நத்தார்புடை ஞானம்பசு பாடல் வரிகள் (nattarputai nanampacu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கேதீச்சுரம் தலம் ஈழநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : ஈழநாடு
தலம் : திருக்கேதீச்சுரம்நத்தார்புடை ஞானம்பசு

நத்தார்புடை ஞானன்பசு
ஏறிந்நனை கவுள்வாய்
மத்தம்மத யானைஉரி
போர்த்தமழு வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு
பாலாவியின் கரைமேற்
செத்தாரெலும் பணிவான்றிருக்
கேதீச்சரத் தானே. 1

சுடுவார்பொடி நீறுந்நல
துண்டப்பிறைக் கீளுங்
கடமார்களி யானைஉரி
அணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேற்
திடமாஉறை கின்றான்றிருக்
கேதீச்சரத் தானே. 2

அங்கம்மொழி அன்னாரவர்
அமரர்தொழு தேத்த
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த பிறைசூடினன்
பாலாவியின் கரைமேற்
செங்கண்ணர வசைத்தான்றிருக்
கேதீச்சரத் தானே. 3

கரியகறைக் கண்டன்நல
கண்மேலொரு கண்ணான்
வரியசிறை வண்டியாழ்செயும்
மாதோட்டநன் னகருட்
பரியதிரை எறியாவரு
பாலாவியின் கரைமேல்
தெரியும்மறை வல்லான்றிருக்
கேதீச்சரத் தானே. 4

அங்கத்துறு நோய்களடி
யார்மேலொழித் தருளி
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரிற்
பங்கஞ்செய்த மடவாளொடு
பாலாவியின் கரைமேற்
தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக்
கேதீச்சரத் தானே. 5

வெய்யவினை யாயஅடி
யார்மேலொழித் தருளி
வையம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரிற்
பையேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேற்
செய்யசடை முடியான்றிருக்
கேதீச்சரத் தானே. 6

ஊனத்துறு நோய்களடி
யார்மேலொழித் தருளி
வானத்துறு மலியுங்கடல்
மாதோட்டநன் னகரிற்
பானத்துறும் மொழியாளொடு
பாலாவியின் கரைமேல்
ஏனத்தெயி றணிந்தான்றிருக்
கேதீச்சரத் தானே. 7

அட்டன்னழ காகவரை
தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண் டாலும்பொழில்
மாதோட்டநன் னகரிற்
பட்டவரி நுதலாளொடு
பாலாவியின் கரைமேற்
சிட்டன்நமை யாள்வான்றிருக்
கேதீச்சரத் தானே. 8

மூவரென இருவரென
முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில்
மாதோட்டநன் னகரிற்
பாவம்வினை யறுப்பார்பயில்
பாலாவியின் கரைமேல்
தேவன்னெனை ஆள்வான்றிருக்
கேதீச்சரத் தானே. 9

கறையார்கடல் சூழ்ந்தகழி
மாதோட்டநன் னகருட்
சிறையார்பொழில் வண்டியாழ்செயுங்
கேதீச்சரத் தானை
மறையார்புகழ் ஊரன்னடித்
தொண்டனுரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொலக்
கூடாகொடு வினையே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment