Categories: Amman Songs

கனகதாரா ஸ்தோத்திரம் தமிழ் பெயர்ப்பு | kanakadhara stotram tamil version

Kanakadhara stotram Tamil Version இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கனகதாரா ஸ்தோத்திரம் தமிழ் பெயர்ப்பு காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

1.மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ!

மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்

நீலமா மேகம் போல நிற்கின்ற திருமாலுந்தன்

நேயத்தால் மெய் சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!

மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழிஇ ரண்டை

மாதுநீ என்னிடத்தில் வைத்தனை என்றால் நானும்

காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்று

கன்ணிறை வாழ்வு கொள்வேன் கண் வைப்பாய் கமலத்தாயே…!

2 .நீலமா மலரைப் பார்த்து நிலையிலா(து) அலையும் வண்டு

நிற்பதும் பறப்ப தும்போய் நின்விழி மயக்கம் கொண்டு

கோலமார் நெடுமால் வண்ணக் குளிர்முகம் தன்னைக் கண்டு

கொஞ்சிடும் பிறகு நாணும் கோதையார் குணத்தில் நின்று!

ஏலமார் குழலி அந்த இருவிழி சிறிது நேரம்

என்வசம் திரும்பு மாயின் ஏங்கிய காலம் சென்று

ஆலமா மரங்கள் போல அழிவிலாச் செல்வம் கொண்டு

அடியவன் வாழ்வு காண்பேன் அருள்செய்வாய் கமலத்தாயே…!

3. நற்குடி பிறந்த பெண்கள் நாயகன் தனைப் பார்த்தாலும்

நாணத்தால் முகம்புதைத்து நாலிலோர் பாகம் பார்ப்பார்

பற்பல நினைத்தபோதும் பாதிக்கண் திறந்து மூடி

பரம்பரைப் பெருமை காப்பார்

பாற்கடல் அமுதே! நீயும் அற்புத விழிகளாலே

அச்சுத முகுந்தன் மேனி அப்படிக் காண்பதுண்டு

ஆனந்தம் கொள்வதுண்டு

இப்பொழு(து) அந்தக் கண்ணை என்னிடம் திருப்பு தாயே

இருமையும் செழித்து வாழ இகத்தினில் அருள்வாய் நீயே…!

4. மதுஎனும் பெயரில் வாழ்ந்த மனமிலா அரக்கன் தன்னை

மாபெரும் போரில் வென்ற மாலவன் மார்பி லாடும்

அதிசய நீலமாலை அன்னநின் விழிகள் கண்டு

அண்ணலும் காலந்தோறும் ஆனந்தம் கொள்வதுண்டு !

பதுமநேர் முகத்தினாளே! பதுமத்தில் உறையும் செல்வி!

பார்கடல் மயக்கும் கண்ணை பேர்த்தெடுத்தென்மேல் வைத்தால்

பிழைப்பன்யான் அருள் செய்வாயே,

பேரருள் ஒருங்கேகொண்ட பிழையிலாக் கமலத்தாயே…!

5. கைடப அரக்கன் தன்னை கடித்தநின் கணவன் மார்பு

கார்முகில் அன்னந்தோன்றி கருணைநீர் பொழியுங் காலை

மைதவழ் மார்பில் வீசும் மயக்குறும் மின்னல் ஒன்று!

மயக்குவான் திருமால்; பின்னர் மகிழ்வநின் விழிதா னென்று!

செய்தவப் பிருகு வம்சச் சேயெனப் பிறந்து எங்கள்

திருவென வளர்ந்த நங்காய்! தினமும்யாம் வணங்கும் கண்ணாய்

கொய்தெடு விழியை என்மேல் கொண்டு வந்தருள் செய்வாயே

கொற்றவர் பணிகள் செய்யும் கோலமார் கமலத் தாயே..!

6. போரினில் அரக்கர் கூட்டம் புறங்கண்ட நெடியோன் தன்னை

போரின்றிக் குருதியின்றிப் புறங்காணத் துடித்து வந்த

மாரனை ஊக்குவித்த வாளெது கமல நங்காய்

மங்கையின் விழிகளன்றோ! மாலவன் தன்னை வென்ற

தேரிய மாரன் உன்னைத் தேரெனக் கொண்டதாலே

திருமலை வேங்கடேசன் திறத்தினை வென்றான் அன்றோ!

கூரிய விழியாய் உன்றன் குறுவிழி தன்னை என்பால்

கொண்டுவந் தால்யான் உய்வேன் கொடுத்தருள் கமலத் தாயே…!

7. மாந்தருக்(கு) அருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்

இந்திர பதவி கூடும்; இகத்திலும் பரங்கொண் டாடும்;

இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்

சந்திரவதனி கண்கள் சாடையிற் பார்த்தாற் போதும்

தாய்விழிப் பட்ட கல்லும் தரணியில் தங்கமாகும்

எந்தவோர் பதவி வேட்டேன்! எளியனுக்(ககு) அருள் செய்வாயே!

இகத்தினில் செல்வம் தந்து இயக்குவாய் கமலத் தாயே…!

8. எத்தனை பேர்க்குக் கிட்டும் இறையருள் ஆன்மசாந்தி

இகமெனும் கடலில் வீழ்ந்து எவர்பிழைத் தார்கள் நீந்தி

தத்துவப் படியே யாவும் தலைமுறை வழியே கிட்டும்

தவமெனும் முயற்சியாலெ பவவினை தணிந்து போகும்

அத்தனை முயற்சி என்ன அன்ணல்மா தேவி கண்ணில்

அருள்மழை வந்தாற் போதும் அகம்புறம் முக்தி யாகும்

இத்தனை சொன்ன பின்னும் இன்னுமா தயக்கம் தாயே

இல்லத்தைச் செல்வமாக்கி இன்னருள் புரிவாய் தாயே…!

9. நீருண்ட மேகக்கண்கள் நிழலுண்ட கரிய கூந்தல்

நேர்கொண்ட மாந்தர் வீட்டில் நிலைகொண்ட செல்வப் பந்தல்!

சீர்கொண்ட அமுதச்செல்வி சில்லென்ற காற்றுப் பாய்ந்தால்

சேர்கின்ற மேகத் தண்ணீர் சிதறுண்டு பாய்வதைப் போல்

வேர்கொண்ட பாவமேனும் வினைகொண்ட பாவமேனும்

வேய்கொண்ட தோளினாய் உன் விழிகண்டால் தீர்ந்து போகும்!

தேர்கொண்டேன் புரவி இல்லை செல்வமாம் புரவியாலே

திருவருள் செய்வாய் நீயே தேப்பெரும் கமலத்தாயே..!

10. ஆக்கலும் அழித்தல் காத்தல் அருள்நிறை இறைவன் சக்தி

அன்னவன் தோளில் நீயே அனைத்துமாய் விளங்கும் சக்தி

ஆக்கலில் வாணியாவாய்; அளித்தலில் திருவாய் நிற்பாய்

அழிக்கின்ற வேளை வந்தால் அந்தமில் துர்க்கை யாவாய்

தீக்கொண்ட கரத்து நாதன் திருப்பரா சக்தி யாக

திரிபுரம் ஏழுலோகம் திருவருள் புரிந்து நிற்பாய்

வாக்குயர் கமலச் செல்வி வாடைநீ, தென்றல் நீயே

வளமென இரப்போர்க்கெல்லாம் வந்தருள் புரிகின்றாயே..!

11. வேதத்தின் விளைவே போற்றி! வினைப்பயன் விளைப்பாய் போற்றி

சீதத்தா மரையே போற்றி! செம்மைசேர் அழகே போற்றி

கோதைப்பண் புடையாய் போற்றி ! குளிர்ந்ச்தமா மழையே போற்றி

ஓர்தத்துவத்தில் நிற்கும் உமையவள் வடிவே போற்றி

பாதத்தைக் கமலம் தாங்கப் பல்லுயிர் காப்பாய் போற்றி

நாதத்து நெடியோன் கொண்ட நங்கை நீ போற்றி போற்றி

பாதத்தில் சிரசை வைத்துப் பணிகின்றேன் போற்றி போற்றி

மாதத்தில் ஒருநாள் கூட மறந்திடாய் போற்றி போற்றி…!

12. அன்றலர் கமலம் போன்ற அழகிய வதனி போற்றி

அலைகடல் அமுதமாக அவதரித் தெழுந்தாய் போற்றி

குன்றிடா அமுதத்தோடு கூடவே பிறந்தாய் போற்றி

குளிர்ந்தமா மதியினோடும் குடி வந்த உறவே போற்றி

மன்றத்து வேங்கடேசன் மனங்கவர் மலரே போற்றி

மாயவன் மார்பில் நின்று மயிலெனச் சிரிப்பாய் போற்றி

என்றைக்கும் நீங்காதாக இருக்கின்ற திருவே போற்றி

எளியவன் வணங்குகின்றேன் இன்னருள் போற்றி போற்றி…!

13. தாமரை மலரில் நிற்கும் தளிரன்ன திருவே போற்றி

தாமரை வதனங் கொண்ட தங்கமா மணியே போற்றி

தாமரை கரத்தில் ஏந்தித் தவமென நிற்பாய் போற்றி

தாமரைக் கண்ணன் காக்கும் தரணியைக் காப்பாய் போற்றி

தாமரை போலே வந்த தவமுனி தேவர்க்கெல்லாம்

தாமரைக் கைகள் காட்டி தயைசெயும் திருவே போற்றி

தாமரைக் கண்ணால் செல்வம் தந்தருள் புரிவாய் போற்றி

தாள், மறை, நானோ வார்த்தை; தர்மமே போற்றி போற்றி..!

14. பெண்ணெனப் பிறந்தாயேனும் பெரும்திறன் கொண்டாய் போற்றி

பிருகுவம் சத்தில் வந்த பீடுடை வதனம் போற்றி

தண்ணளி வேங்கடத்தான் தழுவிடும் கிளியே போற்றி

தத்துநீர்க் குளத்தில் ஆடும் தருணியே லக்ஷ்மீ போற்றி

சித்திரக் கொடியே போற்றி! செம்மணி நகையே போற்றி

ஸ்ரீதரன் திருப்பா தங்கள் சேவைசெய் குயிலே போற்றி

பத்தினிப் பெண்டிர் தம்மைப் பார்வையில் வைப்பாய் போற்றி

பக்தருக்(கு) அருள்வாய் போற்றி! பணிந்தனம் போற்றி போற்றி..!

15. கண்களைப் பறிக்கும் காட்சி கவிந்தநின் வடிவம் போற்றி

கமலப்பூ வதனம் போற்றி! கமலமா விழிகள் போற்றி

மண்ணிலும் விண்ணு ளோர்க்கும் மங்கலம் நிறைப்பாய் போற்றி

மண்டல இயக்கத் திற்கே மந்திர(ம்) ஆனாய் போற்றி

விண்ணவர் வணங்கும் தேவி விந்தையின் மூலம் போற்றி

விரிமலர் கண்ணன் தேவன் விரும்பிடும் நகையே போற்றி

எண்ணிய படியே உன்னை ஏத்தினேன் போற்றி போற்றி

இசைபட வாழ வைப்பாய் இலக்குமி போற்றி போற்றி…!

16. மைவழிக் குவளக் கண்ணாய் வரையிலாத் திருவே போற்றி

வானவர் மண்ணோர்க் கெல்லாம் வணக்கமாய் நின்றாய் போற்றி

மெய்வழி செவிவாய் நாசி விழைந்திடும் இன்பம் போற்றி

விரித்தமேற் புலனுக்கெல்லாம் விளங்காத பொருளே போற்றி

கைநிறை செல்வம்யாவும் கடைக்கணால் அருள்வாய் போற்றி

காக்கையை அரசனாக்கும் கைமலர் உடையாய் போற்றி

செய்ததீ வினையை எல்லாம் தீர்க்கின்ற நெருப்பே போற்றி

சிறுமையைப் பெருமை யாக்கும் திருப்பதம் போற்றி போற்றி…!

17. மோகனன் துணையே போற்றி ! முழுநில வடிவே போற்றி

மூவுலகங்கள் தேடும் முதற்பெரும் பொருளே போற்றி

தேகத்தே ஒளியை வைத்த செம்மணிக் குன்றே போற்றி

தீராத ஆசைக் குள்ளே திருவென நிற்பாய் போற்றி

ஓர்கணம் தொழுதாற் கூட ஓடிவந் தளிப்பாய் போற்றி

ஊர்ந்தமா மேக வண்ணன் உவப்புறச் சிரிப்பாய் போற்றி

தாள்களில் பணிந்தேனம்மா தண்ணருள் தருவாய் போற்றி

தலைமுதல் பாதம் மட்டும் தாழ்கின்றேன் போற்றி போற்றி…!

18. கண்பட்டால் மனது பாடும் கார்குழல் அலையே போற்றி

காதள வோடும் கண்ணால் காசினி அளந்தாய் போற்றி

வெண்பட்டால் அழகை மூடும் வியத்தகும் சிலையே போற்றி

வெண்மல்லி கைப்பூ மாலை விளையாடும் தோளீ போற்றி

பண்பட்டார் இல்லா தார்தம் பக்குவம் அறிவாய் போற்றி

பணிப்பவர் இதயத் துள்ளே பாசுரம் படிப்பாய் போற்றி

விண்முட்டும் ஞானம் பெற்ற வேதநா யகியே போற்றி

வேயிரு தோளின் சக்தி விரித்தருள் போற்றி! போற்றி…!

19. மண்டலத் திசைகள் தோறும் மதகரி குடங்கள் ஏந்தி

மங்கைக்கு நன்னீராட்ட கங்கை நீர் குடத்தில் மாந்தி

தண்டலக் கூந்தல் ஊற சர்வமங்கள நீ ராட்டி

தாமரைப் பூவின் மேலோர் தாமரைப் பூவைச் சூட்டி

மண்டிய தூய்மைத் தாய்க்கு மற்றுமோர் தூமை நல்கி

மறுவிலாப் பளிங்கின் மேனி மாசறத் துலங்கச் செய்யும்

அண்டமா நெடியோன் தேவீ, அலைகடல் அரசன் பெண்ணே

அரிதுயின் கொள்ளும் காலை அடியவன் வணங்குகின்றேன்…!

20. பூவினில் உறையும் பூவே! பொன்னிடை உறையும் பொன்னே

பூஜைக்கே உரியோன் பூஜை புரிகின்ற காதற் செல்வீ

ஏவுமோர் உலகத்துள்ளே இன்மையோன் ஒருவனே தான்

இவனுனை இரந்தி நிற்க இதுவொரு நியாயம் போதும்

தாவுநீர்க் கடலை போல தண்ணருள் அலைகள் பொங்கும்

சநிதிரப் பிறைப் பூங்கண்ணி சற்று நீ திரும்பிப் பார்த்தால்

மேவிய வறுமை தீர்ப்பேன்; மெல்லிடைப் பூங்கோதாய், நின்

மின்னிடும் விழிகள் காண விழைந்தனேன் போற்றி போற்றி..!

21. முப்புவி ஈன்ற தாயே, மோகனச் சிரிப்பின் செல்வி

மூவிரண்டொன்றாய் வந்த பிரமத்தின் மொத்தமாக

அற்புதம் காட்டி நிற்கும் அழகிய சிற்பச் சோதி

ஆனந்தத் தெய்வமாதா அரும்பெறல் அன்னை பேரில்

இப்பொழுதுரைத்த பாடல் எவரெங்கு பாடினாலும்

இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் செரும்

நற்பெரும் பேறும் கிட்டு! நன்னிலை வளரும் என்றும்

நாட்டுக்கே ஒருவராக நாளவர் உயர்வார் உண்மை..!

============

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய‌ கனகதாரா ஸ்தோத்திரம் பலன்கள் | Kanakadhara stotram Benefits

ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை மகாலட்சுமியை வணங்கி தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் படித்து வந்தால் லட்சுமி தேவியின் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.

சமஸ்கிருத ஸ்தோத்திரத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்: வாரஸ்ரீ. சமஸ்கிருத ஸ்லோகங்களை பொருள் சிதையாதபடி மிக கவனமாகவும், அதே சமயத்தில் தமிழ் கவிதை சந்தம் குறையாதபடி மிக சுவையாகவும் மொழிபெயர்த்துள்ளார்.

கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் நல்லருள் கிடைக்கும். நாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால் நம் வாழ்வு வறுமையில்லாமல் வளமான வசதிகளுடனும். எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக இருக்கும் என்பது உறுதி..!

இந்த கனகதாரா ஸ்தோத்திரம் தமிழ் பெயர்ப்பு | kanakadhara stotram tamil version பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Lakshmi Devi Songs, லக்ஷ்மி தேவி பாடல்கள், 108 போற்றிகள், Ashtothram கனகதாரா ஸ்தோத்திரம் தமிழ் பெயர்ப்பு கனகதாரா ஸ்தோத்திரம் தமிழ் பெயர்ப்பு போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago