Categories: Murugar Songs

Thirumurugatrupadai songs lyrics | திருமுருகாற்றுப்படை பாடல் வரிகள்

Thirumurugatrupadai songs lyrics

1. திருப்பரங்குன்றம்
உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்
கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொள
உ றுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை (5)

மறுவில் கற்பின் வாணுதல் கணவன்
கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை
வாள்போழ் விசும்பின் வள்ளுறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்
திருள்படப் பொதுளிய பராஅரை மராஅத் (10)

துருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்
மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்
கிண்கிணி கவை அய ஒண்செஞ் சீறடிக்
கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைதோட்
கோபத் தன்ன தோயாப் பூந்துகிற் (15)

பல்காசு நிரைத்த சில்காழ் அல்குற்
கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச்
சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித்
துணையோர் ஆய்ந்த இணையீ ரோதிச் (20)

செங்கோல் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வ உ த்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
திலகந் தைஇய தேங்கமழ் திருநுதன்
மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் (25)

துவர முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகஞ் சொஇக் கருந்தகட்
டுளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செல்வரும்
பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக (30)

வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்
நுண்பூண் அகந் திளைப்பத் திண்காழ்
நடுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்புக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் (35)

வேங்கை நுண்டா தப்பிப் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச் (40)

சூரர மகளிர் ஆடுஞ் சோலை
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பு முசாச் சுடர்ப்பூங் காந்தட்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச் (45)

சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்
உ லறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்
கழல்கட் கூகையோடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்குங் காதிற் பிணர்மோட் (50)

டுருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரற்
கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா (55)

நிணந்தின் வாயள் துணங்கை தூங்க
இருபே குருவின் ஒருபே ரியாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்
மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத் (60)

தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்
சேவடி படருஞ் செம்மல் உ ள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும்
செலவுநீ நயந்தனை யாயிற் பலவுடன்
நன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப (65)

இன்னே பெறுதிநீ முன்னிய வினையே
செறுப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து (70)

மாடமலி மறுகிற் கூடற் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் (75)

அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந் துறைதலும் உ ரியன் அதா அன்று.

2. திருச்சீரலைவாய்
வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வரப்
படுமணி இரட்டு மருங்கிற் கடுநடைக் (80)

கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்
கால்கிளர்ந் தன்ன வேழம் மேல்கொண்
டைவே றுருவிற் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்னுறழ் இமைப்பிற் சென்னிப் பொற்ப (85)

நகைதாழ்பு துயல்வரு உ ம் வகையமை பொலங்குழை
சேண்விளங் கியற்கை வான்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இழைப்பத்
தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்
மன்னோர் பெழுதரு வாணிற முகனே (90)

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உ வந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழா அ (95)

அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கருவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம் (100)

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்கம்
மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின்
ஆரந் தாழ்ந்த அம்பகட்டு மார்பிற்
செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு (105)

வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள
விண்செலன் மரபின் ஐயர்க் கேந்திய தொருகை
உ க்கஞ் சேர்த்திய தொருகை
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇய தொருகை
அங்குசங் கடவா ஒருகை இருகை (110)

ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப ஒருகை
மார்பொடு விளங்க ஒருகை
தாரொடு பொலிய ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒருகை
பாடின் படுமணி இரட்ட ஒருகை (115)

நீனிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை
வானர மகளிர்க்கு வதுவை சூ ட்ட வாங்கப்
பன்னிரு கையும் பாற்பட இயற்றி
அந்தரப் பல்லியங் கறங்கத் திண்தாழ்
வயிரெழுந் திசைப்ப வால்வளை ஞால (120)

உ ரந்தலைக் கொண்ட உ ருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ
விசும்பா றாக விரைசெலன் முன்னி
உ லகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்fச் சேறலும் நிலைஇய பண்பே அதா அன்று (125)

3. திருவாவினன்குடி
சீரை தைஇய உ டுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வானரை முடியினர்
மாசற இமைக்கும் உ ருவினர் மானின்
உ ரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற் (130)

பலவுடன் கழிந்த உ ண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தின ரியாவதும்
கற்றோர் அறியா அறவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினங் கடிந்த காட்சியர் இடும்பை (135)

யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புகப்
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் (140)

நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம் புளர
நோயின் றியன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தோறும்
பொன்னுரை கடுக்குந் திதலையர் இன்னகைப் (145)

பருமந் தாங்கிய பணிந்தேந் தல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்
கடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்
றழலென உ யிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறற்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ் சிறைப் (150)

புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு
வலவயின் உ யரிய பலர்புகழ் திணிதோள்
உ மைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் (155)

வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்
தீரிரண் டேந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உ யர்ந்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய (160)

உ லகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவருந் தலைவ ராக
ஏமரு ஞாலந் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப் (165)

பகலிற் றோன்றும் இகலில் காட்சி
நால்வே றியற்கைப் பதினொரு மூவரோ
டொன்பதிற் றிரட்டி உ யர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன செலவின் வளியிடைத் (170)

தீயெழந் தன்ன திறலினர் தீப்பட
உ ருமிடித் தன்ன குரலினர் விழுமிய
உ றுகுறை மருங்கிற்றம் பெருமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் (175)

ஆவினன்குடி அசைதலும் உ ரியன் அதா அன்று.

4. திருவேரகம்
இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅ
திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்
டாறினிற் கழிப்பிய அறனவில் கொள்கை (180)

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உ டீஇ
உ ச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து (185)

ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
நாவியன் மருங்கின் நவிலப் பாடி
விறையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்
தேரகத் துறைதலும் உ ரியன் அதா அன்று

5. குன்றுதோறாடல்
பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் (190)

அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கட் டேறற (195)

குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர
விரலுளர்ப்ப பவிழ்ந்த வேறுபடு நறுங்காற்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் (200)

முடித்த குல்லை இலையுடை நறும்பூச்
செங்கால் மரா அத்த வாலிணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உ டீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு (205)

செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்தளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டனன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் (210)

கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு
குரும்பெறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி (215)

மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே அதா அன்று.

6. பழமுதிர்சோலை
சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரு ர் கொண்ட சீர்கெழு விழவினும் (220)

ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறியயர் களனும்
காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பும் (225)

மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்
மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவர
நெய்யோ டையவி அப்பி ஐதுரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொள் உ ருவின் இரண்டுடன் உ டீஇச் (230)

செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலை இய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப் பிaIஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தௌiத்துப் (235)

பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையுற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியோ டின்னியங் கறங்க (240)

உ ருவப் பல்பூத் தூஉ ய் வெகுவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகிய நிறுத்து முரணினர் உ ட்க
முருகாற்றுப் படுத்த உ ருகொழு வியனகர்
ஆடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன் (245)

கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட
ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே
ஆண்டாண் டாயினும் ஆக காண்டக (250)

முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக்
கைதொழு உ ப் பரவிக் காலுற வணங்கி
நெடும்பெருஞ் சிமயத்து நீலப்பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ (255)

ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வேல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி
வானோர் வணங்குவில் தானைத் தலைவ (260)

மாலை மார்ப நூலறி புலவ
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ (265)

குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே
அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக
நசையினர்க் காத்தும் இசைபே ராள (270)

அலாந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய்
மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உ ருகெழு நெடுவே எள்
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்
சூர்மருங் கருத்த மொய்ம்பின் மதவலி (275)

போர்மிகு பொருந குரிசில் எனப்பல
யான்அறி அளவையின் ஏத்தி ஆனது
நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உ ள்ளி வந்தனன் நின்னோடு
புரையுநர் இல்லாப் புலமை யோய்எனக் (280)

குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்
வேறுபல் உ ருவிற் குறும்பல் கூளியர்
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி
அளியன் றானே முதுவாய் இரவலன்
வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென (285)

இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்
தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின்
வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்தி
அணங்குசால் உ யர்நிலை தழீஇப் பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி (290)

அஞ்சல் ஓம்புமதி அறிவனின் வரவென
அன்புடை நன்மொழி அளைஇ விளிவின்
றிருள்நிற முந்நீர் வளைஇய உ லகத்
தொருநீ யாகத் தோன்ற விழுமிய
பெறலரும் பரிசில் நல்குமதி பலவுடன் (295)

வேறுபஃ றுகிலின் நுடங்கி அகில்சுமந்
தார முழுமுதல் ஊருட்டி வேரற்
பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரை பரிதியிற் றொடுத்த
தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல (300)

அரசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உ திர யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று (305)

நன்பொன் மணிநிறங் கிளரப் பொன்கொழியா
வாழை முழுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உ திரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் (310)

கோழி வயப்பெடை இரியக் கேழலோ
டிரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூ உ மயி ரியாக்கைக் குடாவடி உ ளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்
டாமா நல்லேறு சிலைப்பச் சேணின் (315)

றிழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே (317)

நேரிசைவெண்பா

குன்றம் எறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய்
புன்றலைய பூதப் பொருபடையாய் – என்றும்
இளையாய் அழகியாய் ஏறு\ர்ந்தான் ஏறே
உ ளையாய்என் உ ள்ளத் துறை. (1)

குன்றம் எறிந்ததுவுங் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் – இன்றென்னைக்
கைவிடா நின்றதுவுங் கற்பொதும்பிற் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல். (2)

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உ ண்டே துணை. (3)

இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்கும்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா – முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும். (4)

உ ன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் – பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தில்வாழ் வே. (5)

அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன். (6)

முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே – ஒருகைமுகன்
தம்பியே நின்னுடையே தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான். (7)

காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா – பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி. (8)

பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம்
கரங்கூப்பிப்க் கண்குளிரக் கண்டு – சுருங்காமல
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல். (9)

நக்கீரர் தாம் உ ரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் – முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான் நினைந்த எல்லாம் தரும். (10)

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

3 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago