதற்கு உணர்வுமாய்த்

தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே.

435

தெளிந்தநற் சரியைதன்னில் சென்று சாலோகம்பெறும்

தெளிந்தநற் கிரியைபூசை சேரலாம் சாமீபமே

தெளிந்தநல்ல யோகம் தன்னில் சேரலாகும் சாரூபம்

தெளிந்தஞானம் நான்கிலும் சேரலாம் சாயுச்யமே.

436

சேருவார்கள் ஞானம்என்று செப்புவர் தெளிவுளோர்

சேருவார்கள் நாலுபாதச் செம்மைஎன்ற தில்லையே

சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்

சேருமாறு கண்டுநாலும் செய்தொழில் திடப்படே.

437

திறமலிக்கு நாலுபாதம் செம்மையும் திடப்படார்

அறிவிலிகள் தேசநாடி அவத்திலே அலைவதே

குறியதனைக் காட்டிஉள் குறித்துநோக்க வல்லீரேல்

வெறிகமழ் சடையுடையோன் மெய்ப்பதம் அடைவரே.

438

அடைவுளோர்கள் முத்தியே அறிந்திடாத மூடரே,

படையுடைய தத்துவமும் பாதகங்கள் அல்லவோ?

மடைதிறக்க வாரியின் மடையில் ஏறு மாறுபோல்

உடலில்மூல நாடியைஉயர ஏற்றி ஊன்றிடே.

439

ஊன்றிஏற்றி மண்டலம் உருவிமூன்று தாள்திறந்து

ஆன்றுதந்தி ஏறிடில் அமுதம்வந்து இறங்கிடும்

நான்றிதென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும்

ஆன்றியும் உயிர்ப்பரம் பொருந்திவாழ் வதாகவே.

440

தந்தி – நாடி

ஆகமூல நாடியில் அனல்எழுப்பி அன்புடன்

மோகமான மாயையில் முயல்வதும் ஒழிந்திடில்

தாகமேரு நாடியே அனேகமான வாறுபோல்

ஏகர்பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே.

441

அறிந்துநோக்கி உம்முளே அயந்தியானம் உம்முளே

பிறந்திராமல் ஏகர்பாதம் பெற்றிருப்பது உண்மையே

அறிந்துமீள வைத்திடா வகையுமரணம் ஏத்தினார்

செறிந்துமேலை வாசலைத் திறந்துபாரும் உம்முளே.

442

சோதியாக உம்முளே தெளிந்துநோக்க வல்லீரேல்

சோதிவந்து உதித்திடும் துரியகீதம் உற்றிடும்

ஆதி சக்கிரத்தினில் அமர்ந்துதீர்த்தம் ஆடுவன்

பேதியாது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே.

443

திருவுமாகிச் சிவனுமாகித் தெளிந்துளோர்கள் சிந்தையில்

மருவிலே எழுந்துவீசும் வாசனைய தாகுவன்

கருவிலே விழுந்தெழுந்த கந்மவாத னைஎலாம்

பரிதமுன் இருளதாய் பரியும்அங்கி பாருமே.

444

பரிதி – சூரியன் அங்கி – நெருப்பு

பாரும்எந்தை ஈசன்வைத்த பண்பிலே இருந்துநீர்

சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள்

வேரையும் முடியையும் விரைந்துதேடி மால்அயன்

பார்இடந்து விண்ணிலே பிறந்தும்கண்டது இல்லையே.

445

மால் – திருமால் பார் – உலகம் இடந்து – தோண்டி

கண்டிலாது அயன்மால்என்று காட்சியாகச் சொல்லுறீர்

மிண்டினால் அரசனும் மேவலாய் இருக்குமோ?

தொண்டுமட்டும் அன்புடன் தொழுதுநோக்க வல்லீரேல்

பண்டுமுப் புரம்எரிந்த பத்திவந்து முற்றுமே.

446

முற்றுமே அவன்ஒழிந்து முன்பின்ஒன்றும் காண்கிலேன்

பற்றிலாத ஒன்றுதன்னை பற்றிநிற்க வல்லது

கற்றிதாலோ ஈசர்பாதம் காணலா யிருக்குமோ?

பெற்றபேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே.

447

கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த காலந்தன்னுளே

வாட்டமுள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும்

வீட்டிலே வெளியதாகும் விளங்கவந்து நேரிடும்

கூட்டிவன்னி மாருதம் குயத்தைவிட்டு எழுப்புமே.

448

எழுப்பி மூலநாடியை இதப்படுத்த லாகுமோ

மழுப்பிலாத சபையைநீர் வலித்துவாங்க வல்லீரேல்

சுழுத்தியும் கடந்துபோய் சொப்பனத்தில் அப்புறம்

அழுத்திஓர் எழுத்துளே அமைப்பதுஉண்மை ஐயனே.

449

அல்லதில்லை என்றுதான் ஆவியும் பொருளுடல்

நல்லஈசர் தாள்இணைக்கும் நாதனிக்கும் ஈந்நிலை

என்றும்என்னுள் நேசமும் வாசியை வருந்தினால்

தொல்லையாம் வினைவிடென்று தூரதூரம் ஆனதே.

450

ஆனதே பதியது உயிர் அற்றதே பசுபாசம்

போனவே மலங்களும் புலன்களும் வினைகளும்

கானகத்தில் இட்டதீயில் காற்றுவந்து அடுத்ததோ?

ஊனகத்தில் வாயுஉன்னி ஒன்றியே உலாவுமே.

451

உலாவும் உவ்வும் அவ்வுமாய் உதித்தடர்ந்து நின்றதும்

உலாவிஐம் புலன்களும் ஒருதலத்து இருந்திடும்

நிலாவும்அங்கு நேசமாகி நின்றும் அமுதம்உண்டுதாம்

உலாவும் எங்கள் ஈசனைக் குறித்துணர்ந்து கும்பிடே.

452

கும்பிடும் கருத்துளே குகனைஐங் கரனையும்

நம்பியே இடம்வலம் நமக்கரித்து நாடிட

எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவனைத்

தும்பிபோல வாசகம் தொடர்ந்துசோம்பி நீங்குமே.

453

நீங்கும்ஐம் புலன்களும் நிறைந்தவல் வினைகளும்

ஆங்காரமாம் ஆசையும் அருந்தடந்த பாதமும்

ஓங்காரத்தின் உள்ளிருந்து ஒன்பதொழிந் தொன்றிலத்

தூங்காஈசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே.

454

கருக்கலந்த காலமே கண்டுநின்ற காரணம்

உருக்கலந்த போதலோ உன்னைநான் உணர்ந்தது

விரக்கில்என் மறைக்கில்என் வினைக்கிசைந்த போதெலாம்

உருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ?

455

ஞானநூல்கள் தேடியே நவின்றஞான யோகிகாள்,

ஞானமான சோதியை நாடிஉள் அறிகிலீர்

ஞானம்ஆகி நின்றதோர் நாதனை அறிந்தபின்

ஞானம்அல்லது இல்லைவேறு நாம் உரைத்த துண்மையே

456

கருத்தரிப்ப தற்குமுன் காயம்நின்றது எவ்விடம்?

உருத்தரிப்ப தற்குமுன் உயிர்ப்புநின்றது எவ்விடம்?

மருட்பொதிந்த சிந்தையில் மயக்கம்நின்றது எவ்விடம்?

விருப்புணர்ந்த ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே.

457

கருவினில் கருவதாய் எடுத்தஏழு தோற்றமும்

இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும்

மறுவினைப் பிறவிமூன்று காலமும் வகுத்தபின்

உறுவினைப்பயன் இதென்று உணர்ந்தஞானி சொல்லுமே.

458

வாயில்எச்சில் போகவே நீர்குடித்துத் துப்புவீர்

வாயிருக்க எச்சில்போன வாறதென்ன எவ்விடம்?

வாயில்எச்சில் அல்லவோ நீர்உரைத்த மந்திரம்?

நாயினை அறிந்தபோது நாடும்எச்சில் ஏதுகொல்?

459

தொடக்கதென்று நீர்விழத் தொடங்குகின்ற ஊமர்காள்

தொடக்கிருந்தது எவ்விடம்? சுத்தியானது எவ்விடம்?

தொடக்கிருந்த வாறறிந்து சுத்தபண்ண வல்லீரேல்

தொடக்கிலாத சோதியைத் தொடர்ந்துகாண லாகுமே.

460

மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில்

சாதிபேத மாம்உருத் தரிக்கும்ஆறு போலவே

வேதம்ஓது வானுடன் புலைச்சிசென்று மேவிடில்

பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே.

461

மேதி – எருமை

வகைக்குலங் கள்பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள்

தொகைக்குலங் கள்ஆனநேர்மை நாடியே உணர்ந்தபின்

மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறுஒன்று கண்டிலீர்

நகைக்குமாறு மனு எரிக்கநாளும்நாளும் நாடுவீர்.

462

ஓதும்நாலு வேதமும் உரைத்த சாத்திரங்களும்

பூதத்தத்து வங்களும் பொருந்தும் ஆகமங்களும்

சாதிபேத உண்மையும் தயங்குகின்ற நூல்களும்

பேதபேதம ஆகியே பிறந்துஉழன்று இருந்ததே.

463

அங்கலிங்கம் பூண்டுநீர் அகண்டபூசை செய்கிறீர்

அங்கலிங்கம் பூண்டுநீர் அமர்ந்திருந்த மார்பனே

எங்கும்ஓடி எங்கும்எங்கும் ஈடழிந்து மாய்கிறீர்

செங்கல்செம்பு கல்லெலாம் சிறந்துபார்க்கும் மூடரே.

464

தீட்டம்தீட்டம் என்றுநீர் தினமும்மூழ்கும் மூடரே

தீட்டமாகி அல்லவோ திரண்டுகாயம் ஆனதும்

பூட்டகாயம் உம்முளே புகழுகின்ற பேயரே

தீட்டுவந்து கொண்டலோ தெளிந்ததே சிவாயமே.

465

உந்திமேலே நாலுமூன்று ஓம்நமசி வாயமாம்

சந்திசந்தி என்றுநீர் சாற்றுகின்ற பேயரே

மூந்தவந்து நம்முளே மூலநாடி ஊடுபோய்

அந்திசந்தி அற்றிடம் அறிந்துணர்ந்து பாருமே.

466

வன்னிமூன்று தீயினில் வாழும்எங்கள் நாதனும்

கன்னியான துள்ளிருக்கக் காதல்கொண்டது எவ்விடம்

சென்னிநாலு கையிரண்டு சிந்தையில் இரண்டிலொன்று

உன்னியுன்னி நம்முளே உய்த்துணர்ந்து பாருமே.

467

தொண்டுசெய்து நீங்களும் சூழஓடி மாள்கிறீர்

உண்டுஉழன்று நும்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர்

வண்டுலாவு சோலைசூழ வாழும்எங்கள் நாதனும்

பண்டுபோல நும்முளே பகுத்திருப்பன் ஈசனே.

468

பரம்உனக்கு எனக்குவேறு பயம்இல்லை பாரையா

கரம்உனக்கு நித்தமும் குவித்திடக் கடமையாம்

சிரமுருக்கி அமுதளித்த சீருலாவும் நாதனே

உரம்எனக்கு நீஅளித்த உண்மைஉண்மை உண்மையே.

469

என்அகத்தில் என்னைநான் எங்கும்ஓடி நாடினேன்

என்அகத்தில் என்னைஅன்றி ஏதும்ஒன்று கண்டிலேன்

மின்எழுப்பி விண்ணகத்தின் மின்ஒடுங்கு மாறுபோல்

என்அகத்துள் ஈசனோடு யானும்அல்ல தில்லையே.

470

இடங்கள்பண்ணி சுத்திசெய்தே இட்டபீட மீதிலே

அடங்கநீறு பூசல்செய்து அருந்தவங்கள் பண்ணுவீர்

ஒடுங்குகின்ற நாதனார் உதிக்கும்ஞானம் எவ்விடம்?

அடங்குகின்றது எவ்விடம்? அறிந்துபூசை செய்யுமே.

471

புத்தகங் களைசுமந்து பொய்களைப் பிதற்றுவீர்.

செத்திடம் பிறந்திடம் அதுஎங்ஙன்என்று அறிகிலீர்

அத்தனைய சிந்தனை அறிந்துநோக்க வல்லீரேல்

உத்தமத்துள் ஆயசோதி உணரும்போகம் ஆகுமே.

472

அருளிலே பிறந்துநின்று மாயைரூபம் ஆகியே

இருளிலே தயங்குகின்ற ஏழைமாந்தர் கேண்மினோ.

பொருளிலே தவம்புனைந்து பொருந்திநோக்க வல்லீரேல்

மருள்அதுஏது? வன்னியின் மறைந்ததே சிவாயமே.

473

தன்மசிந்தை ஆம்அளவும் தவமறியாத் தன்மையாய்க்

கன்மசிந்தை வெயில்உழன்று கருத்தழிந்த கசடரே,

சென்மம்சென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை

நன்மையாக உம்முளே நயந்துகாண வேணுமே.

474

கள்ளவுள்ள மேயிருக்கக் கடந்தஞானம் ஓதுவீர்

கள்ளம்உள் அறுத்தபோது கதிஇதன்றிக் காண்கிலீர்?

உள்ளமே விளக்கிநித்தம் ஒளியணுக வல்லீரேல்

தெள்ளு ஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே.

475

காணவேண்டும் என்றுநீர் கடல்மலைகள் ஏறுவீர்

ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே?

வேணும் என்று அவ்வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல்

தாணுவாக நின்ற சீவன் தான்சிவம் அதாகுமே.

476

தாணு – பரம்பொருள்

அணுவினோடு அகண்டமாய் அளவிடாத சோதியைக்

குணமதாக உம்முளே குறித்துநோக்கின் முத்தியாம்

மிணமிணென்று விரலைஎண்ணி மீளொணா மயக்கமாய்த்

துணிவிலாத படியினால் தொடர்ந்து பூசை செய்குவீர்.

477

எச்சில்எச்சில் என்றுநீர் இடைந்திருக்கும் ஏழைகாள்

துச்சில்எச்சில் அல்லவோ தூயகாயம் ஆனதும்

வைத்தெச்சில் தேனலோ, வண்டின்எச்சில் பூவலோ?

கைச்சுதாடல் வைத்துடன் கறந்தபாலும் எச்சிலே!

478

சுதா – பசுவின் முலைக்காம்பு

தீர்த்தலிங்க மூர்த்திஎன்று தேடிஓடும் தீதரே

தீர்த்தலிங்கம் உள்ளில்நின்ற சீவனைத் தெளியுமே

தீர்த்தலிங்கம் உம்முளே தெளிந்துகாண வல்லீரேல்

தீர்த்தலிங்கம் தான்அதாய்ச் சிறந்ததே சிவாயமே.

479

ஆடுகொண்டு கூறுசெய்து அமர்ந்திருக்கும் ஆறுபோல்

தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே

நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே

போடுதர்ப்ப பூசைஎன்ன பூசைஎன்ன பூசையோ?

480

என்னை அற்பநேரமும் மறக்கிலாத நாதனே

ஏகனே இறைவனே இராசராச ராசனே

உன்னை அற்ப நேரமும் ஒழிந்திருக்க லாகுமே

உனதுநாமம் எனதுநாவில் உதவிசெய்வீர் ஈசனே.

481

எல்லையற்று நின்றசோதி ஏகமாய் எரிக்கவே

வல்லபூர ணப்பிரகாசர் ஏகதபோகம் ஆகியே

நல்லஇன்பம் மோனசாக ரத்திலே அழுத்தியே

நாடொணாத அமிர்தம்உண்டு நான்அழிந்து நின்றநாள்.

482

ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை

ஊனைகாட்டி உம்முளே உகந்துகாண வல்லீரேல்

ஊனகாயம் ஆளலாம் உலகபாரம் ஆளலாம்

கானநாடும் ஆளலாம் வண்ணநாடர் ஆணையே.

483

நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து

வத்தியே கதறியே கண்கள்மூடி என்பயன்?

எத்தனைபேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ?

அத்தனுக்கிது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே?

484

எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை

மட்டதாக உம்முளே மதித்துநோக்க வல்லீரேல்

கட்டமான பிறவிஎன் கருங்கடல் கடக்கலாம்

இட்டமான ஒளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே.

485

உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்

தண்மையான மந்திரம் சமைந்துரூபம் ஆகியே

வெண்மையான மந்திரம் விளைந்துநீற தானேதே

உண்மையான மந்திரம் அதொன்றுமே சிவாயமே.

486

தச்சுவாயில் உச்சிமேல் ஆயிரம் தலங்களாய்

முச்சுடரும் மூவிரண்டும் மூண்டெழுந்த தீச்சுடர்

வச்சிரம் அதாகியே வளர்ந்துநின்றது எவ்விடம்?

இச்சுடரும் இந்திரியமும் ஏகமானது எங்ஙனே?

487

ஏகன் – தனிமுதன்மையானவன்

வல்லவாசல் ஒன்பதும் மறுத்தடைத்த வாசலும்

சொல்லும்வாசல் ஓர்ஐந்தும் சொல்லவிம்மி நின்றதும்

நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்

எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்ப தில்லையே.

488

வண்டுபூ மணங்களோடு வந்திருந்த தேன்எலாம்

உண்டுளே அடங்கும்வண்ணம் ஓதுலிங்க மூலமாய்க்

கண்டுகண்டு வேரிலே கருத்தொடுங்க வல்லீரேல்

பண்டுகொண்ட வல்வினை பறந்திடும் சிவாயமே.

489

ஓரெழுத்தில் லிங்கமாக ஓதும்அக் கரத்துளே

ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்

மூவெழுத்தும் மூவராய் முளைத்தெழுந்த சோதியை

நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே.

490

தூரதூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும்

பாரபார பாரம்என்று பரிந்திருந்த பாவிகாள்!

நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லீரேல்

தூரதூர தூரமும் தொடர்ந்துகூடல் ஆகுமே.

491

குண்டலங்கள் பூண்டுநீர் குளங்கள்தோறும் மூழ்குறீர்

மண்டுகங்கள் போலநீர் மனத்தின் மாசறுக்கிலீர்;

மண்டைஏந்து கையரை மனத்திருந்த வல்லீரேல்

பண்டைமால் அயன்தொழப் பணிந்து வாழலாகுமே.

492

மண்டுகம் – தவளை

கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல்

ஆடிரண்டு கன்றைஈன்ற அம்பலத்துள் ஆடுதே;

மாடுகொண்டு வெண்ணெய்உண்ணும் மானிடப் பசுக்களே!

வீடுகண்டு கொண்டபின்பு வெட்டவெளியும் காணுமே.

493

நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே

சுற்றிவந்து முணமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா

நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்!

சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

494

நானும்அல்ல நீயும்அல்ல நாதன்அல்ல ஓதுவேன்

வானில்அல்ல சோதிஅல்ல சோதிநம்முள் உள்ளதே

நானும்நீயும் ஒத்தபோது நாடிகாண லாகுமோ?

தானதான தந்தான தாதனான தானனா.

495

நல்லதல்ல கெட்டதல்ல நடுவில்நிற்பது ஒன்றுதான்

நல்லதென்று போதது நல்லதாகி நின்றபின்

நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால்

நல்லதென்ற நாடிநின்று நாமம்சொல்ல வேண்டுமே.

496

பேய்கள்கூடிப் பிணங்கள்தின்னும் பிரியமில்லாக் காட்டிலே

நாய்கள்சுற்ற நடனமாடும் நம்பன்வாழ்க்கை ஏதடா?

தாய்கள்பால் உதிக்கும்இச்சை தவிரவேண்டி நாடினால்

நோய்கள்பட்டு உழல்வதேது நோக்கிப்பாரும் உம்முளே.

497

நம்பன் – பரமேசுவரன்

உப்பைநீக்கில் அழுகிப்போகும் ஊற்றையாகும் உடலில்நீ

அப்பியாசை கொண்டிருக்கல் ஆகுமோசொல் அறிவிலா

தப்பிலிப்பொய் மானம்கெட்ட தடியனாகும் மனமேகேள்;

ஒப்பிலாசெஞ் சடையனாகும் ஒருவன்பாதம் உண்மையே.

498

பிறப்பதெல்லாம் இறப்பதுண்டு பேதைமக்கள் தெரிகிலாது

இறப்பதில்லை எனமகிழ்ந்து எங்கள்உங்கள் சொத்தெனக்

குறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்டகோலம் என்னவோ?

நிறப்பும்பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே.

499

சுட்டெரித்த சாந்துபூசும் சுந்தரப்பெண் மதிமுகத்

திட்டநெட்டு எழுந்தறியாது ஏங்கிநோக்கு மதவலீர்

பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்டம் அறியிரோ?

கட்டவிழ்த்துப் பிரமன்பார்க்கில் கதிஉமக்கும் ஏதுகாண்?

500

வேதம்ஓது வேலையோ வீணதாகும் பாரிலே!

காதகாத தூரம்ஓடிக் காதல்பூசை வேணுமோ?

ஆதிநாதன் வெண்ணெய் உண்டஅவனிருக்க நம்முளே?

கோதுபூசை வேதம்ஏது குறித்துப்பாரும் உம்முளே.

501

பரம்இலாதது எவ்விடம்? பரம்இருப்பது எவ்விடம்?

அறம்இலாத பாவிகட்குப் பரம்இலைஅது உண்மையே;

கரம்இருந்தும் பொருளிருந்தும் அருளிலாத போதது

பரம்இலாத சூனியமாம் பாழ்நரகம் ஆகுமே.

502

மாதர்தோள் சேராததேவர் மானிலத்தில் இல்லையே!

மாதர்தோள் புணர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே,

மாதராகும் சத்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்

மாதராகும் நீலிகங்கை மகிழ்துகொண்டான் ஈசனே.

503

நீலிகங்கை – நீல நிறம் உடைய கங்கை.

சித்தர்என்றும் சிறியர்என்றும் அறியொணாத சீவர்காள்!

சித்தர்இங்கு இருந்தபோது பித்தர்என்று எண்ணுவீர்!

சித்தர்இங்கு இருந்தும் என்ன பித்தன்நாட்டிருப் பாரோ?

அத்தன்நாடும் இந்தநாடும் அவர்களுக்கெலா மொன்றே.

504

மாந்தர்வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே

சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லீரேல்

வேந்தன்ஆகி மன்றுளாடும் விமலன்பாதம் காணலாம்

கூந்தலம்மை கோணல்ஒன்றும் குறிக்கொணாதி துண்மையே.

மன்று – மன்றம்; சபை; விமலன் – மலமற்றவன்

505

சருகு – உதிர்ந்த இலை.

சருகருத்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்!

சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே;

வருவிருந்தோடு உண்டுஉடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்

வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே.

506

காடுமேடு குன்றுபள்ளம் கானின்ஆறு அகற்றியும்

நாடுதேசம் விட்டலைவர் நாதன்பாதம் காண்பரோ?

கூடுவிட்டு அகன்றுன்ஆவி கூத்தனூர்க்கே நோக்கலால்

வீடுபெற்ற அரன்பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே.

507

கட்டையால்செய் தேவரும் கல்லினால்செய் தேவரும்

மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்

சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும்

வெட்டவெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே.

508

தங்கள்தேகம் நோய்ப்பெறின் தனைப்பிடாரி கோயிலில்

பொங்கல்வைத்து ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட

நங்கச்சொல்லு நலிமிகுந்து நாளும்தேய்ந்து மூஞ்சூராய்

உங்கள்குலத்துத் தெய்வம்உம்மை உருக்குலைப்ப தில்லையே.

509

ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை

மோசம்செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்

பூசையோடு நேமநிட்டை பூரிக்கச்செய் பாதகர்

காசினியில் எழுநரகைக் காத்திருப்பது உண்மையே.

510

நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம்

வாசமோடு அணிந்துநெற்றி மைதிலகம் இட்டுமே

மோசம்பொய் புனைசுருட்டு முற்றிலும்செய் மூடர்காள்

வேசரிகளம் புரண்டவெண் ணீறாகும் மேனியே.

511

வாதம்செய்வேன் வெள்ளியும் பொன்மாற்றுயர்ந்த தங்கமும்

போதவே குருமுடிச்சுப் பொன்பணங்கள் தரவெனச்

சாதனைசெய் தெத்திச்சொத்து தந்ததைக்க வர்ந்ததுமே

காததூரம் ஓடிச்செல்வர் காண்பதும் அருமையே.

512

யோகசாலை காட்டுவார் உயரவும் எழும்புவார்

வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்

மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்

பேயது பிடித்தவர்போல் பேருலகில் சாவரே.

513

காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட

மாயவித்தை செய்வதுஎங்கு மடிப்புமோசம் செய்பவர்

நேரமாகக் கஞ்சாஅடித்து நேர்அபினையைத் தின்பதால்

நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே.

514

நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம்என்று

ஊரினில் பறைஅடித்து ஊதாரியாய்த் திரிபவர்

சீரினில் உனக்குஞான சித்திசெய்வேன் பாரென

நேரினில் பிறர்பொருளை நீளவும்கைப் பற்றுவார்.

515

காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்

தாவுருத்தி ராட்சம்யோக தண்டுகொண்ட மாடுகள்

தேவியை அலையவிட்டுத் தேசம்எங்கும் சுற்றியே

பாவியென்ன வீடெலாம் பருக்கைகேட்டு அலைவரை.

516

முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனக்

சத்தியங்கள் சொல்லிஎங்கும் சாமிவேடம் பூண்டவர்

நித்தியம் வயிறுவளர்க்க நீதிஞானம் பேசியே

பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரேல்.

517

செம்மைசேர் மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர்

கொம்மையற்ற கிளையில்பாத குறடுசெய்து அழிக்கிறீர்

நும்முளே விளங்குவோனை நாடிநோக்க வல்லீரேல்

இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே.

518

எத்திசைஎங்கும் எங்கும்ஓடி எண்ணிலாத நதிகளில்

சுற்றியும் தலைமுழுகச் சுத்தஞானி யாவரோ?

பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள்;

முத்திஇன்றி பாழ்நரகில் மூழ்கிநொந்து அலைவரே.

519

கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில்

வல்லதேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடில்

தொல்லைஅற் றிடம்பெரும் சுகந்தருமோ சொல்லுவீர்?

இல்லைஇல்லை இல்லைஇல்லை ஈசன்ஆணை இல்லையே.

520

இச்சகம் சனித்ததுவும் ஈசனைஐந்து எழுத்திலே

மெச்சவம் சராசரங்கள் மேவும்ஐந்து எழுத்திலே

உச்சிதப் பலஉயிர்கள் ஓங்கல்அஞ் செழுத்திலே

நிச்சயமெய்ஞ் ஞானபோதம் நிற்கும்ஐந் தெழுத்திலே.

521

சாத்திரங்கள் பார்த்துப்பார்த்துத் தான்குருடு ஆவதால்

நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்காள்

பாத்திரம் அறிந்துமோன பக்திசெய்ய வல்லீரேல்

சூத்திரப்படி யாவரும் சுத்தர்ஆவர் அங்ஙனே.

522

மனவுறுதி தானிலாத மட்டிப்பிணை மாடுகள்

சினமுறப் பிறர்பொருளைச் சேகரித்து வைத்ததைத்

தினந்தினம் ஊர்எங்கும் சுற்றிதிண்டிக்கே அலைபவர்

இனமதில் பலரும்வையும் இன்பம் அற்ற பாவிகள்.

523

சிவாயவசி என்னவும் செபிக்கஇச் சகம்எலாம்

சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம்

சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம்

சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே.

இந்த | sivavakkiyam full sivavakkiyar 523 songs lyrics tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, சிவன் பாடல்கள், சிவவாக்கியம், சிவவாக்கியர் பாடல்கள் சிவவாக்கியம் : சிவவாக்கியர் பாடல்கள் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago